Published : 10 Nov 2014 10:02 AM
Last Updated : 10 Nov 2014 10:02 AM

மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை: கமல்ஹாசன் பேச்சு

`நமக்கு மதங்கள் தேவையோ இல்லையோ, அந்த மதங்கள் தருகிற, அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை' என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரத நாவல் வரிசையான “வெண் முரசு”வின் முதல் நான்கு பாகங்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. முதல் பாகமான ‘முதற்கனலை’திரைப்பட நடிகர் கமல்ஹாசன் வெளியிட இயக்குநர் சார்லஸ் பெற்றுக் கொண்டார். 2-ம் பாகமான மழைப்பாடலை இசையமைப் பாளர் இளையராஜா வெளியிட எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா பெற்றுக் கொண்டார். வண்ணக் கடல் என்னும் மூன்றாம் பாகத்தை எழுத்தாளர் அசோகமித்ரன் வெளியிட இயக்குநர் ஆண்டனி பெற்றுக் கொண்டார். நீலம் எனப்படும் நான்காவது பாகத்தை எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் வெளியிட வாசகர் கடலூர் சீனு பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘மனிதர்கள் எல்லோரும் கதைகளால் பின்னப்பட்டவர்கள். நீங்கள், நாம் எல்லோருமே கதை கேட்பவர்கள். கதைகளால் பின்னப்பட்டவர்கள், நமக்கு மதம் தேவையோ, இல்லையோ, அந்த மதங்கள் தருகிற, அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை. இசை வடிவத்தில் சொல்வதுதான் வேதங்கள். அதனால் சுருதி என்கிறோம். மகாபாரதத்தை ஜெயமோகன் நாவலாக எழுத, இளையராஜா அதை இசையாக தர, நான் கேட்டு கொண்டே இருப்பேன். வேறெதுவும் தேவையில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. நம் காலத்தில் வணங்கத்தக்க படைப்பாளனாக இந்த மகாபாரத நாவல் வரிசை வழியாக ஜெயமோகன் நமக்கு கிடைத்திருக்கிறார்’’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், ‘‘எதிரே இருக்கிற நீங்கள் எல்லாம் விஷ்ணுபுரம், நானோ சிவபுரம். மகாபாரத கதையை நாவலாக எழுதுகிற முயற்சிக்கு பெரிதும் உழைப்பு தேவை. ஜெயமோகன் பெரிய அளவில் உழைத்து, நாவல்களாக எழுதுகிறார். இந்த மகாபாரதத்துக்கு நான் இசை வடிவம் கொடுக்க வேண்டுமென்பது மிகப்பெரிய உழைப்பை கோரிய பணி. ஆனாலும், செய்ய வேண்டுமென்கிற ஆவல் வருகிறது’’ என்றார்.

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பேசும்போது, ‘‘மகாபாரதம் என்பது ஒவ்வொருவர் வாசிப்பிலும் வெவ்வேறு விதமான சாரங்களை மாற்றி மாற்றி தந்துக் கொண்டேயிருக்கிறது. தீராத பிரச்னைகளுக்கு சில நேரங்களில் தீர்வை தரும், சில நேரங்களில் தீர்வு கிடைக்காமல், தீர்வை நோக்கி தேட வைக்கும். வியாசர் பறந்த வானில், ஈயாக அல்ல, பருந்தாக ஜெயமோகன் இந்த நாவல் மூலமாக பறந்திருக்கிறார்’’ என்றார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசும் போது, ‘‘இந்திய மொழிகளில் நூற்றுக் கும் மேற்பட்ட மகாபாரத கதைகள், எழுதப்பட்டிருந்தாலும் நவீன படைப் பிலக்கிய ஆளுமையோடு ஜெயமோகன் எழுத தொடங்கியிருக்கும் இந்த மகாபாரத நாவல் ஒரு மைல்கல்லாக அமையும். மொழி என்பது காலத்தை, மரபை, பண்பாட்டை புலப்படுத்துவது. என் காலத்தில் ஜெயமோகன் என்கிற படைப்பாளி இருக்கிறார் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

எழுத்தாளர் அசோக மித்ரன் பேசும் போது, ‘‘இன்றைய கணினி தொழில்நுட்பம் இல்லாவிட்டால், இப்படியொரு நாவல் முயற்சி சாத்தியமா என்று தெரியவில்லை. கையால் எழுதுவது என்பது மிகவும் அலுப்பு தருகிற விஷயம். கணினி தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்த நாவலை ஜெயமோகன் எழுதுவது, பெரிய மகத்தான முயற்சி’’ என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது,‘‘ ஒரு எழுத்தாளனின் மாபெரும் உழைப்பும் ஈடுபாடும் மட்டுமே இப்படியான முயற்சி களை செய்ய தூண்டும். அப்படியான மிகுந்த உழைப்பை தன் படைப்புகளுக்காக தருவதில் ஜெயமோகன் வல்லவர். இது வரை அவர் எழுதியிருப்பவை 20% படைப்புகள் மட்டுமே. இன்னும் 80% படைப்புகள் அவரால் எழுதப்பட இருக்கின்றன. மகாபாரதத்தை காலத்திற்கேற்ப, புதுமையாக எழுதி வருகிறார். இது உலக பேரிலக்கியமாக மலர வேண்டும்’’ என்றார்.

ஜெயமோகன் தனது ஏற்புரையில், ‘‘இந்த அவையில் பணிவோடும், நெகிழ்ச்சி யோடும், நான் நின்று கொண்டு இருக்கி றேன். நான் முதன்மையாக கருதுகிற, மூத்த படைப்பாளிகள், என் நண்பர்கள், என் வாசகர்கள் என அனைவரும் கூடியிருக்கிற இந்த தருணம் எனக்கு மகிழ்வை தருகிறது. இந்த நாவல்முயற்சி எனது 25 ஆண்டு கால கனவு’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x