Last Updated : 11 Jul, 2019 11:52 AM

 

Published : 11 Jul 2019 11:52 AM
Last Updated : 11 Jul 2019 11:52 AM

எங்க கல்யாணத்தை சிவாஜிதான் நடத்திவைச்சார்’’ - எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி

’’எங்க கல்யாணத்தை சிவாஜிதான் நடத்திவைச்சார்’’ என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ இணையதளத்துக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைப் பேட்டி எடுத்திருந்தார்.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம், நான் பிறந்த ஊர். நெல்லை பாளையங்கோட்டையில் படிக்கச் சென்ற போதே, எழுத்தின் மீது ஆசை வந்துவிட்டது. அதற்கு கலைஞரின் எழுத்து ஈர்த்ததுதான் காரணம். சென்னைக்கு ஓடிவந்தேன். பிறகு என் அண்ணன், என்னை மீண்டும் படிக்க அனுப்பிவைத்தார். அதன் பிறகு மீண்டும் ஓடிவந்தேன். அதையடுத்து என் அண்ணன், சென்னையில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். ‘வேலையில் இருந்துகொண்டே, நாடகம் போடு’ என்றார். அப்படி நான் எழுதிய நாடகம்தான் ‘பிஞ்சுமனம்’. நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, வாஹினி ஸ்டூடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த நீலகண்டன், அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கே உள்ள போர்ஷனில் என்னை குடிவைத்தார். அதேபோல் இயக்குநர் டி.என்.பாலு என்னைச் சேர்த்துக்கொண்டார்.

கே.எஸ்.பிரகாஷ்ராவ் சிவாஜியை வைத்து இயக்கிய ‘வசந்தமாளிகை’ படத்துக்கு உதவியாளராகப் பணியாற்றினேன். பாலமுருகன் வசனம். அந்த வசனத்தை சிவாஜி சாருக்கு நான் தான் படித்துக் காட்டுவேன். ‘என்னடா இது, உணர்ச்சியே இல்லாமப் படிக்கிறே. நீ படிக்கறதைக் கேட்டுட்டுத்தானே, அதுக்கு தகுந்த மாதிரி நான் நடிக்கமுடியும்’ என்று சொன்னார். அதன் பிறகு காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, வசனத்தை பேசிப்பேசிப் பார்த்துக் கொள்வேன். பிறகுதான் சிவாஜி சாருக்கு படித்துக் காட்டுவேன். இதனால் சிவாஜி சாருக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது.

அதன் பிறகு  ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில், ‘பட்டாக்கத்தி பைரவன்’ படத்தில் பணியாற்றினேன். அப்போது, என் வீட்டில் எனக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கோ நீலகண்டனின் மகளான ஷோபாவை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம். அவரும் விரும்பினார். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மா ஒத்துக்கொள்ளவே இல்லை.

நேராக சிவாஜி வீட்டுக்குச் சென்றேன். ‘அண்ணே... நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீங்கதான் தாலியெடுத்துக் கொடுக்கணும்’ என்றேன். எல்லாக் கதையையும் கேட்டார். ‘நான் வேணாம்டா. கமலாவை தாலியெடுத்து தரச்சொல்லு. நல்லா இருப்பீங்க’ என்றார். அதன்படியே இருவரும் வந்து நடத்திக் கொடுத்தார்கள். கல்யாணச் செலவை ராஜேந்திர பிரசாத் சார்தான் பார்த்துக்கொண்டார்.

ஒரு உதவி இயக்குநருக்கு, இவ்வளவு தடபுடலாக திருமணம் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. கல்யாணமான இரண்டாம் நாள், ஊட்டியில் நடந்த படப்பிடிப்புக்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் கோபமானார் சிவாஜி. ‘என்னடா இது. ஏன் இப்ப்போ வந்தே?’ என்று திட்டினார். புரொடக்‌ஷன் மேனேஜரை அழைத்தார். ‘என்ன பண்ணுவியோ தெரியாது. இவன் பொண்டாட்டி, இன்னிக்குள்ளே இங்கே வந்திருக்கணும்’ என்றார். அதன்படியே ஷோபாவை அழைத்து வந்தார்கள். அந்த அளவுக்கு சிவாஜி அண்ணன், என் மேல அவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருந்தார்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x