Published : 01 Aug 2017 04:47 PM
Last Updated : 01 Aug 2017 04:47 PM

அட்சராவை பார்த்து கமல் விசிலடிப்பார்: கபிலன்வைரமுத்து நேர்காணல்

கபிலன்வைரமுத்து. 18 வயதில் தனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர். இன்று பல பல்கலைக்கழகங்களில் இவரது கவிதைகளும், நாவல்களும் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றன. மென்பொருள் வல்லுநராக இருந்து பிறகு ஊடகத்துறைக்கு வந்தவர். ‘கவண்’ படம் மூலம் தன் கதை, திரைக்கதை, வசன பயணத்தை தொடங்கியவர்.இன்று ‘விவேகம்’ படத்தின் எழுத்தாளர் - பாடலாசிரியர். அவருடன் ஒரு நேர்காணல்..

‘கவண்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு நீங்கள் எதிர்பார்த்ததா?

கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி, வணிகரீதியாகவும் ‘கவண்’ வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இது இயக்குநர் கே.வி.ஆனந்தின் அனுபவத்துக்கு கிடைத்த வெற்றி.

‘விவேகம்’ படத்தில் உங்கள் பங்களிப்பு?

கதை விவாதத்தில் கலந்துகொண்டு, கதைக்களத்துக்கான சில உள்ளடக்கங்களைத் தந்திருக்கிறேன். திரைக்கதையில் பங்களித்துள்ளேன். 2 பாடல்கள் எழுதியுள்ளேன். ‘கவண்’ படத்தைவிட ‘விவேகம்’ படத்துக்கு அதிகம் உழைக்கவேண்டி இருந்தது; நிறைய எழுதவேண்டி இருந்தது. அதற்கு வாய்ப்பும், சுதந்திரமும் தந்த இயக்குநர் சிவாவுக்கு என் மனமார்ந்த நன்றி!

சினிமாவில் திரைக்கதையின் முக்கியத்துவம் பற்றி?

சினிமாவின் அடிப்படையே திரைக்கதைதான். திரையில் கதை அவிழும் கலையே திரைக்கதை. சிந்தனைகளைக் காட்சிமொழியாக மாற்றும் முயற்சியே திரைக்கதை. அந்த முயற்சியில் கதைக்கும் சில கூடுதல் உள்ளடக்கங்களைக் கொடுத்தாக வேண்டும். கதையும் திரைக்கதையும் வெவ்வேறுதான். ஆனால் இரண்டுக்கும் இடையே மெல்லிய கோடு இருக்கிறது.

திரைக்கதை எழுதுவதில் தந்தை வைரமுத்து, அண்ணன் கார்க்கி அதிகம் ஈடுபட்டதில்லை. நீங்கள் எப்படி?

கவிதையின் பிம்பவியல்தான் என் திரைக்கதை ஆர்வத்துக்கு அடிப்படை. தவிர, நாவல்கள் எழுதிய அனுபவமும் நம்பிக்கை தந்தது. கே.வி.ஆனந்த், சிவா போன்ற மூத்த இயக்குநர்கள் கொடுக்கும் உற்சாகத்தால் அந்த நம்பிக்கை வலுவடைந்தது.

நடிகர் அஜித்திடம் நீங்கள் கற்றுக்கொண்டது?

அவரது தொலைநோக்கம், உடற்பயிற்சி, விடாமுயற்சி, உணவுப் பழக்கம் என்று ஒரு பட்டியலே சொல்லலாம். அவரோடு பேசியபோது, வாழ்க்கை பற்றிய அவரது பார்வையை அறிய முடிந்தது. முடிவெடுத்தல் பற்றியும், எப்போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் நிறைய உதாரணங்களோடு பேசினார். அவருடன் பேசியது, ஒரு நல்ல புத்தகத்தைப் படித்ததுபோல இருந்தது.

