Published : 17 Jan 2014 01:30 PM
Last Updated : 17 Jan 2014 01:30 PM

நட்சத்திரங்களுடன் என் வானம் :நேர்மைக்கு ‘ஓ’ போடு!

சென்னை, அண்ணாசாலைக்கு அருகில் இருக்கும் பார்சன் காம்ப்ளக்ஸ் அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான் இருந்தது சேது பட அலுவலகம். சேது பட வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் இருந்த நேரம். சேது பற்றி ஒரு கட்டுரை உருவாக்கும் திட்டத்தோடு அங்கு சென்றபோதுதான் முதன்முறையாக விக்ரமைப் பார்த்தேன்.

அதற்கு முன்பே பல படங்கள் நடித்திருந்தாலும் ஒரு புதிய நடிகனின் வேகமும் ஆர்வமும் அப்போது அவரிடத்தில் இருந்தன. “காபி சாப்டலாமா… கூல்டிரிங்க்ஸ் சாப்டுவோமா..?” என்று பாலா கேட்க, “வெயிலா இருக்கு… கூலா குடிப்போம்ணே…” என்று நான் சொன்ன விநாடி, காணாமல் போய் கையில் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலோடு திரும்பினார் விக்ரம். “என்ன பாஸ்… நாம சேர்ந்தே போயிட்டு வந்திருக்கலாமே..?' என்றபோது, 'கடை தூரமா இருக்கும்… அவ்ளோதூரம் நீங்க அலையணும்ல…”என்றார்.

சேது வெளியான பிறகு விக்ரமை கொஞ்ச நாள் சந்திக்கவில்லை. தில் படத்தில் அவர் மாஸ் ஹீரோ ஆன பிறகு அந்தப் பட இயக்குநர் தரணியோடு ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அப்போது, “ஹாய் பாஸ்… ஹவ் ஆர் யூ..?” என்றார். அத்தோடு சரி! சினிமாவில் அது இயல்புதான் என்பதால் பெரிதாக ஏதும் தோன்றவில்லை.

அதற்குப் பிறகு இயக்குநர் சரண் இயக்கத்தில் விக்ரம் ’ஜெமினி’ படத்தில் நடித்தபோது இன்னொரு சந்திப்பு. சின்ன தயக்கத்தோடு நின்றபோது, “என்ன பாஸ்… அன்னிக்கு தரணியோட பார்த்தப்பவும் உம்முனு மூடியா இருந்தீங்க… இப்பவும் மூடியாவே இருக்கீங்க. எனி ப்ராப்ளம் வித் மி? என்னைப் பத்தி முதல் பெரிய ஸ்டோரி நீங்க எழுதுனதுதான்… நான் ஏதாச்சும் தப்பா பண்ணிட்டேனா..?” என்றார். “அச்சச்சோ… அதெல்லாம் இல்லை” என்று கைகுலுக்கிவிட்டு வந்தேன்.

அந்த ஜெமினி படத்தில் ஹீரோ விக்ரம், வில்லன் கலாபவன் மணி. மலையாளத்தில் கலாபவன் மணி நடித்த வேடத்தில்தான் காசி படத்தில் விக்ரம் தமிழில் நடித்தார். இருவரையும் சந்திக்கவைத்தால் நல்ல ஸ்டோரி கிடைக்குமே என்று எண்ணம். விக்ரம் வேறு பாசம் காட்டுகிறார், நிச்சயமாக ஹிட் ஸ்டோரிதான் என்ற உற்சாகத்தோடு சென்றேன்.

செட்டில் போய் கலகலப்பாகப் பேசி முடித்துவிட்டு விஷயத்தை விக்ரமிடம் சொன்னதும், “ஸாரி பாஸ்… வேற எதுனா ஸ்டோரி பண்ணலாம். இது வேண்டாம்” என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டார் விக்ரம். கவர் ஸ்டோரியாக வர வாய்ப்பிருக்கு என்று சொல்லியும் சம்மதிக்கவில்லை. டைரக்டர் சரண் மூலமாகப் பேச, அவர் வந்து நம்ம படத்துக்கு நல்ல கவரேஜா இருக்கும் என்று சொல்ல, அப்போதும் மறுப்பில் உறுதியாக இருந்தார் விக்ரம்.

