Published : 15 Dec 2013 15:04 pm

Updated : 15 Dec 2013 15:04 pm

 

Published : 15 Dec 2013 03:04 PM
Last Updated : 15 Dec 2013 03:04 PM

டிசம்பர் 16 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்

16-2013-ciff

தேதி : 16 Dec 2013

திரையரங்கம் : WOODLANDS


11:00 am : CHEAP THRILLS

அமெரிக்காவைச் சேர்ந்த E.L. Katz எனும் இயக்குனரின் முதல் படம். கிரைக் ஒரு மெக்கானிக். அவன் முதலாளி அன்று அவனை வேலையிலிருந்து தூக்கி விடுகிறான். இந்த சோகத்தை மறக்க.. கிரைக் ஒரு பாருக்குள் நுழைகிறான். அங்கே அவனுடய பள்ளித் தோழன். இருவருக்கும் தேவை பணம். 'பணம் தருகிறோம்.. சொல்லும் வேலைகளை செய்தால்' ,முன்வருகின்றனர் ஒரு பணக்காரத் தம்பதியினர். ஆரம்பத்தில் எல்லாம் சுகம். பின்னர்தான் தெரிகிறது.. அந்த தம்பதியினர் பயங்கரமான சைக்கோ. அவர்கள் சொல்லும் வேலைகளா.. திகிலோ திகில்.

2:00 pm : The Hunt (Jagten)

தாமஸ் விண்டர்பெர்க் எனும் இயக்குனரின் டேனிஷ் திரைப்படம். நீங்கள் ஒரு நடுத்தர வயதுக்காரர். ஒரு 10 வயசு சிறுமியுடன் பாசமாக பழகுகிறீர்கள். எந்த உள்நோக்கமும் இல்லை. தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக.. திடீரென அந்தச் சிறுமி உங்கள் மீது புகார் கொடுத்தால்.. உங்கள் மனநிலை? சமூகத்தில் உங்கள் கௌரவம்?. 40 வயது லூகாசுக்கு இதனால் வேலையே போய்விடும் நிலை.. விட்டால் ஜெயிலில் போட்டு சாகடித்துவிடுவார்கள். அந்தச் சிறுமியை அவன் ஒன்றும் செய்ததில்லை. அவன் காதலித்தது, உறவாடியது அவன் வயதொத்த நாட்ஜாவை. சிறுமி ஏன் அந்த அன்பான அங்கிள் மீது அப்படியொரு அபாண்டம் சொன்னாள்?.

லூகாஸாக நடித்த மேட்ஸ் மிக்கல்சென்னுக்கு சென்ற வருட கேன்ஸ் விருதை வென்று தந்த படம்.

4:30 pm : Blue is the Warmest Color

காதல் மிக விசித்திரமானது. அது எப்போது வரும், எப்படி வரும், எவர்மீது வரும்.. தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும். அடீலுக்கும் அப்படி ஒரு காதல் வந்தது. எம்மா மீது. எம்மா அவளுடைய உறவுப்பெண். பெண் மேல் பெண்ணுக்கு காதல். இதனால்தான் எத்தனை மோதல்.. ஆப்பெல்லாடிஃப் கெசிசே என்கிற பிரெஞ்சு இயக்குனரின் படம்.

7:45 pm : TWO MOTHERS

லிஸ்சும் ராசும் பால்ய சிநேகிதிகள். அவரவர் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீட்டில் வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் ராசுக்கும் லிஸ்சின் மகனுக்கும் கெட்ட சிநேகிதம் உருவாக.. பழிக்குப் பழியாய் ராசின் கணவன் லிஸ்சுடன் அதே கெட்ட சிநேகிதம் கொள்கிறான். இரண்டு குடும்பங்கள்.. ஏகப்பட்ட உறவுக் குழப்பங்கள். கோகோ பிஃபோர் சேனல், க்ளோ போன்ற புகழ் பெற்ற படங்களை இயக்கிய ஆண் ஃபொண்டைன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆஸ்த்ரேலிய நாட்டின் அபூர்வ ராகங்கள்.

