Last Updated : 02 Jul, 2019 05:13 PM

 

Published : 02 Jul 2019 05:13 PM
Last Updated : 02 Jul 2019 05:13 PM

பேய்ப்படம் என்றால், நடிப்பதையே விட்டு விடுகிறேன்: சந்தீப் கிஷன் ஓபன் டாக்

'கண்ணாடி' படத்தை பேய்ப்படம் என்று யாராவது கூறினால் நடிப்பதையே விட்டு விடுகிறேன் என்று  சந்தீப் கிஷன் தெரிவித்தார்.

கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்ணாடி'. வி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் இசையமைப்பாளர் தமன், ஆனந்த்ராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட சிலரைத் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் நாயகன் சந்தீப் கிஷன் பேசும் போது, “நான் நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகியுள்ளன. முன்பெல்லாம் ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்குச் செல்லும்போது ஆர்வமாக இருக்கும். ஆனால் இப்போது பயமாக இருக்கிறது. மற்றவர்கள் எப்படியோ தெரியாது.

நான் எனக்காக படம் நடிக்க வில்லை. மக்களுக்காக மட்டும்தான் படம் நடிக்கிறேன். அவர்களுக்குப் படம் பிடிக்க வேண்டும். இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'மாநகரம்' படம் வெளியான போது  ஒரு ஆட்டோக்காரர் என்னிடம் “வொர்த்தான படம், குடும்பத்தோடு பார்த்தேன்” என்று பாராட்டினார். இதற்காகத்தான் இவ்வளவு போராடுகிறோம்.

இதே இடத்தில் போன வருடம் 'நரகாசுரன்' படத்துக்காக வந்திருந்தேன். ஆனால் இன்னும் படம் வரவில்லை. 'மாயவன்' என்று ஒரு படம் நடித்தேன். அது வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ஆனால் ஆன்லைனில் பார்த்துவிட்டுப் பலரும் பாராட்டினார்கள்.

இவ்வளவு கஷ்டப்படுவது மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதில் சுயநலம் இல்லை என்று சொல்லமுடியாது. எங்களுக்குப் பெயர் கிடைக்க வேண்டும், படம் நல்லபடியாகப் போக வேண்டும் என்ற சுயநலம் உள்ளது.

 உண்மையிலேயே 'கண்ணாடி' என்ற நல்ல படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்துக்காக பயங்கரமாகப் போராடிவிட்டோம். சிறிய சிறிய காட்சிகளைக் கூட நன்றாக வரவேண்டும் என்று திரும்ப எடுத்துள்ளோம்.

இங்கே யார் படம் எடுக்க வந்தாலும் இரண்டு மொழிகளில் எடுக்கலாம் என்றுதான் வருகிறார்கள். அனைத்துப் படங்களையும் இரண்டு மொழிகளிலும் எடுக்க முடியாது. 'மாயவன்' படத்தின் உரிமையை தெலுங்கில் யாரிடமோ விற்றுவிட்டார்கள். அந்த ஆள் தயாரிப்பாளருக்கு காசும் கொடுக்காமல் ப்ரஸ்மீட் வைத்து ”நாயை வைத்து வேண்டுமானாலும் படம் எடுங்கள். ஆனால் சந்தீப் கிஷனை வைத்து மட்டும் படம் எடுக்காதீர்கள்” என்று கூறிவிட்டார். அவர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. அவர் மீது ஒன்பது வழக்குகள் உள்ளன. இதெல்லாம் எனக்குத் தேவையா? இப்போதுதான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு என் படம் ரிலீஸ் ஆகிறது.

இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ஒரு பேய் அல்லது ஒரு நாய் இருக்கிறது. இது இரண்டிலுமே நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். யாருமே அடல்ட் காமெடி படம் பண்ணாமல் இருந்தபோது நான் ‘யாருடா மகேஷ்’ படத்தில் நடித்தேன். இப்போது எல்லாரும் அதில் நடிக்கும்போது நான் பண்ணமாட்டேன் என்றேன். அதேபோல இப்போது பேய்ப்படம் நடிக்க மாட்டேன் என்கிறேன். ஆனால, இது பேய்ப்படம் இல்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாராவது இதை பேய்ப்படம் தான் என்று சொல்லிவிட்டால் நான் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று பேசினார் சந்தீப் கிஷன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x