Last Updated : 16 Jul, 2017 04:07 PM

 

Published : 16 Jul 2017 04:07 PM
Last Updated : 16 Jul 2017 04:07 PM

அறிவு, திறமை, செல்வம் அனைத்தும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கே: கார்த்தி

நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான் என்று கார்த்தி பேசினார்

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38-வது வருட விழா சென்னையில் நடைபெற்றது இதில் நடிகர், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மிகவும் ஏழை எளிய மாணவர்கள் 22 பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்கப்பட்டது. இது போக இந்தாண்டு 500 மாணவர்களை படிக்க வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:

பொதுவாக அகரம் மாணவர்கள் அனைவருமே அரசுப் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். தமிழ் மொழியில் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். அனைவருமே கவிதை எழுதுகிறார்கள். முதலில் கவிதையை புரிந்து கொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும். கவிதை எழுதுவதற்கு அதை விட அறிவு வேண்டும். அகரம் மாணவர்கள் அனைவருமே அழகாக கவிதை எழுதுகிறார்கள். அது எப்படி என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய சிந்தனையே ரொம்ப ஆழமாக இருப்பதாக நம்புகிறேன்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளைக்கு இது 38-வது ஆண்டு. அப்பா ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். 14 வயது வரைக்கும் 14 படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறார். அவருடைய வசதி அவ்வளவு தான். அரிசி சாதம் சாப்பிடுவதே பெரிய விஷயம். படிக்கிற பையன் என்பதால் மூன்று வேளையும் அப்பாவை சாப்பிட வைத்துவிடுவார்களாம்.

ஓவியத்திலிருந்து சினிமாவுக்குள் வந்து, 14 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்து முடித்துவிட்டார். நான் 10 ஆண்டுகளில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். ஒருவர் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுயம்பாக தனியாக வர இயலாது. அவர்களைச் சுற்றியுள்ள பலர் ஊன்றுகோளாக இருந்திருப்பார்கள். 60 ஆண்டுக்கு முன்பு அப்பா "நான் பொம்மை படம்" படிக்கப் போகிறேன் என்ற போது யாருமே உதவ முன்வரவில்லை. அப்போது அப்பா "யாராவது எனக்கு பண உதவி அளித்தால், நான் உங்களுக்கு அடிமை என சங்கிலியில் எழுதி வைத்துக் கொள்கிறேன்" என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அப்பாவின் மாமா தான், அவரை சென்னைக்கு அழைத்து வந்து படிக்க வைத்திருக்கிறார்.

ஒரு மாதத்துக்கு 85 ரூபாய். அதற்குள் படிக்க வேண்டும், வாடகை கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும் என அனைத்து செய்ய வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் 3000 ரூபாயில் படித்து முடித்து, 100 ஓவியங்களுக்கு மேல் வரைந்து முடித்துவிட்டார். எனது வாழ்க்கையில் சிறந்த 6 ஆண்டுகள் என அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படியிருந்தவர் எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பார்த்து, நடிக்க வைத்ததால் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அவர்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்.

நம்மை உருவாக்கியவர்களுக்கு கல்வியை கொடையாக கொடுப்பதே சரியாக இருக்கும் என அப்பா தீர்மானித்தார். அதனால் ப்ளஸ் 2 மாணவர்கள் பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவின் 100 வது படம் வெளியாகி 100 நாட்கள் ஓடிய விழாவில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது சிவகுமார் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. 1980-ல் முதல் விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 25 வருடங்கள் நடத்தி, 25 ஆண்டு விழாவில் தலா 10,000 ரூபாய் விதம் கல்வி முறையில் வழங்கப்பட்டது.

2004-ம் ஆண்டில் அகரம் பொறுப்பெடுத்து, 14 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமன்றி, கஷ்டப்படுகிற மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறோம். கல்வி என்பது மதிப்பெண் வாங்குவதில் மட்டுமே இல்லை என்று, அறிவுக்கூர்மை தேவை, உணர்ச்சி பலம் தேவை. தற்போது விளையாட்டில் முதல் ஆளாக வந்தவர்கள், கண்டுபிடிப்புகளில் பெரிய ஆளாக வந்தவர்கள் என தேர்ந்தெடுத்து இந்தாண்டு பரிசுகள் கொடுத்திருக்கிறோம். ஆகையால் இந்த விழா ரொம்ப நிறைவாக இருக்கிறது.

அப்பாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருடந்தோறும் ஓவியக்கலையில் பங்காற்றியவர்களை கெளரவிக்க விரும்பினோம். அந்தவகையில் அம்புலிமாமா ஷங்கர் ஐயாவை கெளரவப்படுத்தியதில் சந்தோஷம். ஓவியத்துக்கு நாம் எப்போது மதிப்பளிக்கப் போகிறோம், எப்போதுமே வருமானத்தை நோக்கியே ஓடப்போகிறோமா? ஓவியக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளோம்.

அகரம் ஆரம்பித்ததில் இருந்து பள்ளிக் கட்டணம் யாராவது கட்ட வேண்டும் என உதவிக் கேட்டால் உடனே கொடுக்கும் அளவுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. பிரபலங்கள் என்பதால் வெளியே தெரிகிறது. ஆனால், எங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர் வாழை என்று சொல்லலாம். ஞானவேல் தான் அதனை முதலில் கொண்டு வந்தார். நிறைய பணமிருந்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்பது கிடையாது. நம்மால் மதிப்பிட முடியாதது நமது நேரம். அந்த நேரத்தைக் கொடுத்தால் பல இளைஞர்களை மேலே கொண்டு வர முடியும் என்பது வாழை நிரூபித்தது. அதனை பெரிதாக செய்ய முடியும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம்.

அகரத்துக்கு தன்னார்வலர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அந்த தன்னார்வலர்கள் சனி மற்றும் ஞாயிறு அகரம் அலுவலகம் வந்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்களோடு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். கிட்டதட்ட 250 மாணவர்கள் அகரத்திலிருந்து வெளியே வந்து வேலையில் சேர்ந்துவிட்டார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

அகரத்தின் தேவை என்பது பெரிதாக இருக்கிறது. தன்னார்வலர்கள் வந்து உதவுகிறார்கள். பொருளாதாரம் என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து குழந்தைகளையும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறோம். நிறைய கல்வி நிறுவனங்கள் எங்களுக்கு இலவசமாக சீட்கள் கொடுத்துவிடுகிறார்கள். அது சாதாரணம் விஷயம் கிடையாது. ஆனால், ஹாஸ்டல் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகையால் அகரமே ஹாஸ்டல் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து வெளியே வந்து படித்தால் தான் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கும் என வெளியே படிக்க வைக்கிறோம். எங்களுக்கு பொருளாதார உதவி புரியும் அனைவருக்குமே நன்றி.

மாதம் 300 ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 2000 பேர் அனுப்பத் தொடங்கியுள்ளார்கள். இப்படி பல பேருடைய கை சேர்த்து தான் அகரம் நடைபெற்று வருகிறது.

மேலே இருப்பவர்கள் கீழே சென்றால் மறுபடியும் மேலே வருவதற்கு பலம் வேண்டும். ஆனால், கீழே இருப்பவர்கள் மேலே வருவதற்கு பெரும் பலம் தேவை. அந்த பலம் உங்களிடமே தான் இருக்கிறது. நான் இதில் சாதிப்பேன் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்க வேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.​

இவ்வாறு கார்த்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x