Last Updated : 17 Apr, 2017 03:46 PM

 

Published : 17 Apr 2017 03:46 PM
Last Updated : 17 Apr 2017 03:46 PM

நான்லீனியர்: சீயான் விக்ரமின் கண்கள் காட்டும் வித்தை!

இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை ருசித்த பல போட்டிகளில் ராகுல் திராவிட் முக்கியப் பங்களிப்பை வழங்கியிருப்பார். அதைக் காட்டிலும் அணி தோல்வியைச் சந்தித்த பல போட்டிகளை எடுத்துக் கொண்டால், மற்றவர்களை விட அவர்தான் அதிக ரன்களைச் சேர்த்து வெற்றிக்குப் போராடியிருப்பதைக் காணமுடியும். இதைத்தான் வர்ணனையாளர்கள் 'கன்சிஸ்டென்சி' என்று கூறுவர்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நேர்த்தியான பங்களிப்பை அளிப்பதில் முக்கியமானவர் 'சீயான்' விக்ரம். வர்த்தக ரீதியிலான வெற்றிப் படங்களுக்கு எந்தவித குறைவும் இல்லாத அளவுக்கு தோல்வியைத் தழுவிய படங்களிலும் அவரது நடிப்புத் திறன் மெச்சத்தக்கதாக இருக்கும்.

ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளை கண்களில் வெளிப்படுத்துவதுதான் நடிப்புக் கலையில் அடிப்படையானதும் கடினமானதுமான செயல் என்று கருதுகிறேன். அந்த வகையில் நடிகர் விக்ரமின் கண்களைக் கவனித்து ரசிப்பதற்காகவே அவரது எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்க்கலாம்.

'மாஸ் ஹீரோ' கதாபாத்திரங்களோ, இயல்பு மீறாத கதாபாத்திரங்களோ, அதீத உணர்வுகளைக் கொண்ட கதாபாத்திரங்களோ அல்லது உறுதுணை கதாபாத்திரங்களோ எதுவாக இருந்தாலும் அவற்றின் உண்மைத் தன்மையை உணரவைக்கும் வகையில் விக்ரமின் நடிப்புக் கலையானது அவரது கண்களில் இருந்து தொடங்குவதை சற்றே கூர்மையாக கவனிக்க முடியும். பெரும்பாலும் க்ளோசப் ஷாட்களில் மட்டும்தான் நடிகர்கள் தங்கள் கண்களில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவர். ஆனால், விக்ரம் போன்ற மிகச் சிலர்தான் கேமரா முன்பு நின்றாலே கண்களாலும் கதை பேசத் தொடங்குவர்.

'விக்ரம் ஓர் அர்ப்பணிப்பு மிக்க நடிகர்' என்று குறிப்பிடுவது, 'வானம் நீல நிறம்' என்று சொல்வதற்கு ஒப்பானது. 'ஐ' படத்தில் அவர் உடல் ரீதியில் மேற்கொண்ட மெனக்கெடல் வியக்கத்தக்கது. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தன்னிலை மறந்தவராக தன்னைத் தயார்படுத்துவதற்கு அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை, 'இதற்கு மேல் உடம்பைக் குறைத்தால் உயிருக்கே ஆபத்து' என்று அவரை எச்சரித்துக் காக்கும் அளவுக்குப் போய்விட்டது என்று கேட்டறிந்திருக்கிறேன்.

'ஐ' படத்தை எடுத்துக்கொண்டாலே கூட, விக்ரமின் கண்கள் நிகழ்த்தும் கலையைக் கண்டறியலாம். பார்வையாளரின் கவனம் முழுவதும் தன் உடம்பு மீதும், உடல் அசைவுகள் மீதும்தான் இருக்கப் போகிறது என்றபோதும் விக்ரம் தன் கண்களாலும் சிறப்பாக நடித்திருப்பார். தன்னை வருத்திக்கொண்டு இட்ட ஒப்பனையின் விளைவுகளையும் வலிகளையும் கருத்தில்கொள்ளாமல் இதைச் செய்வது கூடுதல் சிறப்பு.

விக்ரம் நடித்து அதிகம் கவனம் ஈர்க்காத படங்களிலும் அவர் இந்த கண்காட்டும் வித்தையைக் கைவிடாமல் நிகழ்த்தியிருப்பார். அப்படி ஒரு படம் 'டேவிட்'. அதில் இடம்பெற்றுள்ள 'கனவே கனவே' பாடல் வீடியோவை அவ்வப்போது யூடியூப் சேனலில் பார்ப்பது உண்டு. அது, ரசிகர் ஒருவர் பதிவேற்றிய வீடியோ. அந்தப் பாடலின் காட்சிகளை இரண்டாவது முறை பார்க்கும்போது விக்ரமின் கண்கள் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். மகிழ்ச்சி, துயரம், உற்சாகம், வலி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அமைதி, வெறுமை... இப்படி அனைத்து வெளிப்பாடுகளையும் கண்கள் வழி நமக்குக் கடத்துவார் நடிகர் விக்ரம்.

'சீயான்' விக்ரமும் இன்று (ஏப்.17) பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வேளையில், அவரது கண்காட்டும் வித்தை இந்த 5 நிமிட வீடியோ பதிவு மூலம் கண்டு ரசிக்கலாமா..?