இயக்குநர் சிவா - எழுத்தாளர் சிவா - பாடலாசிரியர் சிவா மூவரில் உங்களை அதிகம் கவர்ந்தவர் யார்?

மனிதர் சிவா! மென்மையான மனிதர். ‘சிறுத்தை சிவா’ என்பது தவறான அடைமொழி. தெளிவான அணுகுமுறை கொண்ட அவரை ‘விவேகம் சிவா’ என்பதே சரி. உழைப்பும், தன்னம்பிக்கையும் அவரை இன்னும் பெரிய உயரங்களுக்கு அழைத்துச்செல்வது உறுதி. இயக்குநருக்குரிய பொறுமை, எழுத்தாளருக்குரிய துடிப்பு, பாடலாசிரியருக்குரிய மொழிநயம் மூன்றும் அவரிடம் நிறைந்திருக்கிறது .

நீங்கள் எதிர்பார்த்ததுபோல ‘விவேகம்’ படமாக்கப்பட்டிருக் கிறதா?

ஒருசில காட்சிகள் மட்டுமே பார்த்தேன். நான் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு அழுத்தமாக, அழ காக அவை படமாக்கப்பட்டுள்ளன. முதல் நாள் முதல் காட்சியில் முழு படத்தையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

படத்தில் அஜித்தின் ஓபனிங் காட்சி பற்றி சொல்ல முடியுமா?

அதிரடியாக அமைந்திருக்கிறது. அதற்கு பின்னணி இசையே தேவையில்லை. ஏனென்றால், அந்தக் காட்சியில் ரசிகர்களின் ஆரவார ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கப்போவதில்லை. நாங்கள் எழுதும்போதே எனக்கு மெய்சிலிர்த்த காட்சி அட்சராஹாசனின் அறிமுகக் காட்சி. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு எந்த நடிகைக்கும் இப்படி ஒரு அறிமுகக் காட்சி அமைந்திருக்குமா என்று தெரியவில்லை. அரங்கம் அதிரப்போவது உறுதி. திரையரங்கில் கமல் அதைப் பார்க்கும்போது, தன்னை மறந்து விசில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படிப்பட்ட அதிரடியான படத்தில் ‘காதலாட’ என்ற இதமான பாடலுக்கு என்ன வேலை?

அதிரடி காட்சிகள், பிரம்மாண்டம், கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்திருந்தாலும் மனித உணர்வுகள்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம். படத்தில் இருக்கும் ஆத்மார்த்தமான உணர் வின் அடையாளம்தான் ‘காதலாட’ பாடல்.

அனிருத்தின் அழகான இசைக்கு இடையூறு விளைவிக்காமல் வரிகளை எழுதியிருக்கிறேன். மனதை வருடும் மென்மையோடு இப்படத்தில் இன்னொரு பாடலும் எழுதியிருக்கிறேன்.

‘கவண்’ படத்தில் எழுத்தாளர்கள் சுபாவுடனும், ‘விவேகம்’ படத்தில் எழுத்தாளர் ஆதிநாராயணனுடனும் பணியாற்றி இருக்கிறீர்கள். ஒரே படத்தில் 2 எழுத்தாளர்கள் பணிபுரிவது எப்படிப்பட்ட அனுபவம்?

ஆரோக்கியமான அனுபவம். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி படங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பணியாற்றுவது உண்டு.

நமது பழைய தமிழ் படங்களில் கதை இலாகா என்று ஒரு குழுவே உண்டு. சினிமா என்பது புத்தகம் எழுதுவதுபோல தனி முயற்சி அல்ல. கூட்டு முயற்சி. அதை புரிந்துகொள்வதுதான் இத்துறையில் பணியாற்ற முதல் தகுதி. இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து பணியாற்றும் பக்குவத்தையும், ஒரு முழு நீள திரைப்படத்துக்கு தனித்தே எழுத முடியும் என்ற நம்பிக்கையையும் என் சிறு பயணம் எனக்குத் தந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x