Last Updated : 08 Jul, 2019 02:11 PM

 

Published : 08 Jul 2019 02:11 PM
Last Updated : 08 Jul 2019 02:11 PM

விஜய் சேதுபதியின் மாமனிதன் வெளியீடு எப்போது? - சீனு ராமசாமி தகவல்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்' படத்தின் வெளியீடு எப்போது என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில், ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், நான்காவது முறையாக ‘மாமனிதன்’ படத்தில் இணைந்துள்ளது விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி. இந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து யுவன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், "விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் யுவன் தயாரித்து வரும் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செப்டம்பர் அல்லது அக்டோபரில் படம் வெளியாகும்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடிப்பில் 'மாமனிதன்', 'கடைசி விவசாயி', 'சங்கத்தமிழன்', 'லாபம்' உள்ளிட்ட படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை அனைத்துமே இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x