***********************

திரையரங்கம் : Woodlands Symphony

10:45 pm : BEACH GUARD IN WINTER.

டிராகனுக்கு பீச்சில் செக்யூரிட்டி வேலை. மிகவும் கஷ்டப்பட்டு கிடைத்த வேலை. வேலையும் அவ்வளவு எளிதானதல்ல. கடும் குளிரை பொறுத்துக் கொண்டாக வேண்டும். சிறு வயதிலிருந்தே டிராகனுக்கு கஷ்டம்.. கஷ்டம். வாழ்கை ஒரே சோக மாயம். அன்றைய தேதியில் ஒரே ஆறுதல் புதிதாய்க் கைகூடிய காதல். அந்தக் களிப்பில் வாழ்வை ஜெயித்துவிடப் பார்க்கும் டிராகனுக்கு மீண்டும் பின்னடைவு. காதலி பிரிந்து போக, அப்பா உலகை விட்டுப் போக.. கடைசியில் டிராகன் போராடி வெற்றிக் கொடி கட்டும் இனிய முடிவைக் கொண்ட படம்.

1:45 pm : 35 RHUMS

கிளேர் டென்னிஸ் எனும் பிரெஞ்சு பெண் இயக்குனரின் படம். லியோனில் ரயில் ஓட்டுனர். மனைவி டைவர்ஸ் வாங்கிக் கொண்டு போய்விட்டாள். அவனுக்கு இப்போது சொந்தபந்தம்.. உறவு.. என்று இருப்பது அவன் அன்பு மகள் ஒருத்திதான். மகள் ஒருவனைக் காதலிக்கிறாள். எந்த அப்பனுக்குத்தான் மகளின் காதல் பிடித்தது?. இந்த அப்பனுக்கும் பிடிக்கவில்லை. எதிர்க்கிறான். வழக்கம் போல் மகள் மறுக்கிறாள். திடீரென இவனுக்கு வேலை போய்விடுகிறது. அன்பு செலுத்தவும் ஆதரிக்கவும் மகளை விட்டால் வேறு கதி இல்லை. இப்போது லியோனில் மரியாதையாக மகளின் காதலுக்கு மரியாதை செய்தாக வேண்டும். செய்தானா?.

4:15 pm : SWEET EMMA, DEAR BOBE

'தி மெபிஸ்டோ' படத்தை இயக்கிய ஹங்கேரி இயக்குனரின் அடுத்த படைப்பு. புடாபெஸ்டில் எம்மாவும், போபியும் ஒரு கல்லூரியில் ரஷ்ய மொழி போதிப்பவர்களாக வேலை பார்க்கின்றனர். வருமானம் மிகக் குறைவு, இதனால் ஒரே அறையில் வாழ்க்கை. திடீரென சோவியத் ரஷ்யா உடைந்து துண்டுதுண்டாக.. கல்லூரி பாடத் திட்டத்திலிருந்து ரஷ்ய மொழி தூக்கப்படுகிறது. அதனால் வேலை போய் நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றனர் தோழிகள். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை. போபி ஆங்கிலம் கற்றுக் கொள்ள முற்படுகிறாள். எம்மா கல்யாணமான கல்லூரிப் பேராசிரியரை வளைத்துப் போடப் பார்க்கிறாள். இரு பெண்களின் கதை.. அரசியல் புயலில் சின்னாபின்னமான ஒரு தேசத்தின் கதையும் கூட.

6:45 pm : My Name Is Viola

இது அர்மேனியா நாட்டின் ஃபயர். அன்னாவின் உலகில் யாரும் இல்லை. அவளும் தனிமையும் மட்டுமே. அன்புக்கும் துணைக்கும் ஏங்குபவளுக்கு ஹயுகி எனும் தோழி கிடைக்கிறாள். காலப்போக்கில் அன்பு காதல் ஆகிறது. ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பு வந்திருக்கும் இந்நாளில் விவாதத்தை கிளப்பும் படம். இயக்கம்: ரூபன் கொச்சார்.

