Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

டீக்கடையாகும் ட்விட்டர்: அஜித் X விஜய்

ஹேஷ்டேக் (#) - ட்விட்டரில் பயன்படுத்தப்படும் குறியீடு, இணைய உலகில் ஒரு ஆயுதமாகவே உருவெடுத்திருக்கிறது. துனீசிய எழுச்சி உள்ளிட்ட நிகழ்வுகளில் இக்குறியீட்டின் பங்கு மிகப் பெரியது.

அதாவது, ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, அதன்மூலம் ட்விட்டரில் குறும்பதிவுகளை வெளியிட்டு, அதை வைத்துப் புதுப்போக்குகளை உருவாக்குவார்கள். நொடிக்கு ஏராளமான பதிவுகள் இடப்படும்போது, அதுசார்ந்த ஹேஷ்டேக்குகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்.

தமிழ் இணையவாசிகளில் இதை அதிக அளவில் பின்பற்றுபவர்கள் சினிமா ரசிகர்கள் தான். அஜித்தின் 'ஆரம்பம்' அறிவிப்பு வெளியானதிலிருந்து, தமிழ்ச் சூழலில் ஹேஷ்டேக்கை கேலிப்பொருளாக்கிவிட்டார்கள். அவ்வப்போது அந்தப் படம் பற்றிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, இந்திய அளவில் ஒரு போக்கை உருவாக்கிவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

இங்கேதான் ‘புரட்சி’ வெடிக்கத் தொடங்குகிறது. விஜயைக் கிண்டல் செய்து ஹேஷ்டேக் உருவாக்கி, அதனையும் இந்திய அளவில் பிரபலப்படுத்திவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

'ஆரம்பம்' வசூல், 'துப்பாக்கி'யின் வசூலை 4 நாட்களில் தாண்டிவிட்டது என்ற பொருளாதாரப் புரட்சியைக் கூறும் #ArrambamDitchesThuppakkiCollectionsInJust4Days என்ற ஹேஷ்டேக் தேச அளவில் பிரபலமானது.

'பில்லா 2' கிண்டல் செய்யப்பட்டதற்குப் பழி தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட #Arrambam rapedvijayfans என்ற ஹேஷ்டேக் உலகுக்கு என்ன சேதி சொல்கிறது? அதுவும் தேச அளவில் பிரபலமானது.

100 கோடி வசூல் செய்தது 'துப்பாக்கி' என்று விஜய் ரசிகர் ஒருவர் பதிவிட, வெகுண்டெழுந்த அஜித் சமூகம் #VijayfansAnd100cComedyABetterLoveStoryThanTwilight என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அர்ச்சனை செய்தனர்.

#ThuppakkiNothingfrontofalwar #POKKIRI LOSES TOANJENEYA என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹேஷ்டேக்குகள் தமிழர்களின் விவாதப் பொருள்களை உலகுக்கு எடுத்துரைத்தன.

'இருங்கடீ, ஜில்லா டீஸர் ரிலீஸ் ஆகட்டும்... உங்களை வெச்சிக்கிறோம்' என்று நெஞ்சு பொறுக்காமல் ட்விட்டரில் காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். பழிதீர்க்கும் தருணமாம் அது. ஹேஷ்டேக் என்பது உலக அளவில் மிகப் பெரிய ஆயுதமாகக் கருதப்படுகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினை, சமச்சீர்க் கல்வி, சட்டமன்றத் தேர்தல், கூடங்குளம், மீனவர் படுகொலைகள், காமன்ல்வெத் மாநாடு... இத்தகைய விவகாரங்கள் உச்சத்தில் இருக்கும்போதுகூட, தமிழகப் பிரச்சினைகள் சார்ந்த ஹேஷ்டேக்குகள் தேச அளவில் பிரபலமாவது இல்லை.

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்குக்கூட ஹேஷ்டேக்கைப் பெரிதாகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், தமிழ்ச் சூழலிலோ இணையத்தில் ஆதிக்கம் காட்டும் அஜித், விஜய் ரசிகர்கள் தங்கள் போராட்டத்தால் தமிழருக்குப் புகழ் சேர்த்துவருகின்றனர்.

தைத் திருநாளில் தமிழரின் பெருமையை உலகம் அறிய மற்றோர் வாய்ப்பு பிரகாசமாகக் காத்திருக்கிறது. ஆம், அன்றுதான் விஜயின் 'ஜில்லா', அஜித்தின் 'வீரம்' ஒரே நாளில் ரிலீஸ்.

தொடர்புக்கு: esakkimuthuk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x