“என்ன பாஸ்… மூடியா இருக்கீங்க…” என்று தேடி வந்து பேசிய மனிதர் இப்போது முகத்தைத் திருப்புகிறாரே என்று யோசித்த வேளையில் விக்ரமே வந்தார். “இந்த கான்செப்டை வேறொரு பத்திரிகைக்காக நிருபர் முத்துராமலிங்கன் என்கிட்டே பேசிட்டார். கேரளாவுக்கே கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்தார். அப்ப அது முடியாமப் போச்சு. இப்ப நாம பண்ணுனா அது நல்லாயிருக்காது” என்றார்.

டைரக்டரின் அனுமதியோடு ஜெமினி படப்பிடிப்பு போட்டோக்களை வைத்து கட்டுரையாக்கிவிட்டார்கள் என்று அந்த நண்பரிடம் விக்ரம் சொல்லியிருக்க முடியும். ஆனால், தன் பக்க நியாயத்தில் உறுதியாக இருந்தார் விக்ரம். அதன் பிறகு நண்பர் முத்துராமலிங்கத்திடம் பேச, அவர் அந்த ஐடியாவைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்ல, அவரிடம் போன் செய்து ஒப்புதல் பெற்ற பிறகே பேசினார் விக்ரம்.

அந்த நேர்மைதான் விக்ரம் ஸ்பெஷல்!

ஜெமினியின் ஓ போடு அவரை கமர்ஷியல் உச்சத்துக்குக் கொண்டு செல்ல, குழந்தைகள் கேள்விகேட்டு அதற்கு அவர் பதில் சொல்வதுபோல ஒரு திட்டம் போட்டு அவரிடம் சொன்னபோது உடனே ஓகே சொன்னார். அதற்காக போட்டோக்கள் எடுப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றபோது குழந்தைகள் கேள்வி என்பதால் கொஞ்சம் வேடிக்கையாக போட்டோ எடுக்கலாம் என்று அவரே ஐடியா கொடுத்து அதற்கேற்ப போஸ் கொடுக்கவும் செய்தார். அப்போது அங்கிருந்த ஒரு டெக்னீஷியன் இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா கோமாளி மாதிரி ஆக்கிடுவாங்க என்று சொல்ல, வெரிகுட்… அதுக்குதான் ட்ரை பண்றேன் என்று அவரை வாயடைத்தார். பிறகு, “நீங்க அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க… எப்படி போஸ் பண்ணணும்னு சொல்லுங்க” என்று போட்டோகிராபர் பக்கம் திரும்பி இயல்பானார்.

அந்த டெடிகேஷன் விக்ரம் ஸ்பெஷல்!

அடுத்தடுத்து தூள், சாமி என்று கமர்ஷியல் கதாநாயகனாக விக்ரம் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகுகூட அவர் மாறவில்லை. எங்கு பார்த்தாலும் கைகுலுக்கல், நலம் விசாரிப்பு என்று தன் இயல்பிலேயேதான் இருந்தார். அந்தச் சமயத்தில் எல்லாம் செம… சூப்பர்… என்று பதிலுக்கு கைகுலுக்குவதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. ராவணா ரிலீஸ் அன்று பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இருளில் நின்று எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தார் விக்ரம். படம் முடிந்து செல்லும்போது மனிதர் பார்த்துவிடக் கூடாதே… படம் பத்தி கேட்டுவிடக் கூடாதே… என்ற பதைபதைப்பு உள்ளுக்குள் இருந்தது.

மிகச் சரியாக விக்ரம் பிடித்துவிட்டார். “ஹலோ பாஸ்… எப்படி இருக்கீங்க… பார்த்து ரொம்ப நாளாச்சு..?” என்றவரிடம், “நான் இப்ப ப்ரீலான்ஸரா இருக்கேன்…” என்றேன். “ஓகே… பாஸ்… நல்லா பண்ணுங்க… ஆல் தி பெஸ்ட்…” என்று கைகுலுக்கினார்.

குறிப்பறிந்து தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்றும் இந்தக் குணமும் விக்ரம் ஸ்பெஷல்!

இந்தக் காரணங்களால்தான், அவர் எப்போதுமே பத்திரிகையாளர் ஸ்பெஷலாக இருக்கிறார்போல!

தொடர்புக்கு cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x