***************************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAMI

11:00 am : Mother, I Love you

'அம்மாவின் பொய்கள்'- ஞானக்கூத்தனின் அலுக்காத ஒரு கவிதை. அதுபோல் அம்மவிடம் நாம் சொல்லும் பொய்களும் சுவாரஸ்யமானவை. செய்த சிறுசிறு தவறுகளை மறைக்க அம்மாவிடம் ஆயிரம் பொய்கள் சொல்வோம். சிறுவயதில் அம்மா நமக்கு ஹிட்லர். ரேமண்ட் என்கிற சிறுவனுக்கும் அப்படித்தான். அவனுக்கு ஒரு கெட்ட பழக்கம். விளையாட்டாய் திருடும் குணம், அப்படி ஒரு நாள் திருடுபவன் அம்மாவிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க செய்யும் தந்திரங்களும் சொல்லும் பொய்களுமே படம். ரேமண்டின் கலாட்டாவுக்காக பார்க்கலாம்.

2:00 pm : Black Diamonds

கனவுகள் இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. ஆனால் கடைசி வரை அந்த கனவை துரத்திக் கொண்டு செல்பவர்கள் ஒரு சிலரே. . மாலியைச் சேர்ந்த அமாடோ மற்றும் மூஸாவுக்கு கால்பந்தாட்டம்தான் கனவு. கால் பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும், . வீட்டில் பிடுங்கித் தின்கிற வறுமை. வேலைக்குப் போனால்தான் அடுத்த வேளைச் சோறு. கால்பந்து ஆடப்போனால்.. அரை வயிறும் நிரம்பாது. ஆனால் நண்பர்கள் விடுவதாக இல்லை, ஐரோப்பாவுக்கு போய்ச் சேர்கின்றனர். அங்கே கனவு அவர்களைத் துரத்தியதா? அவர்கள் கனவைத் துரத்தினார்களா?

4:30 pm : LOVE ME

செமால் ஒரு மிடில் கிளாஸ் இளைஞன். அவனுக்கு ஒரே ஒரு கொள்கை. செய்தால் காதல் திருமணம்தான், அப்படிப்பட்டவனுக்கு வீட்டில் பெண் பார்த்து நிச்சயமும் முடிந்து விடுகிறது. பெண்ணின் முகத்தை பார்க்கக்கூட வழி இல்லை. இந்த உலக மகா சோகத்தை வா.. உக்ரைனில் ஒரு வாரம் குடித்து கழித்து விட்டு வருவோம் என்று நண்பர்கள் அவனை அழைத்துச் செல்கின்றனர். அந்த உக்ரைனில் ஒருத்தி. பெயர் சாஸ்சா. காதலன் அவளை ஏமாற்றி விட்டான். அந்தக் கடுப்பில் இன்னொருவனிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளும் முடிவில் இருக்கிறாள். செமால்-சாஸ்சா காவிய சந்திப்பு நிகழ்கிறது. வழக்கமான கதை. வழக்கமில்லாத கிளைமாக்ஸ்.

***************************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAMI

1:45 pm : The Cleaner

அயல் மொழிப் பிரிவில் இந்த வருட ஆஸ்கருக்கு பெரு நாடு அனுப்பியிருக்கும் படம். யுசெபோ ஒரு ஃபாரன்சிக் கிளீனர். பிணங்கள் விழுந்தால் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும், அதுதான் அவனுடைய வேலை. திடீரென்று நாட்டில் விஷஜுரம். அதனால் ஊரில் ஏகப்பட்ட சாவுகள், யுசெபோ ஒரு வீட்டில் பிணங்களை அப்புறப்படுத்தும்போது அலமாரியில் ஒளிந்திருக்கும் ஒரு சிறுவனைப் பார்க்கிறான். அவன் பெற்றோர் இறந்துவிட அந்த வீட்டில் அவன்தான் மிச்சம், அந்தக் குடும்பத்தின் மீதி நபர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைக்கிறான் யுசெபோ,

