Last Updated : 05 Jul, 2019 11:39 AM

 

Published : 05 Jul 2019 11:39 AM
Last Updated : 05 Jul 2019 11:39 AM

‘இது நம்மஆளு’ ஷூட்டிங்ல பாலகுமாரனைப் பாத்து பிரமிச்சேன்’’ - கே.பாக்யராஜ் பேட்டி

‘’ ‘இது நம்மஆளு’ ஷூட்டிங்ல எழுத்தாளர் பாலகுமாரனைப் பாத்து பிரமிச்சேன். அவரைப் பாக்க ஏகப்பட்ட பெண்கள் வந்திருந்தாங்க. மனோரமா ஆச்சியே, ‘நான் பாலகுமாரன் எழுத்துக்கு அடிமை’ன்னு சொன்னாங்க’’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் வியப்புடன் தெரிவித்தார்.

எழுத்தாளர் பாலகுமாரன்  குறித்த ஆவணப்படத்தை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளம் தயாரித்தது. இதில் பாலகுமாரன் குறித்து, நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ்  பிரத்யேகமாகப் பேட்டியளித்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

‘இது நம்ம ஆளு’ படத்துக்கு நான் டைரக்‌ஷன் மேற்பார்வை. எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கம். அவருடைய எழுத்து எவ்வளவு வலிமையானது என அப்போதுதான் பார்த்தேன். ஷூட்டிங்கில், மனோரமா ஆச்சி, விறுவிறுன்னு எங்கிட்ட ஓடி வந்தார். ‘பாலகுமாரன் சார்தான் டைரக்‌ஷனாமே. நான் நீங்கதான் பண்றீங்கன்னு நெனைச்சிட்டிருந்தேன். எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. நான் அவரோட ரசிகை. பாலகுமாரன் எழுத்துக்கு நான் அடிமை’ன்னு உணர்ச்சிவசப்பட்டு  சொன்னாங்க மனோரமா ஆச்சி. எனக்கு வியப்பா இருந்துச்சு. ஒரு பிஸியான நடிகை, பாலகுமாரன் எழுத்துகளால ஈர்க்கப்பட்டிருக்காங்கன்னு நினைச்சேன்.

அடுத்தது, ஷூட்டிங் ஸ்பாட்ல, ஏகப்பட்ட பெண்கள் கூட்டம். சரி, நமக்குத்தான் லேடீ ஸ் கூட்டம் அதிகமா இருக்குமேன்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, ஷூட்டிங் முடிஞ்சதும் எல்லாரும் பாலகுமாரனை சூழ்ந்துக்கிட்டாங்க. ‘உங்க அந்தக் கதை எனக்குப் பிடிக்கும்’, ‘இந்தக் கதை ரொம்பப் பிடிக்கும்’னு ஒவ்வொருத்தரும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இதுவும் எனக்கு வியப்பா இருந்துச்சு.  பாலகுமாரனுக்கு வாசகர்கள் அதிகம். அதிலும் பெண் வாசகர்கள் ரொம்பவே அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அதை அன்னிக்கிதான் நேர்ல பாத்துத் தெரிஞ்சிக்கிட்டேன்.

அவரோட மனைவிக்கு உடல்நிலை சரியில்லைன்னு பாக்கப் போயிருந்தேன். ஆறுதலா அவர்கிட்ட பேசிட்டிருந்தப்ப பாலகுமாரன் சொன்னதுதான் இன்னும் ஆச்சரியம். ‘இதுவொரு சுகமான வலி சார். ஜென்மம் முழுக்க நமக்கு மனைவி பணிவிடை பண்ணிக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்கு பணிவிடை பண்றதுக்கு, ஒவ்வொருத்தருக்கும் இப்படியொரு தருணம் கிடைக்கணும். ஒருபக்கம் வலி இருக்கு. ஆனாலும் மனைவியை ஒரு குழந்தையைப் போல பாக்கறதுல ஒரு நிம்மதியும் நிறைவும் இருக்கு’ன்னு சொன்னாரு.

எவ்வளவோ புத்தகங்கள் எழுதியிருக்கார் பாலகுமாரன். அந்தப் புத்தகங்கள், காலங்கள் கடந்தும் நிக்கிற படைப்புகள். அந்தப் படைப்புகள் மூலமா, பாலகுமாரன் இன்னும் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கார்; வாழ்ந்துகிட்டுதான் இருப்பார்.

இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

- இன்று (ஜூலை 5ம் தேதி) எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்தநாள்

 

என்றென்றும் எழுத்துச்சித்தர் ஆவணப் படத்தைக் காண... 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x