Last Updated : 01 Jul, 2017 05:39 PM

 

Published : 01 Jul 2017 05:39 PM
Last Updated : 01 Jul 2017 05:39 PM

திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

திங்கட்கிழமை முதல் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை கைவிட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு கேளிக்கை வரியும் விதித்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இப்போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சினிமா துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் சினிமா துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

தயாரிப்பாளர்கள் நலனுக்காகதான் நாம் அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படியாத விஷயம்.

மாநில அரசுக்கு நம் தேவைகளைப் புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வருகிற திங்கள் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அன்புடன் வலியுறுத்துகிறோம்'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x