Published : 19 Aug 2017 10:23 AM
Last Updated : 19 Aug 2017 10:23 AM

உடல்நலக் குறைவால் மதுரையில் காலமான நடிகர் அல்வா வாசுவுக்கு நடிகர்கள் அஞ்சலி

உடல்நலக் குறைவால் மதுரையில் காலமான நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் ‘அல்வா’ வாசு (56). முதுகலை பட்டதாரியான அவர், இசை ஆர்வத்தால் தமிழ் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு 1984-ல் சென்னை சென்றார். மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். ‘வண்டிச்சக்கரம்’ படம் மூலம் நடிகரானார். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மதுரை வட்டார மொழியில் பேசி நடித்தார். 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை மதுரைக்கு அழைத்து வந்தனர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணப்படுத்த முடியாத சூழலில் அவரை மதுரை ஓபுளா படித்துறை அருகே உள்ள அவரது மனைவியின் தங்கை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையில், நடிகர் சங்கம் மற்றும் எஸ்வி.சேகர் மூலம் சென்னையை சேர்ந்த மருத்துவர் தணிகாச்சலம் நேற்று முன்தினம் நேரில் வந்து சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.34 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவி அமுதா, ஒரு மகள், ஒரு சகோதரி உள்ளனர்.

அல்வா வாசுவின் உடலுக்கு நடிகர்கள் விக்னேஷ், சக்தி சரவணன், கருப்பையா, ராமன் பிரபு உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு செலவுக்காக நடிகர் சங்கம் சார்பில் ரூ.35 ஆயிரம் உதவித்தொகையை வாசுவின் மனைவியிடம் நடிகர் விக்னேஷ் கொடுத்தார். அல்வா வாசுவின் உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சத்யராஜ், விஷால், எஸ்வி.சேகர், கவுதமன் உள்ளிட்ட திரையுலகினர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்ததாக வாசுவின் மைத்துனர் பாலசுந்தர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x