Last Updated : 12 Jul, 2017 01:53 PM

 

Published : 12 Jul 2017 01:53 PM
Last Updated : 12 Jul 2017 01:53 PM

ஏறிய டிக்கெட் விலை, குறைந்த ரசிகர்கள் வருகை: தமிழக திரையரங்குகளின் அவல நிலை

நான்கு நாட்கள் முழு அடைப்புக்குப் பிறகு தமிழக திரையரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. இம்முறை ஜிஎஸ்டி வரியோடு விலையேற்றப்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

மாநில அரசு விதித்த 30 சதவித கூடுதல் வரி தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது. குழு அமைக்கப்பட்டு அது தரும் பரிந்துரையின் பேரில் மாநில வரி பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

சென்னை நகரத்தில், மல்டிப்ளெக்ஸ் அரங்குகள், ஏற்கனவே இருக்கும் டிக்கெட் விலையோடு ஜிஎஸ்டியை சேர்த்துள்ளார்கள். அதனால் டிக்கெட் விலை ரூ.120லிருந்து ரூ.153.60 ஆக உயர்ந்துள்ளது. இணையத்தில் டிக்கெட் வாங்கினால் கூடுதலாக ரூ.30. அதுவே 3டி படம் என்றால் இன்னும் ரூ.30. இப்படி மொத்தமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.213.60 செலுத்த வேண்டியிருக்கும்.

இணையத்தில் டிக்கெட் வாங்கும்பட்சத்தில் கிட்டத்தட்ட 50% சதவிதம் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதால் ஜூலை 7,8,9 ஆகிய தேதிகளில் திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக குறைந்துள்ளது.

காலி அரங்குகள்

இன்னும் மோசமாக, திங்கள் அன்று வசூல் மொத்தமாக வீழ்ந்தது. மக்கள் வருகை 30 சதவிதத்துக்கும் குறைவாக இருந்தது. 11 வருடங்கள் கழித்து வந்துள்ள இந்த விலை ஏற்றத்தை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே கேளிக்கை வரியை உள்ளடக்கிய டிக்கெட் விலைக்கு ஜிஎஸ்டி போடுகின்றனர் என சமூக வலைதளங்களில் பலர் காட்டமாக பதிவிட்டனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமெறால், திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் விலையை ஏற்றி, ஜிஎஸ்டி வரியை ரசிகர்கள் தலையில் கட்டிவிட்டனர்.

மற்ற மாநில அரசுகளைப் போல அல்லாமல், தமிழக அரசங்கம் இன்னும் டிக்கெட் விலை குறித்த எந்த ஆணையையும் வெளியிடவில்லை. டிக்கெட் விலை மீது மாநில வரியை கூடுதலாக செலுத்தலாமா என முடிவு செய்ய இதற்காக ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைய தேவை, தெளிவான ஒரு கொள்கையும், வெளிப்படையான டிக்கெட் அமைப்புமே.

இது நடக்கவேண்டுமென்றால், அதிகாரிகள் அரசின் சி ஃபார்மை (‘C-Form’) மாற்றியமைக்கவேண்டும். இது அரசாங்கம் அனுமதித்த டிக்கெட் விலையை சொல்லும் ஆணை. தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகளில், முக்கியமாக பி மற்றும் சி என சொல்லப்படும் ஊர்களில் இருக்கும் அரங்குகளில் இன்னும் பழைய சி ஃபார்ம் படி, டிக்கெட் விலை ரூ. 5, ரூ.10 என்றே இருக்கிறது. இது அதிக கேளிக்கை வரியை செலுத்துவதைத் தடுக்க. ஆனால் உண்மையில் ரூ.50லிருந்து ரூ.70 வரை வசூலிக்கப்படுகிறது.

பலனடையும் பிறமொழிப் படங்கள்

இந்த விலையேற்றத்தால் புதிய தமிழ்ப்படங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர். கடந்த வாரம் வெளியான படங்களை எடுத்துக் கொண்டால், ஆங்கிலத்தில் ஸ்பைடர்மேன், இந்தியில் ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’, தெலுங்கில் 'நின்னுக் கோரி' ஆகிய படங்கள் புதிய தமிழ் படங்களை விட நன்றாக வசூலித்துள்ளன.

இதுபற்றி பேசிய வேலூர் மாவட்ட விநியோகஸ்தர் ஒருவர், "தமிழகத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக டிக்கெட் விலை ஏற்றப்படவில்லை. தமிழக மக்கள் சினிமாவை அத்தியாவசிய தேவையாகவே பார்க்கின்றனர். இதனால் அரசியல்வாதிகள், மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போதும் கூட டிக்கெட் விலையை ஏற்றவிடவில்லை. எனவே தற்போது ரசிகர்களுக்கு புதிய விலை பழக நேரமாகும் " என்றார்.

சிறிய படங்கள் - பெரிய பாதிப்பு

இந்த விலையேற்றத்தால் சிறிய பட்ஜெட் தமிழ்ப் படங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். குறைவான மக்கள் வருகையால் காட்சிகளைத் திரையிட திரையரங்குகள் ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற நகரங்களைப் போல சென்னையிலும் மாற்றத்தக்க டிக்கெட் விலை வந்தால் இதற்கு தீர்வும் வரும். அப்போது, சிறு படங்களின் காட்சிகளுக்கு டிக்கெட் விலை குறைவாக இருக்கும்.

தற்போது ஜுலை 21 அன்று வெளியாகவிருக்கும் 'விக்ரம் வேதா', ஜூலை 28 - விஐபி 2 மற்றும் ஆகஸ்ட் 10 விவேகம் ஆகியப் படங்களின் வெளியீட்டை வர்த்தகத்தில் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். இதில் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகும் பட்சத்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும்.

© தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x