Last Updated : 31 Aug, 2017 08:06 PM

 

Published : 31 Aug 2017 08:06 PM
Last Updated : 31 Aug 2017 08:06 PM

விமர்சனம் என்பது தனிப்பட்ட கருத்தே: விஜய் சேதுபதி

விமர்சனம் என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துதான் என்று 'கருப்பன்' பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசினார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கருப்பன்'. விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

இன்று (ஆகஸ்ட் 31) இசை வெளியீடு இருந்ததை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அச்சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியதாவது:

'ரேணிகுண்டா' படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தை கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார் இயக்குனர் பன்னீர் செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது. இப்படத்தில் கூட ஒரு முதலிரவுப் பாடலை மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார். நான் பழகியதில் இதுநாள் வரை ஒருவரைப் பற்றி கூட பன்னீர் செல்வம் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர்.

ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி எடுத்துச் செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏஎம் ரத்னம். இந்தப் படத்துக்கு வழக்கமான வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவனும் என் நண்பன் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தான்.

’சங்குத்தேவன்’ படம் கைவிடப்பட்டதில் எனக்கு பெரும் வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்செயலாக அதே இடத்தில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர்.

என் கருத்தை எந்த இயக்குநரிடம் நான் திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும். அதனால் அவர்கள் இயக்குநரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது.

படம் பார்த்து விமர்சனம் என்பது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துதான். 'கருப்பன்' மூலமாக நாங்கள் ஒரு கருத்தைத்தான் சொல்லியிருந்தாலுமே, இது சரி, இது தவறு என்று சொல்லவில்லை. விமர்சனத்தை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை. ஏனென்றால் ஊர் வாயை மூட முடியாது. அது கடினம். யாராக இருந்தாலுமே, அவர்கள் சொல்வது கருத்து மட்டுமே என நம்புகிறேன். கண்டிப்பாக படம் இயக்குவேன். ஆனால், அதற்கான அறிவு வந்தவுடன்தான் நடக்கும்.

அதிகமாக படம் நடிக்கும் நடிகர் என்கிறார்கள். அவர்களுக்கு 'விக்ரம் வேதா' படத்தில் ஒரு வசனம் இருக்கும். கோட்டுக்கு அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்று இருக்கும். ஆனால், இங்கு மொத்தமாக வட்டமாக தான் பார்க்கிறேன். நானும் நடிகர்கள் என்ற வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறேன். பல படங்கள் ஒப்புக் கொண்டதால் நடக்கிறது.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x