Last Updated : 22 Sep, 2016 02:40 PM

 

Published : 22 Sep 2016 02:40 PM
Last Updated : 22 Sep 2016 02:40 PM

தமிழில் வெற்றி பெறுவது தனி உணர்வு: அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி

நாம் பிறந்து வளர்ந்த ஊரில் வெற்றி பெறும்போதும் கிடைக்கும் உணர்வே தனிதான் என்று அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழ் திரையுலகில் படங்கள் தயாரிப்பில் 10 ஆண்டை எட்டியிருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். இந்நிறுவனத்தின் 12வது தயாரிப்பாக உருவாகும் படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் நாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கிறார். லிங்குசாமி படத்தின் மூலமாக தமிழிலும் நாயகனாக அறிமுகமாகிறார் அல்லு அர்ஜுன்.

இதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. சிவகுமார், அல்லு அர்ஜுன், இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் அல்லு அர்ஜுன் பேசியது, "இதுவரை 18 படங்கள் நடித்துவிட்டேன். ஆனால், எந்தவொரு படமும் தமிழில் வெளியாகவில்லை. ஏனென்றால் தமிழில் அறிமுகமாக நல்ல கதையைத் தேடிக் கொண்டிருந்தேன்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். சுமார் 20 வருடங்கள் சென்னையில் இருந்திருக்கிறேன். அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் ஹைதராபாத்தில் இருந்தேன்.

நாம் பிறந்து வளர்ந்த ஊரில் ஜெயிக்கும் போது கிடைக்கும் உணர்வே தனி தான். அந்த ஒரு சந்தோஷத்துக்காக லிங்குசாமி சார் உடன் ஒரு படம் பணிபுரிகிறேன். நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டேன். ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளுக்கும் சரியாக அமைவது போன்று ஒரு படம் கிடைக்கவில்லை. அம்மாதிரியான கதையைச் சொன்ன லிங்குசாமி சாருக்கு நன்றி.

தெலுங்கு திரையுலகில் நிறைய இயக்குநர்களுக்கு லிங்குசாமி சார் என்றால் பிடிக்கும். நிறையப் பேர் என்னிடம் லிங்குசாமி சார் படத்தில் என கேள்விப்பட்டேன். சூப்பர் சார் என்றார்கள்.

ஞானவேல்ராஜா சார் பேசும் போது 'பருத்தி வீரன்' பற்றி குறிப்பிட்டார். அப்படம் ஒரு மேஜிக். அதே மாதிரி வராது. அப்படத்தோடு ஒப்பிட்டு என்னால் பேசமுடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் 'பருத்தி வீரன்' ஒரு க்ளாசிக். அப்படத்தோடு ஒப்பீடே வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இயக்குநர் லிங்குசாமி பேசும் போது, "'சண்டக்கோழி 2' முடித்துவிட்டு, இப்படத்தை பிப்ரவரி 2017 இறுதியில் துவங்க இருக்கிறோம். நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது "நாங்கள் அவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் " என்றனர். அவருக்கு தமிழிலிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் இப்படம் அமையும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x