Last Updated : 21 Aug, 2017 11:14 AM

 

Published : 21 Aug 2017 11:14 AM
Last Updated : 21 Aug 2017 11:14 AM

அனைவருக்குமே நம்மைப் பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும்: விஜய்

அனைவருக்குமே நம்மைப் பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும் என்று 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பு, திரையுலகில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25-வது வருடம் உள்ளிட்டவை இவ்விழாவில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் விஜய் பேசியதாவது:

இப்படத்தின் தயாரிப்பாளர் முரளி சாருக்கும் அவருடைய மனைவி ஹேமா அவர்களுக்கும் வாழ்த்துகள். அவர்களுடைய நிறுவனத்தின் 100-வது படமாக 'மெர்சல்' அமைந்ததில் எங்கள் படக்குழு அனைவருக்குமே சந்தோஷம்.

இவ்விழாவில் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவர் திரையுலகிற்கு வந்து இது 25-வருடம். அவரோடு சேர்ந்து பணியாற்றியது ரொம்ப ஸ்பெஷல். பாடல்களுக்கு மெட்டுப் போட்டு ஆஸ்கர் விருது வாங்கி, உலகத்தையே மெர்சலாக்கியவர் இன்று 'மெர்சல்' படத்துக்கு மெட்டுப் போட்டுள்ளார். பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அது எப்படியிருந்தது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எனக்கு ஒவ்வொரு பாடலையும் கேட்கும் போது சுகமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு நன்றி.

'தெறி' கொடுத்தமைக்கு நன்றி அட்லீ. இப்படத்தில் பணிபுரியும் போது மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. அட்லீயின் நிறைய விஷயங்களை ரசிப்பேன். அவருடைய நம்பிக்கையை ரொம்பவே ரசிப்பேன். இவ்வளவு பெரிய படத்தை 6 முதல் 7 மாதங்களில் சரியாக திட்டமிட்டு முடிந்தது ரொம்பவே பெரிய விஷயம். அட்லீக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி. விஷ்ணுவின் விளக்குகள் அமைப்பு எல்லாம் பார்க்கும் போது முதல் பட ஒளிப்பதிவாளர் மாதிரியே தெரியவில்லை. எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு உள்ளிட்ட பலருடைய ஒத்துழைப்பால் மட்டுமே இந்தப் படம் இவ்வளவு அழகாக முடிந்தது. சமந்தா, காஜல், நித்யா மேனன், சத்யராஜ் சார், வடிவேலு சார், எஸ்.ஜே.சூர்யா சார், கோவை சரளா மேடம், யோகி பாபு, ராஜேந்திரன் அண்ணா, சத்யன், அப்துல் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.

இப்போது சில விஷயங் கள் பேசியாக வேண்டும். அட்வைஸ் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. எனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். வெளியூர் செல்லும் போது ரசிகர்களையும், நண்பர்களையும் சந்திப்பேன். அப்போது நிறைய விஷயங்கள் என்னோடு பேசுவார்கள், விவாதிப்பார்கள். பலரும் என்னைச் சுற்றியிருக்கும் எதிர்மறை விஷயங்களை எப்படி கையாள்கிறீர்கள் என கேட்பார்கள். அதை தவிர்த்துவிட்டு, உங்களுடைய வேலையை மட்டும் பார்த்துவிட்டு போய் கொண்டே இருங்கள். கத்தி கத்திப் பார்த்துவிட்டு சோர்ந்து போய்விடுவார்கள். இது எனது வாழ்க்கையில் நிறைய நடந்துள்ளதால் சொல்கிறேன். தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டு ஏன்? வேண்டாம் நண்பா.

அதே நேரத்தில் இந்த உலகத்தில் அவ்வளவு எளிதாக நம்மை வாழ விடமாட்டார்கள். 4-ம் பக்கத்திலும் நம்மை சோதித்துக் கொண்டே இருப்பார்கள். அதெல்லாம் தாண்டி தான் வந்தாக வேண்டும். அனைவருக்குமே நம்மைப் பிடித்துவிட்டால் வாழ்க்கை போரடித்துவிடும். கொஞ்ச பேருக்காவது நம்மை பிடிக்காவிட்டால் மட்டுமே வாழ்க்கை ரொம்ப ஜாலியாக, சுவாரசியமாக இருக்கும்.

அழகும், ஆடம்பரமும் இந்தால் ஆயிரம் பேர் கூட ஆசையாக பழகுவார்கள். அன்பாக இருந்தால் பழகுகிற 10 பேர் கூட உண்மையாக இருப்பார்கள். நான் அன்பாக இருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஹிட், ப்ளாப், பிளாக்பஸ்டர் என அனைத்துமே கொடுத்துவிட்டீர்கள் நண்பா. அதை எல்லாம் விட உங்களை சம்பாதித்ததையே பெரிதாக நினைக்கிறேன்.

இரண்டு விஷயங்கள் நீங்கள் யார் என்பதை நிர்ணயிக்கும். ஒன்று, நீங்கள் நிர்கதியாக இருக்கும்போது உங்களுக்குள் இருக்கும் மன உறுதி மற்றொன்று உங்களிடம் சகலமும் இருக்கும்போது நீங்கள் நடந்து கொள்ளும் விதம்.  இதை கடைப்பிடிப்பது எளிது தான்.

ஒரு சின்ன கதை. இதய அறுவை சிகிச்சை டாக்டர், காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக்கிடம் கொடுத்தார். அந்த மெக்கானிக், ‘உங்களை மாதிரி தான் நான் வால்வு பொருத்துகிறேன். அடைப்புகளை நீக்குகிறேன். ஆனால், எனக்குக் கிடைக்காத பேரும், புகழும், பணமும் உங்களுக்கு மட் டும் கிடைக்கிறதே’ என்று கேட்டான். அதற்கு டாக்டர், ‘நீ சொல்றது சரி தான். அதையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டே இருக்கும் போது செய்து பார், புரியும்’ என்றார்.

நான் பேசுவது, செய்வது எல்லாம் பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். ஒரு பிரச்சினையும் இல்லை. இதை எல்லாம் என் மகனிடம் சொன்னால் கேட்க மாட்டான். உங்களிடம் மட்டும் தான் இதெல்லாம் பேச முடியும். இங்கு வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சகளுக்கு என்னுடைய நன்றி. இங்குப் பாடிய அத்தனை பாடகர்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் நன்றிகள், வாழ்த்துகள்.

துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும். கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும். தெறின்னா தெனாவட்டா இருக்கணும். மெர்சல்னா மிரட்டலா இருக்கணும்

இவ்வாறு விஜய் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x