Published : 12 Nov 2014 07:32 PM
Last Updated : 12 Nov 2014 07:32 PM

லிங்கா படத்தை திரையிட தடை கோரி வழக்கு: ரஜினிகாந்த், படக் குழுவினருக்கு நோட்டீஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தை வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

நான் பல ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநராக உள்ளேன். முதல்முறையாக 'முல்லைவனம் 999' என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளேன். இப்படம் முல்லை பெரியாறு, முல்லை பெரியாறு அணை மற்றும் அந்த அணையைக் கட்டிய பென்னி குக்கின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது.

புதிய திரைப்படம் தயாரிக்கப் படும்போது, அந்தப் படத்தை வேறு யாரும் உரிமை கொண் டாடாமல் இருப்பதற்காக படத்தின் கதையை சமூக வலைதளமான யூ டியூப்பில் பதிவேற்றம் செய் வது வழக்கம். அதன்படி, 'முல்லை வனம் 999' கதையை 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். மறுநாளிலிருந்து 'முல்லைவனம் 999' கதை யூ டியூப்பில் வெளியானது.

2014 பிப். 24-ல் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் 'முல்லைவனம் 999' படத்துக்கான பூஜை நடைபெற்றது. 2015 ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கவும், தமிழ் வருட பிறப்பு அன்று வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2.5.2014-ல் யூ டியூப்பில் எனது 'முல்லைவனம் 999' கதை 'லிங்கா' என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந் தது. லிங்காவை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவ தாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. 'முல்லைவனம் 999' படத்தின் கதையை யூ டியூப்பில் இருந்து திருடி 'லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையைத் திருடியது சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, லிங்கா படத்தை ரூ.300 கோடி செலவில் தயாரித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து விநியோகஸ்தர் என்ற முறையில் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை ரூ.125 கோடி வசூல் செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ளன. எனவே, தடை விதிக்க வேண்டும் என்றார்.

எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறியதை அடுத்து, டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர் கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நவ. 19-க்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x