Published : 05 Jan 2017 09:37 PM
Last Updated : 05 Jan 2017 09:37 PM

சென்னை திரைப்பட விழா: ஜன.6-ல் என்ன படம் பார்க்கலாம்?

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.6) கண்டு ரசிக்கத்தக்க படங்கள் - சில பரிந்துரைகள்:

கேஸினோ | மாலை 4.40 மணி | THE HAPPIEST DAY IN THE LIFE OF OLLII MAKI | DIR: JUHO KUHO KUOSMANEN | FINLAND | 2016 | 90'

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பின்லாந்து நாட்டு சார்பில் முதன்முறையாக பங்கேற்க ஆலி மக்கிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்த நிலையில் இரண்டாவது சுற்றில் படுதோல்வி அடைந்து நாக் அவுட் ஆகிறார். ஆனால், அந்த தினத்தை ஆலி மக்கி, தனது வாழ்வின் சிறந்த நாள் எனக் கூறுகிறார். அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதே கதை. பின்லாந்து சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட படைப்பு.

ஐனாக்ஸ்-2 | காலை 10.00 மணி | OUR EVERYDAY LIFE / NASA SVAKODNEVNA | DIR: MARCO BELLOCCHIO | BOSNIA AND HERZEGOVINA, CROATIA, GERMANY, SLOVENIA |2015 | 90'

முன்னாள் இளம் போர் வீரர் ஒருவர் போருக்குப் பிந்தைய போஸ்னியாவின் தீர்வுகாணப்படாத அரசியல் - பொருளாதார கடினச் சூழ்நிலைமைகளை எதிர்கொள்கிறார். இவரது தந்தை முகமட் தொழிற்சாலை ஒன்றின் உயரதிகாரி. ஆனால் இவரது தலைமைக்கு எதிராக சதி நடைபெறுகிறது. தாய் மரியா ஓய்வு பெற்ற ஆசிரியை, சூழ்நிலைகள் நல்ல நிலைமைகளுக்குத் திரும்பும் என்ற தீரா நம்பிக்கையுடன் இருப்பவர். திருமணமாகாத ஆனால் கருத்தரித்த மகள் செனடா, ஆகியோரின் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், வாழ்க்கைத் தெரிவுகள் குறித்த தந்தையின் கண்டிப்புகள் இவற்றுக்கிடையே மோசமடையும் தாயின் உடல்நிலை. அதன் பின்..?

ஐனாக்ஸ்-2 | மாலை 4.30 மணி | HORMONIUM | FUCHI NI TATSU | DIR: KOJI FUKADA | JAPAN | 2016 | 118'

இயக்குநர் கொஜி ஃபுகாடா தன்னுடைய ஹார்மோனியம் படத்தின் மூலம் சாதாரண ஜப்பானிய குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை, உள்நாட்டு விவகாரத்தை விவரமாகப் பேசியிருக்கிறார். தோஷியோ, அவரின் மனைவி, இளைய மகள் ஹொட்டாடு ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர். தோஷியோவின் வொர்க்‌ஷாப்பில், அப்போதுதான் சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் யசாகாவ வேலைக்குச் சேர்க்கின்றனர். அதன்பிறகு தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

ஐனாக்ஸ்-3 | காலை 10 மணி | AS I OPEN MY EYES | A PEINE J'OUVRE LES YEUX | DIR: LEYLA BOUZID | TUNISIA | 2015 | 102'

துனீசியாவின் கோடை காலம் 2010. புரட்சிக்கு சில மாதங்கள் முன்பு. 18 வயதான ஃபாரா படித்து முடிக்கிறாள். அவள் குடும்பத்தினர் அவளை மருத்துவராக வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் அவளுக்கோ தனது இசைக்குழுவின் மீது ஈடுபாடு. அதில் ஒருவனுடன் காதல். வாழ்க்கையை கொண்டாடுவது, குடிப்பது, இரவில் நகரத்தை சுற்றுவது என வாழ்ந்து வருகிறாள் ஃபாரா. அவளது தாய் ஹயத்துக்கு துனீசியாவும், அதில் நிறைந்துள்ள ஆபத்துகளும் தெரியும். அடக்குமுறை நிறைந்த தன் சமூகத்தையும், குடும்பத்தையும் ஃபாரா எப்படி எதிர்த்தாள்?

ஐனாக்ஸ்-3 | பகல் 12.00 மணி | AMETEUR TEENS | BORN DIGITAL | DIR: NIKLAUS HILBER | SWITZERLAND | 2015 | 92'

14 வயது பள்ளிச் சிறுவர்கள் குழு ஒன்று இணையத்துக்கு அடிமையாகிக் கிடக்கின்றது. அவர்களின் தினசரி வாழ்க்கையை சமூக ஊடகமே தீர்மானிக்கிறது. இணையம் வழியான பாலியல் மீறல்களும் நடக்கின்றன.

