Last Updated : 17 May, 2017 12:13 PM

 

Published : 17 May 2017 12:13 PM
Last Updated : 17 May 2017 12:13 PM

விவேகம் அப்டேட்: விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

'விவேகம்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வந்தது.

மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படியே பல்கேரியாவில் காட்சிப்படுத்த வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. சென்னையில் இன்னும் ஒரு சில காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால், இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

மேலும், விநியோக உரிமையை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 5 கோடி முதலீட்டுக்கு மேல் உள்ள படங்களைத் தனித்தனியாக தான் விநியோக உரிமையை விற்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தமிழக உரிமையை விற்கக் கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், 'விவேகம்' படத்தின் விநியோக உரிமையை தனித்தனியாக விற்று வருகிறார்கள். இதனால் ஏரியா உரிமையை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட 'விவேகம்' படத்தின் டீஸர் இணையத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x