Last Updated : 23 Aug, 2017 06:33 PM

 

Published : 23 Aug 2017 06:33 PM
Last Updated : 23 Aug 2017 06:33 PM

விவேகம் படத்தில் Never ever give up வசனத்தை எழுதியது எப்படி? - இயக்குநர் சிவா

'விவேகம்' படத்தில் 'Never ever give up' வசனத்தை எழுதியது எப்படி என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

நாளை(ஆகஸ்ட் 24) வெளியாகும் இப்படம் குறித்தும் இயக்குநர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச உளவு த்ரில்லர் 'விவேகம்'. கிராமப்புற பின்னணியில் 'வீரம்', நகர பின்னணியில் 'வேதாளம்' படத்திற்கு பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார் தான் கொடுத்தார். இந்த கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம்.

'விவேகம்' படத்தில் ஆக்‌ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் இருக்கும். பல்கேரியா, சைபீரியா, க்ரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அஜித் சார் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல் அசுர உழைப்பாளி.

இப்படத்தில் மூன்று பெரிய சண்டைக்காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் அஜித் சார் ரசிகர்களுக்கு ஒரு படையலாக இருக்கும். சண்டை காட்சிகளுக்கு 'டூப்' வைப்பதை அஜித் சார் முற்றிலும் தவிர்பவர். இப்படத்தில் அஜித் சார் செய்த ஒரு அசுர பைக் சண்டைக்காட்சியைப் பார்த்த அதன் ஹாலிவுட் சண்டைப்பயிற்சி இயக்குநர் காலோயன் வொடெனிசரோவ் [ Kaloyan Vodenicharov ]அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார், ஏனென்றால் அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது.

இந்தப் படத்துக்காக அஜித் சார் உடற்பயிற்சிக் கூடத்துக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பு போட்டு தன் உடலைச் செதுக்கியுள்ளார் . அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான 'Never Say Die' வை மையமாக வைத்தே இப்படத்தில் 'Never ever give up' என்ற வசனத்தை எழுதினோம். உண்மையான உழைப்பு தரும் பெயரும் வெற்றியும் வேறு ஏதுவாலும் தர முடியாது.

எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போட்டுள்ளது. அதனால் இப்படம் மிக அற்புதமாக வந்திருப்பதில் எங்களுக்கு ஆச்சிரியம் இல்லை

இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x