Last Updated : 10 Jul, 2017 09:51 AM

 

Published : 10 Jul 2017 09:51 AM
Last Updated : 10 Jul 2017 09:51 AM

திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்க வழிவகை செய்ய வேண்டும்: விஷால்

திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று 'சகுந்தலாவின் காதலன்' இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசினார்.

பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ’சகுந்தலாவின் காதலன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் 'வேலையிலல்லா விவசாயி' படத்துவக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் ஆற்காடு வீராசாமி , கருணாஸ் எம்.எல்.ஏ, தயாரிப்பாளர் சங்கத் தலைவவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் விஷால் பேசியதாவது:

இப்படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏனென்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு படத்தின் இசை உரிமையை வாங்க நான் அந்தத் தயாரிப்பாளரிடம் கேட்டேன், வேறு ஒரு நிறுவனம் அதை விட அதிக விலைக்கு கேட்டார்கள். இன்னொரு பெரிய நிறுவனம் அதைவிட பெரிய விலைக்கு வாங்கியது.

இவ்விழாவில் மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவை காப்பாற்றுங்கள் ஜிஎஸ்டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திரையரங்கிற்கு வரும்போது, பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டியதுள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்.

திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்க வழிவகை செய்ய வேண்டும். இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு விஷால் பேசினார்.

இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது:

கலைவாணர் அரங்கை புதுப்பித்து இங்கே சினிமா விருது வழங்கும் விழா நடத்த திட்டமிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அது நடக்கவில்லை. தமிழ்நாட்டை சினிமாக்காரர்கள் தான் அதிகம் ஆண்டார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமாகாரர்களை வரி போட்டு வதைக்காதீர்கள்.

அதே போல் திரையரங்கு அதிபர்களும், பார்க்கிங் மற்றும் தின்பண்டங்களுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

எம்ஜி.ஆர் காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது 'கொய்யால' என பாடல் எழுதுகிறார்கள், ஆபாச வரிகள் வருகின்றன. உங்கள் பேரன் 'கொய்யால' பாடலை எழுதியவர் எங்கள் தாத்தா தான் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கேவலம். 'வானத்தை போல மனம் படைத்த மன்னவனே' என்ற பாடலை நான் எழுதினேன், வானத்தை போல என்ற தலைப்பை வைத்தார் இயக்குனர் விக்ரமன். இப்போது உள்ள பாடல்களிலிருந்து இது போன்று தலைப்பாக வைக்க முடியுமா?

இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x