Published : 29 Jun 2019 11:03 AM
Last Updated : 29 Jun 2019 11:03 AM

நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும், மழைநீரைச் சேமிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் நடைபெற்று வருகிறது. முதல் ஷெட்யூல் முடிவடைந்து, இரண்டாவது ஷெட்யூலும் மும்பையில் நடைபெற்று வந்தது.

தற்போது மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. புனேயில் அடுக்குமாடிக் குடியிருப்பின் சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்ததில் 15 பேர் பலியாகினர். எனவே, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், மும்பையில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினி, “குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கக் களமிறங்கியுள்ள ரசிகர்களை நான் பாராட்டுகிறேன், மனமார வாழ்த்துகிறேன். அவர்கள் பண்ணிக்கொண்டு இருப்பது ரொம்ப நல்ல விஷயம். இந்த விஷயங்களை நீண்ட நாட்களாகவே பண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இப்போதுதான் வெளியில் தெரிகிறது.

ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எல்லா நீர்நிலைகளையும் தூர்வாருங்கள். மழை வருவதற்கு முன்னால் எல்லாவற்றையும் தயார்செய்து கொள்ள வேண்டும். மழைநீரைச் சேமிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் அதைச் செய்ய வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பதற்கான தபால் வாக்குச்சீட்டு எனக்கு சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. வாக்களிக்க முடியாதது நிச்சயமாக எனக்கு வருத்தம்தான். எங்கோ தவறு நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

‘தர்பார்’ படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்க, மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சுனில் ஷெட்டி, ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், யோகி பாபு, ஆனந்த் ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x