

ரஷ்ய கலாச்சார மையம் | ஜன.11 - பிற்பகல் 2.00 மணி
NILA | DIR: SELVAMANI SELVARAJ | INDIA | 2015 | 96'
'நிலா' படத்தை பார்க்க நான் திட்டமிடவில்லை. ஆனால், படத்தின் இயக்குநர் (பிட்ஸ் பிலானி எனது கல்லூரியில் படித்தவர். இன்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும், சினிமாவுக்கு ஏதோ சம்பந்தம் இருக்கிறது போல) கிட்டத்தட்ட என் கையை முறுக்கி இந்தப் படத்தை பார்க்க வைத்தார். (படத்தை வாங்கி வெளியிட நினைக்கும் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கான காட்சி அது) இயக்குநர் என்னை கட்டாயப்படுத்தியது நல்லது என நினைக்கிறேன்.
படம் ஒரு டாக்சி டிரைவர் மற்றும் அவர் வண்டியில் அடிக்கடி பயணிக்கும் ஒரு மர்மமான பெண்ணைப் பற்றியது. படத்தின் தலைப்பு ஓர் உருவகம். அந்தப் பெண்ணை அடைய முடியாத நிலையை, அவள் இந்த டிரைவரின் சோகமான இரவு நேர வாழ்க்கையில் கொண்டு வரும் வெளிச்சத்தை குறிக்கிறது. ஒரு கட்டத்தில் அவளுடைய இருண்ட பக்கத்தைப் பற்றியும் இந்த டிரைவர் தெரிந்துகொள்கிறார். அந்த இருண்ட பக்கத்தை யூகிப்பது அவ்வளவு கடினமில்லை. ஆனால், அவன் தெரிந்தகொள்ளும் இருண்ட பக்கத்தைப் பற்றிய படம் அல்ல இது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான், புரிந்து கொள்கிறான், என்ன செய்வான் என்பதே.
கேட்பதற்கு இது வழக்கமான கதையைப் போல இருக்கலாம். ஆனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது அதிக வார்த்தைகளால் அல்ல. சிறிய பார்வைகளால், தயக்கங்களால், சைகைகளால். இந்தப் படத்தை இப்படியும் விவரிக்கலாம். ஆங்கிலத்தில் வெளியான 'பிஃபோர் சன்ரைஸ்' படத்தைப் போல, ஆனால் அதிக மவுனத்துடன். படத்தின் ஓட்டத்தில் நன்றாக இருந்த அம்சங்கள் சில தடுமாற்றங்களை விட (சிறிய வயது பிளாஷ்பேக் ஒன்று, சில பாடல்கள், சில காட்சிகளில் இருந்த இறுக்கம்) அதிகமாக இருந்ததால் அபூர்வமான ஒரு விஷயத்தை நான் செய்தேன். அந்தப் படம் குறித்து ட்வீட் செய்தேன். விரைவில் படம் பொதுமக்களை சென்றடையட்டும்.
- பரத்வாஜ் ரங்கன்,எழுத்தாளர், தேசிய விருது பெற்ற விமர்சகர் | தி இந்து (ஆங்கிலம்)