ஐனாக்ஸ்-3 | பிற்பகல் 2.15 மணி | NAKOM | NAKOM | DIR: T.W.PITTMAN & KELLY DANIELA NORRIS | GHANA | 2016 | 92'

தனது தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின், மருத்துவ மாணவனான இட்ரிஸு நகரத்திலிருக்கும் சுக வாழ்க்கையை விடுத்து தனது சொந்த விவசாய கிராமமான நகோமுக்கு செல்கிறான். நாம் தான் தற்போது குடும்பத்தின் தலைமை என உணரும் இட்ரிஸு, தனது அப்பா வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்கிறான். அவனது குடும்பத்தையே அழிக்கக்கூடிய வகையில் இருக்கும் அந்த கடனை அடைக்க முயற்சிக்கும் போது, அந்த அழகான கிராமத்தின் அழகையும், சோகத்தையும் தெரிந்து கொள்கிறான். நகரத்தில் தனக்கான எதிர்காலத்தை தேட வேண்டுமா, அல்லது தன் குடும்பத்தோடு சேர்த்து ஒட்டு மொத்த கிராமத்துக்காகவும் தனது எதிர்காலத்தை செலவிட வேண்டுமா என தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

ஐனாக்ஸ்-3 | இரவு 7.00 | AFTERIMAGE | POWIDOKI | DIR: ANDRZEJ WAJDA | POLND | 2016 | 98'

1945ல் ஸ்டாலின் போலந்தை தனது பிடிக்குள் வந்திருந்தபொழுது புகழ்பெற்ற ஓவியர் வ்லாட்டுஸ்லா ஸ்ரெஸ்மின்ஸ்கி சமூக ரியலிச கோட்பாடுகளோடு தனது கலையை பொருத்திக்கொள்ள மறுக்கிறான். இதனால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். இறுதியாக அருங்காட்சியக சுவர்களில் வரையப்பட்ட அவரது ஓவியங்களும் அழிக்கப்படுகின்றன. சில மாணவர்களின் உதவியோடு கம்யூனிஸ்ட் கட்சிக்கெதிராகவும் அறிவுசார் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் கலைசார்ந்த எதிர்ப்புணர்வோடு போராடத் தொடங்குகிறார்.

ஆர்.கே.வி. | இரவு 7.15 மணி | PIONEER | PIONER | DIR: ERIK SKJOLDBJAERG | NORWAY | 2016 | 106'

நார்வேயில் 80களில் எண்ணெய் கிணறு தோண்டிய காலத்தில் நடத்தப்பட்ட சதித் திட்டங்களை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எண்ணெய் வளமும் எரிவாயுக்களும் பொதிந்துகிடக்கும் வடக்கு கடல் பகுதியிலிருந்து 500 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை குழாய் செலுத்தி அதிலிருந்து எண்ணெய்யை கரைக்குக் கொண்டுவர திட்டமிடுகின்றனர். தொழில்முறையாக நீரில் மூழ்குபவரான பீட்டர் அதை ஈடுபாட்டோடு ஆழமான நார்வே கடலின் தரைமட்டத்திற்கு ஒழுக்கமும், பலமும் ஊக்கத்துடனும் இந்த முக்கியமான பணியை பொறுப்பேற்று செல்கிறார். ஒரு சின்ன விபத்தில் திடீரென்று எல்லாமும் மாறிவிடுகிறது. தனது பார்வையை அவர் இழக்கிறார். தனது தலைக்கு மேலே தன் உயிருக்கு ஆபத்து என்ற நிலை தயாராக இருப்பதை அவர் உணர்கிறார்.

பெலாஸோ | காலை 10.00 மணி | AFTER THE STORM / UMI YORI MO MADA FUKKU | DIR: HIROKAZU KOREEDA | JAPAN | 2016 | 117'

புகழ்பெற்ற எழுத்தாளர் ரியோட்டா. தனக்குக் கிடைத்த பணத்தையெல்லாம் சூதாட்டம் மூலம் செலவழிக்கிறான். இதனால் அவனுடைய குடும்பத்துக்கு, அவனின் குழந்தைகளுக்கு நேரம் செலவிடுவதில்லை. ரியோட்டாவின் தந்தை மறைவுக்குப் பிறகு, அவனின் வயதான தாயும், அழகான முன்னாள் மனைவியும் தனியாகச் செல்கிறார்கள். நெடு நாட்கள் கழித்து புயல்வீசிய ஒரு கோடை இரவில், ரியோட்டாவுக்கும், குடும்பத்துக்கும் இடையில் உண்மையான பந்தம் மீள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x