Published : 17 Jun 2017 03:52 PM
Last Updated : 17 Jun 2017 03:52 PM

அரசியல் மயமாக காலா - புதிய உத்வேகத்தில் ரசிகர்கள்: ரஜினி ராஜ்யத்தில் நடக்கும் அரசியல் வியூகங்கள்

'சிஸ்டம் கெட்டுப்போச்சு!'

'போர் வரட்டும் பார்த்துக்கலாம்!'

சினிமா தவிர்த்து இந்த இரண்டு 'பஞ்ச்'களை உதிர்த்து விட்டதனால் தமிழக அரசியலில் பேசு பொருளான ரஜினி அவர் பாட்டுக்கு 'காலா' படத்தில் மும்மரமாக இருக்கிறார். மீடியாக்களிலோ டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளில் அவர் அரசியல் கட்சி பெயரை அறிவிக்க உள்ளார் என்ற ஹேஸ்யங்கள் உருண்டு கொண்டிருக்கிறது.

ரஜினி மூத்த பத்திரிகையாளர்கள் சிலருடன் ஆலோசனை செய்துள்ளார். அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளார் என்றெல்லாம் கூட பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதையெல்லாம் தாண்டி ரஜினி ரசிகர்களிடம் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம், 'எந்த இடத்திலும் மீடியாக்களிடம் பேசக் கூடாது. அறிக்கைகள் பேட்டிகள் தரக் கூடாது. யார் எந்த விமர்சனம் செய்தாலும், ரஜினிக்கு எதிராக கிளர்ச்சி செய்தாலும் அதை பொருட்படுத்தலாகாது!' என்றெல்லாம் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே ரஜினி ரசிகர்கள் ராஜ்யத்தில் ஒற்றறிவது மீடியாக்களுக்கு மட்டுமல்ல; அரசியல் பிரமுகர்களுக்கு கூட சிரமமான காரியமாக உள்ளதாக தெரிகிறது. எனவேதான் இப்படிப்பட்ட செய்திகள் எல்லாம் இஷ்டம் போல் புறப்படுகின்றன என்கிறார்கள் ரஜினி மன்றங்களில் பொறுப்பு வகிக்கும் சீனியர் நிர்வாகிகள்.

அப்படிப்பட்ட சிலரிடம் பேசினோம். அவர்கள் ஆச்சரியமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

'காலா' படம் அவசர, அவசரமாக தயாரிக்கப்படுவதே இருக்கிற அரசியல் சூழல்களில் தேவையான விஷயங்களை சொல்லத்தான். எனவே அந்தப் படம் எம்ஜிஆர் முதல்வராவதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' அளவுக்கு முழுக்க அரசியல் மயமானதாக இருக்கும். தவிர இந்த படம் முந்தைய படமான '2.0' க்கு முன்பே ரிலீஸ் ஆகவே ஏற்பாடுகள் நடக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் வரும் தீபாவளிக்கு இந்த படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதற்குள் ரசிகர் மன்றங்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வேலையை அகில இந்திய தலைமை ரஜினி ரசிகர் மன்றம் செய்து வருகிறது என தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

அந்த வகையில் தற்போது அடுத்தகட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள் ரஜினி சந்திப்பு நடத்தும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள கிளைகளின் எண்ணிக்கையின் பாதி அளவில் மட்டுமே சந்திப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை புகைப்படம் ஒட்டி தலைமையிடம் கொடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

உதாரணமாக கோவை மாவட்டத்தில் 1987 வாக்கில் பதிவு செய்யப்பட்ட ரஜினி ரசிகர் மன்றங்கள் சுமார் 320க்கும் மேற்பட்டவை உள்ளன. அதற்குப் பிறகு வந்த ரசிகர் மன்றங்கள் யாவும் பதிவு செய்யப்படவேயில்லை. என்றாலும் அந்த மன்றங்களையும் அங்கீகரித்தே ரஜினியின் பட வெளியீடுகளின் போதும், பிறந்தநாளின் போதும் விழாக்களை நடத்தி வந்திருக்கின்றனர் மாவட்டத் தலைமை மன்றத்தினர். அந்த வகையில் 1987க்குப் பிறகு மட்டும் பதிவு செய்யப்படாத மன்றங்கள் என சுமார் 400க்கும் மேல் உள்ளன.

இந்த கணக்குப்படி பார்த்தால் மொத்தம் 700க்கும் மேற்பட்ட மன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தபட்சம் 20 பேர் முதல் 70 பேர் வரை கூட உறுப்பினர்கள் உள்ளனர். இத்தனை மன்றங்களுக்கு 275 விண்ணப்பங்களை மட்டுமே தலைமை மன்றம் அளித்துள்ளது. இதை கிளை மன்றங்களில் சீனியாரிட்டி உள்ளவர்களை கணக்கில் கொண்டும், பதிவு செய்யப்படாத மன்றங்களில் செயல்பாடு மிக்கவர்களையும் கண்டறிந்து வழங்கி வருகின்றனர்.

'கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாலுக்காவில் மொத்தம் 52 கிளை மன்றங்கள் உள்ளன. அங்கே மெத்தமே 7 டோக்கன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் எந்த அளவுக்கு ரசிகர்கள் வடிகட்டப்பட்டு ரஜினியை சந்திக்க ஏற்பாடு நடக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்த ரசிகர்களை தேர்ந்தெடுப்பதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அடுத்து வரும் வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப்படும் என்று உறுதி கொடுத்தே இது சரிகட்டப்படுகிறது!' என்றார் ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகி ஒருவர்.

'ரஜினி - ரசிகர் சந்திப்பு விண்ணப்பங்கள் கொடுத்து வாங்கும் பொறுப்பை கோவை மாவட்டத்தில் கதிர்வேலு, ஷெரீப், பாபு, செல்வராஜ் என நான்கு பேர் கொண்ட குழு செய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் தலைவர் உடல் நலக்குறைவால் இருக்கிறார். செயலாளர் வேறு கட்சிக்கு போய்விட்டார். எனவே அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகளுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரே இந்த பணியை செய்கின்றனர். இந்த விண்ணப்பங்களை தலைமை மன்றம் சரிபார்த்து அவரவர்க்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை அனுப்பி வைக்கும். அதன் பிறகே ரஜினி சந்திப்பு நடைபெறும். அது எப்போது என்று இன்னமும் தேதி குறிப்பிடப்படவில்லை. எப்படிப் பார்த்தாலும் அவர் சந்திப்பு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மாவட்டங்களை சார்ந்தவர்களுடனாக இருக்கும்.

அப்படி 15 முதல் 18 மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளார். இந்தப் பணிகள் நடைபெறுகிற வேகத்தைப் பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் ரஜினி ரசிகர்களை சந்திக்கலாம் என்றே தோன்றுகிறது. இந்த மாதிரியான ரசிகர்கள் சந்திப்பு ஏற்பாடுகள் ரஜினி ரசிகர் மன்றங்கள் வரலாற்றிலேயே இருந்ததில்லை!' என்கிறார் நம்மிடம் இதைப்பற்றி முழுமையாக விளக்கின ரஜினி மன்ற மூத்த நிர்வாகி ஒருவர்.

ஆக, தமிழகத்தில் நடக்கும் அரசியலையும் தாண்டி, ரஜினி ராஜ்யத்தில் பெரியதொரு அரசியல் சதுரங்க ஆட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x