4:15 pm : NO

சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் திடீரென தேர்தல் அறிவிப்புகள் வரும். நாட்டில் ஜனநாயகம் மலரும் என அதிபர் அறிவிப்பார். அதைத் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்கள் எப்படி பட்டவை?. சர்வாதிகாரியின் தில்லாலங்கடி எப்படி இருக்கும்? இதை விளக்கும் படம். சிலியின் பிரபல எழுத்தாளர் எல் ப்லீபிஸ்சிடோ எழுதி மேடையேற்றப்படாத நாடகமே படத்தின் கதை. 15 வருட கடும் மிலிட்டரி ஆட்சிக்கு பிறகு சிலியின் டிக்டேடர் தேர்தலை அறிவிக்கிறார். எதிர்கட்சிகளை உளவு பார்த்தும் பணநெருக்கடி கொடுத்தும் சதிவலை பின்ன.. நாயகன் ரேணி அந்தச் சதிகளை முறியடிக்க களம் இறங்குகிறான். மோட்டார் சைக்கிள் டயரீஸ் படத்தில் சேவாக நடித்த காயல் கிரேசியா பெர்னால் இப்படத்தில் ரேணியாக மிரட்டியுள்ளார். பாப்லோ லாரெய்ன் இயக்கிய சிலி நாட்டுத் திரைப்படம்.

6:45 pm : Arrest Me

பிரான்சின் ஒரு காவல் நிலையத்துக்குள் நுழையும் ஒரு 40 வயதுப் பெண் தன்னை கைது செய்யச் சொல்கிறாள். '10 ஆண்டுகளுக்கு முன் நான் என் கணவனைக் கொன்று விட்டேன்'. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கும் அவளை போலீஸ் விசாரிக்க.. அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம் விரிகிறது. தன் கணவனை மாடி ஜன்னலிருந்து அவள் தள்ளிவிட எது காரணமாக இருந்தது?. 10 வருஷம் கழித்து தூக்கத்தில் ஏன் அவள் மனசாட்சி அவளை எழுப்பி.. செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்தது?. இயக்கம்: ழான் பால் லிலியன்ஃபீல்ட்.

**************************

திரையரங்கம் : INOX - 2

6:45 pm : Tricked

ரெம்கோ அலட்டிக் கொள்ளாதவன். வாழ்வில் அசால்ட்டாய் வெற்றிக் கொடி நட்டவன். பணம், புகழ், அழகான மனைவி. அவன் 50வது பிறந்த நாளுக்கு மனைவி அட்டகாசமான பார்ட்டி ஏற்பாடு செய்கிறாள். கொண்டாட்டப் பார்ட்டியை கெடுக்க வந்து சேர்கிறாள் நாட்ஜா. அவள் ரெம்கோவின் முதல் மனைவி. 'உன்னால் நான் இப்போது கர்ப்பம்' என்கிறாள் நாட்ஜா. ரெம்கோவுக்கு இப்போது திண்டாட்டம். 'இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிடுவேன்.. உன் கம்பனியை எனக்கு அடிமாட்டு ரேட்டுக்கு விற்று விடு'- இப்படி ஒரு பிளாக்மெய்லர். நாட்ஜா நிஜமாலுமே கர்ப்பமா? இல்லை வயிற்றில் தலகாணியா?.

*****************************

திரையரங்கம் : INOX - 3

4:30 pm : Before Snowfall

அண்ணன் சியார் கஷ்ட்டப்பட்டு தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். லாஸ்ட் மினிட் தங்கை காதலனுடன் ஓடிப் போகிறாள். குடும்ப மானம் போய் விட்டதென.. பைக்கை எடுத்துக் கொண்டு அண்ணன் தங்கையை துரத்துகிறான். அண்ணனுக்கு கொலைவெறி. ஓடும் காதலர்களுக்கு உயிர்வெறி. காடு, மலை, கிராமத்தில்.. நிகழும் இந்த துரத்தல் பயணத்தில் அண்ணனுடன் ஒட்டி கொள்கிறாள் எவின் என்கிற நாடோடிப் பெண். எவினுடன் சிநேகம்.. அண்ணனை என்ன செய்தது?. கௌரவக் கொலை எந்த நாட்டில்தான் இல்லை..

