Last Updated : 05 Jul, 2019 10:43 AM

 

Published : 05 Jul 2019 10:43 AM
Last Updated : 05 Jul 2019 10:43 AM

பாலகுமாரனின் எழுத்தில் அனுபவம், வாழ்வியல்!’’ - கவிஞர் வைரமுத்து

’’பாலகுமாரனின் புகழ் பன்னெடுங்காலம் தொடர்ந்துகொண்டே இருக்கும்’’ என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

எழுத்தாளர் பாலகுமாரன்  குறித்த ஆவணப்படத்தை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளம் தயாரித்தது. இதில் பாலகுமாரன் குறித்து, கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாவது:

சாதாரண உரைநடை, வாசிப்புக்குப் பயன்படும். ஆனால் கவிதையுடன் கூடிய உரைநடை, மறு வாசிப்புக்கும் பயன்படும். எழுத்தாளர் பாலகுமாரனின் எழுத்துகள், மறுபடியும் மறுபடியும் வாசிப்பதற்கான படைப்புகள். அந்தப் படைப்புகளால், பாலகுமாரனின் புகழ் பலகாலமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

பாலகுமாரனின் கதைகளில் வரும் பாத்திரங்கள், அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும் . பொதுவாகவே, அவருடைய பாத்திரங்கள், பேசிக்கொண்டிருக்கும். அதன் மூலமாக, பாலகுமாரன் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார்.

ஒருமுறை அவரிடம், ‘உங்கள் கதைகளின் உள்ளீடு என்ன?’ என்று கேட்டேன். அதற்கு பாலகுமாரன் ‘பெண்களைப் புரிந்துகொள்வதுதான்’ என்று பதிலளித்தார். ‘அதென்ன அவ்வளவு கடிதா?’ என்று கேட்டேன். ‘கடலாழம் கூட காணலாம். பெண்ணின் மன ஆழம் காணமுடியாது கவிஞரே’ என்று பதிலளித்தார். ‘அதனால்தான் என் கதைகளின் உள்ளீடாக இந்த விஷயத்தைத் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

பாலகுமாரனின் உரையாடல் தனி ரகம். மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவருடைய உரையாடலில், ஞானத்தெறிப்பு இருக்கும். அனுபவச் செழிப்பு இருக்கும். வாழ்வியலின் நிழலாக அந்த உரையாடல் இருக்கும். அந்த வாழ்வியல், இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் பலகாலங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதுதான் பாலகுமாரன் எனும் எழுத்தாளனின் எழுத்து செய்திருக்கிற ஜாலம்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

இன்று (ஜூலை 5ம் தேதி எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்தநாள்)

என்றென்றும் எழுத்துச்சித்தர் வீடியோவைக் காண...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x