Published : 06 Jul 2019 03:31 PM
Last Updated : 06 Jul 2019 03:31 PM

500 அடி போஸ்டர் ஒட்டி மதுரையை அமர்க்களப்படுத்திய சிம்பு ரசிகர்கள்

நடிகர் சிம்பு திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

'மதுரை சிட்டி STR வெறியர்கள்' என்ற பெயரில் மதுரையில் ரசிகர் மன்றம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மன்றத்தில் 300-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

இவரள், சிம்பு புதுப்பட ரிலீஸ், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

தற்போது சிம்புவின் திரையுலக பயணத்தின் 35 ஆண்டு வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி அசத்தியிருக்கிறார்கள்.

இதுபற்றி மதுரை சிட்டி எஸ்டிஆர் வெறியர்கள் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் வினோத் கூறுகையில், ”கமல்ஹாசன் எத்தனை படங்கள் நடத்திருந்தாலும் அவரின் ’களத்தூர் கண்ணம்மா’ படம்தான் முதல்படம் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானதால் அவருடைய முதல் படமாகக் கருதப்படுகிறது. அதுபோல் சிம்பு ’உறவைக் காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுதான் அவரின் முதல் படம். அந்த வகையில் அவர் சினிமாவுக்கு வந்து 35 ஆண்டுகளாகிறது. அந்த சாதனையைக் கொண்டாடும் வகையில் சிம்புவுக்காக முதல் முறையாக சிம்புவுக்காக 500 அடி நீள போஸ்டர் ஒட்டியுள்ளோம்.

இதற்கு முன்னதாக விஜய்க்கு 440 அடியில் போஸ்டர் ஒட்டி அவருடைய ரசிகர்கள் கவனம் ஈர்த்தனர்.  அதைவிட பிரம்மாண்டமாக இருக்கட்டும் என 500 அடியில் போஸ்டர் ஒட்டியுள்ளோம். சிம்புவைப் போல் ரசிகர்களை மதிக்கும் ஹீரோ இருக்கவே முடியாது. அந்த மனசுக்காகத்தான் இந்தப் போஸ்டர்.

இன்று காலையில் இருந்தே நிறைய பேர் என்னிடம் இந்த போஸ்டருக்கு எவ்வளவு செலவானது எனக் கேட்கிறார்கள். செலவைப் பற்றி பேச விரும்பவில்லை. எங்கள் தலைவரின் மனசுக்கு முன்னாடி இது ஒன்றுமில்லை.

சிம்புவைப் போல் சினிமாத்துறையில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ஹீரோ இருக்க முடியாது. அத்தனைக்கும் இடையேயும் அவர் துணிச்சலுடன் வேலை செய்கிறார். 

நாங்கள் போஸ்டர் ஒட்டும் பணியை மட்டும் செய்யவில்லை. எங்கள் தலைவராக சிம்புவைக் கருதுகிறோம். எங்கள் குழுவில் இருக்கும் 350 பேருமே அவ்வப்போது ரத்த தானம் செய்கிறோம். முதியவர்களுக்கு உதவுகிறோம். எங்களால் இயன்ற சின்னச்சின்ன உதவிகளை எல்லாம் சமூகத்துக்காக செய்கிறோம். நாங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல பொறுப்பான இளைஞர்களும்கூட" என்றார்.

”போஸ்டருக்கு செலவழித்த காசையும் சமூக சேவைக்கு பயன்படுத்தியிருக்கலாமே” என்ற கேள்விக்கு “செலவைப் பற்றி கேட்காதீர்கள். எங்கள் தலைவருக்காக அதை செய்கிறோம். தலைவரையும் கொண்டாடுவோம் சேவையும் செய்வோம்” என்றார் வினோத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x