Last Updated : 18 Nov, 2014 09:31 AM

 

Published : 18 Nov 2014 09:31 AM
Last Updated : 18 Nov 2014 09:31 AM

கொலைதேசமா கொலம்பியா?

கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம்.

‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை.

தென் அமெரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது. அந்த கண்டத்தின் உச்சியின் இடது புறமாக அமைந்திருக்கிறது.

கொலம்பியாவை வட அமெரிக்காவுடன் இணைப்பது பனாமா. மற்றபடி வெனிசுவேலா, பிரேசில், பெரு, ஈக்வேடார் ஆகிய நாடுகளுக்கு நடுவே இது அமைந் துள்ளது. பசிஃபிக், அட்லாண்டிக் ஆகிய இரு மாபெரும் கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு கொலம்பியாதான். அமெரிக்க கண்டத்தைக் கண்டு பிடித்த கொலம்பஸின் பெயரில் தான் கொலம்பியா உள்ளது.

கால்பந்து, எருதுச் சண்டை, கார் ரேஸ் - இவைதான் கொலம்பியர்களின் மிகப் பிரியமான விளையாட்டுகள். வேகம், வேகம் - இதுதான் அவர்கள் மூச்சுக் காற்று. கொஞ்சம் வன்முறையும் அதில் கலந்திருந்தால் இதுதான் இயல்பு! கால்பந்து வீரர் ஒருவர் கோல் போட்டால் என்ன ஆகும்? சக விளையாட்டு வீரர்கள் கட்டித் தழுவிப் பாராட்டலாம். விமர்சகர்கள் புகழ்ந்து எழுதலாம்.

எஸ்கோபார் என்ற கொலம்பிய நாட்டு கால்பந்து வீரர் தன் தலையின் மூலமாகவே கோல்கள் அடிக்கும் நுட்பத்தில் சிறப்பு பெற்றவர். ஆனால் ஒரு நாள் அவர் தன் தலையெழுத்தையே மாற்றிக் கொள்ளும்படி வித்தியாசமான ஒரு கோல் போட்டார். அது ஸேம் ஸைடு கோல்! அதுவும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில்.

1994 கால்பந்து உலகக் கோப்பை - தேதி ஜூன் 22. அமெரிக்காவுக்கு எதிரானது. பந்தை ‘பாஸ்’ செய்யும் நோக் கத்தில்தான் எஸ்கோபார் அதை உதைத்தார். ஆனால் அந்த ஊழ்வினைப் பந்து அவர் தரப்பு நெட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்து விட்டது. சேம் சைட் கோல். அமெரிக்கா 2 1 என்கிற கணக்கில் வென்றது. முதல் சுற்றிலேயே கொலம்பியா விலக்கப்பட்டது. எஸ்கோபாருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

பி.பி.சி. சானலின் வர்ணனையாளர் ஆலன் ஹான்சன் என்பவர் எஸ்கோபாரின் எதிர்பாராத கோல் குறித்து ‘’இப்படி ஒரு தவறு இழைத்தவரை சுட்டுத் தள்ளினால்கூட தப்பில்லை’’ என்று கூறித் தொலைத்தார். அவரது நாக்கில் ஏழரைநாட்டான் அமர்ந்திருந்தானோ?

எஸ்கோபாருக்கு பல உறவினர்கள் லாஸ் வேகாஸில் இருந்தனர் (போட்டிகள் நடைபெற்றது அமெரிக்காவில்). என்றாலும் அங்கெல்லாம் போகப் பிடிக்காமல் தாய்நாடு திரும்பினார். ஐந்து நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்த பிறகு நண்பர்களோடு ஒரு மதுவகத்துக்குச் சென்றார். பிறகு நண்பர்கள் பிரிந்தனர்.

தனியாகத் தன் வீட்டுக்குக் கிளம்பிய எஸ்கோபாரை திடீரென மூன்று பேர் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவன் கையில் துப்பாக்கி. அத்தனைபேர் முகங்களிலும் வெறுப்பு வழிந்தது. ஆறு முறை எஸ்கோபார் சுடப்பட்டார் எஸ்கோபாரின் உயிர் அடங்கியபோது ‘’ஐகோ’’ என்று கொலைகாரன் கத்தினான் (இந்த வார்த்தை தென் அமெரிக்க கால்பந்து வர்ணனையாளர்களால் அடிக்கடி கூறப்படுகிற ஒன்று).

ஆக தவறாகப் போட்ட ஒரே ஒரு கோல் எஸ்கோபாரின் உயிரைக் குடித்து விட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்கோபார் இறப்பதற்கு முன்பாக ஐந்து வருடங்கள் பமேலா என்னும் பல் மருத்துவரைக் காதலித்தார். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் பாக்கி என்கிற நிலையில், எஸ்கோபாரின் படுகொலை நிகழ்ந்தது.

எஸ்கோபாரின் அப்பா ஒரு சிறப்பான அமைப்பைத் தொடங்கியவர். தெருவில் திரிந்து வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருந்த கொலம்பிய இஞைர்களுக்கு கால்பந்து கற்றுக் கொடுத்து ஆக்கபூர்வமான வழிகளில் திருப்பிய அமைப்பு அது.

எஸ்கோபார் இறப்புக்குப் பிறகு பி.பி.சி. தொலைக்காட்சி சானல் ஒரு பொது மன்னிப்பு கேட்டுக் கொண்டது. தன் வர்ணனையாளரின் வாக்கியத்துக்காகத் தான். (இதற்கும் கொலைகாரர்களின் செயல்பாட்டுக்கும் தொடர்பே இல்லை என்ற போதிலும்) இதற்குப் போய் கொலையா? மற்ற நாடுகள் உறைந்து போயின. கொல்ம்பியர்கள்? சிலர் சந்தோஷப்பட்டனர்!. மற்றவர்கள் ஒரு ‘உச்’ கொட்டி விட்டு தத்தம் வேலையை கவனிக்கத் தொடங்கினார்கள். அற்ப விஷயத்துக்கும் வன்முறை பதிலடி என்பது அவர்களுக்குப் பழகிப் போன விஷயம்.

அதற்காக கொலம்பியா மக்கள் அனைவருமே கொடூரமானவர்கள் என்பதில்லை. ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எஸ்கோ பாரின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர். பதற்றங்கள் அடங்கிய பிறகு காலப்போக்கில் 2002ல் அவருக்கு ஒரு சிலையும் நிறுவப்பட்டது!

கொலம்பிய போதைப் பொருள் அமைப்பு ஒன்றுதான் எஸ்கோபாரின் படுகொலைக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு கொலைகார கும்பலும் கைது செய்யப்பட்டது. (குறிப்பிட்ட போட்டியில் கொலம்பியா வெல்லும் என்று எக்கச்சக்கமாக சூதாட்டத்தில் பெட் கட்டியிருந்தனர் அந்த அமைப்பின் உறுப்பினர்கள்).

எஸ்கோபாரின் படுகொலை மட்டுமல்ல, கொலம்பியாவின் ‘படுகொலை’க்குக்கூட போதை மருந்து அமைப்புகள்தான் காரணம்.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x