**********************

திரையரங்கம் : CASINO

11:00 am : IF ONLY

பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்படம். இயக்கியிருப்பவர் ஜெரால்ட் டராஜ். நம்மூர் துஷ்யந்தன் சகுந்தலை கதை. ஆனால் அப்படியே உல்டா. இங்கே மறப்பது சகுந்தலை. அன்று ஆண்ட்ரியாவுக்கும் ராபர்ட்டுக்கும் கல்யாணம். போட்டோ எடுக்க வந்த டென்னிசுக்கு அதிர்ச்சி. மணமகள் ஆண்ட்ரியா அவன் அண்ணனின் காதலி. டென்னிஸ் அவளைத் தனியே இழுத்துக் கொண்டு போய். இது நியாயமா.. இனி என் அண்ணனின் கதி? என்று அவளை உலுக்குகிறான். மேற்கொண்டு அந்தக் கல்யாணம் நடந்ததா?.. டென்னிஸ் அந்த கல்யாணத்தை போட்டோ எடுத்தானா?.

2:00 pm : A STRANGER

உத்தப்புரத்தின் சுவர் அதன் மனிதர்களைப் பிரித்திருப்பதைப் போல்.. மொஸ்தார் நாட்டிலும் ஒரு சுவர். கண்ணுக்கு புலப்படாத சுவர். அங்கே முஸ்லிம்களுக்கும் க்ரோட் இனத்தவருக்கும் தீராத பகை. ஸ்லாவ்கோ க்ரோட் இனத்தவன். அவன் மனைவி மற்றும் மகனுடன் க்ரோட்டின் பகுதியில் வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் அவனுடய நெருங்கிய நண்பன் இறந்த செய்தி வருகிறது. அந்த நண்பன் ஒரு முஸ்லிம். ஸ்லாவ்கோ நண்பனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அதை அவனது சொந்த இனத்தவர்கள் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பை மீறி முஸ்லிம் பகுதிக்கு பயணிக்கிறான் அவன். தன் சொந்த நாட்டிலேயே தன்னை அந்நியனாய் உணரும் ஒருவனின் கதை. இயக்கம்: போபோ ஜெல்ஜிக்.

4:30 pm : Salvo

சால்வோ கூலிக்கு கொலை செய்பவன். அன்று எவனைக் கொல்ல வேண்டுமோ அவனுக்கு ஒரு தங்கை. பாவம் கண்ணிலாதவள். கொடுத்த அசைன்மென்ட்படி அண்ணனைக் கொன்று விட.. அதன் பிறகு குருட்டு தங்கை என்ன ஆனாள்?. கொலைகாரன் அவளை என்ன செய்தான்?. விறுவிறுப்பாக நகரும் இத்தாலிய மொழிப் படம், இயக்குனர்கள் இருவர்: Fabio Grassadonia, Antonio Piazza.

7:00 pm : JIN

நவீன ரெட் ரைடிங் உட். பேத்தி ஜின்னுக்கு தன் பாட்டியைப் பார்க்க வேண்டும். பாட்டி இருப்பதோ.. மலை மீது அடர்ந்த காட்டுப் பகுதியில். ஜின் காட்டுக்குப் போக.. நகரத்தில் இருந்தவளுக்கு காடு பிடித்துப் போய் விடுகிறது. அந்தச் சூழல் மண் காற்று மரம் செடி கொடி விலங்கு பறவை என்று எல்லாம் அவளுக்கு புதிதாய் இருக்க.. உருகிப் போகிறாள். மறுபடியும் ஊருக்குத் திரும்பினால் யுத்தம் வந்துவிடுகிறது. மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக் கொண்டு சாகிறார்கள். நகரெங்கும் கொலைவெறித் தாண்டவம். ஜின்னுக்கு உண்மை தெரிகிறது.. மிருகங்கள் காட்டில் இல்லை.. நகரத்தில் மனித உருவில் அவை நடமாடுகின்றன. ஜின் திரும்ப தன் மனிதர்களைச் சந்திக்க காட்டுக்கே போய்விடுகிறாள். மேஜிக்கல் ரியலிசப் படம்.

******************************

சென்னை சர்வதேச திரைப்பட விழாடிசம்பர் 16 படங்களின் முன்னோட்டம்கதைச் சுருக்கம்CIFF 2013Synopsis

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x