Last Updated : 27 Jan, 2014 11:03 AM

 

Published : 27 Jan 2014 11:03 AM
Last Updated : 27 Jan 2014 11:03 AM

கோலி சோடா: தமிழ் சினிமாவில் ஒரு சூடான அனுபவம்!

தெறிக்க தெறிக்க மசாலா படம் எடுக்க என்ன தேவை... என்னதான் தேவை:

1. மதுரை பின்னணியா?

2. பஞ்ச் வசனங்களா?

3. கஜ புஜ பராக்கிரம சண்டைக் காட்சிகளா?

4. ஜிவ்வென்று ஈர்க்கும் ஐட்டெம் டான்சுகளா?

5. சந்தானத்தின் ஒன் லைனெர்களா?

6. சம்பந்தமற்ற சேசிங் காட்சிகளா?

7. அனைத்திற்கும் மேலாக மாஸ் ஹீரோக்களா?

ஸ்டாப் இட் பாஸ்! இது எல்லாமே வெறும் கருவேப்பிலைகள்தான். மசாலா படங்களுக்கான முக்கிய ஆணிவேர் வேகத்தடையை தகர்த்தெறியும் திரைக்கதை. அப்படி ஒரு திரைக்கதையை சரியான கதாப்பாத்திரங்களை கொண்டு டெலிவர் செய்தால் கோலிவிடும் பாய்ஸ்சைக் கூட கில்லியாக மாற்றலாம் என்பதை உணர்த்தியுள்ளது 'கோலி சோடா'.

கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஹோட்டலை நடத்தும் நாலு விடலை பசங்க. இவர்கள் ஒரு சம்பவத்தில் ஏரியா தாதாவின் அடியாளை அடிக்க நேர்கிறது. அவ்வளவுதான் சிக்கல் சூடு பிடிக்கிறது. கடைசியில் இந்த கோலி சோடாக்கள் அவர்களுக்கு எப்படி தண்ணி காட்டுகிறார்கள் என்பது தான் கதைக்களம்.

உள்ளூர் திரையரங்கில் கண்டிறாத கதை என்று விவரிக்க இயலாத ஒரு களம்தான் கோலி சோடாவிலும். இதே அவுட்லைனில் ஏகப்பட்ட படங்களை பார்த்திருப்போம். ஆனால் இந்த நான்கு சூடான கதை மாந்தர்கள் அதை புதுமையாக தோன்ற வைக்கிறார்கள்.

ஈ, ஒரு மனிதனை பழிவாங்குறதா? இதெல்லாம் யார் நம்புவா? படம் எப்படி ஓடும்? என்று ராஜமௌலி நினைத்திருந்தாலோ, ஏதோ கிமு கிபிக்கு முன்வாழ்ந்த டைனோசர்களை மனிதன் உருவாக்கி, அதனால் அவன் சிக்கிக் கொள்வது சாத்தியமுள்ள ஒரு கதையா? என்று ஸ்பீல்பேர்க் நினைத்திருந்தாலோ 'நான் ஈ', 'ஜுராசிக் பார்க்' போன்ற படங்கள் வெற்றி அடைந்திருக்காது. அசாத்தியம் எனத் தோன்றும் விஷயத்தை சாத்தியமாக்கி, பார்வையாளரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் படங்கள் தரும் சுகமே அலாதி தான்.

சேரனின் தயாரிப்பில் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடாவில் இறங்கியுள்ளார். முதல் ஒரு மணி நேரத்திற்கு பொறுமையாக அடி மேல் அடி வைத்து பேஸ்மென்ட்டை ஸ்ட்ராங்காக்கி ஓங்கி அடிக்கிறார் திரைக்கதையில்.

எப்படியும் ஹீரோக்கள்தான் வெற்றி பெறுவர் என்பது படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரிந்ததே. அறிந்தும் பட நிகழ்வுகள் நம்மை நகம் கடிக்க வைக்கிறது, அடுத்து அடுத்து என்ற முடிச்சு அழகாக கோக்கப்பட்டிருந்தது.

மசாலா படங்களுக்கு எப்போதுமே இண்டர்வல் பிளாக் மிக முக்கிய அம்சம். வில்லனை மிகுந்த வஞ்சகனாக காட்டி இதுவரை பொறுத்த நாயகனை பொங்கி எழு என்று தோன்ற வைக்கும் அந்த ஒரு காட்சி படத்தின் மிக முக்கிய அம்சம். அதிலும் இக்கதையில் நான்கு ஹீரோக்கள் கிளம்பி வா, இவர்களை கிளப்ப வா என்று ஆடியன்சை கூக்குரலிட வைக்கும் அந்தக் காட்சி ஓஹோ.

இன்டர்வல் வரை இமான் அண்ணாச்சியின் நகைச்சுவையோ, பசங்களின் காதலோ, சென்டிமென்ட் காட்சிகளோ எதுவுமே நமக்கு மிகையாக தோன்றவில்லை. இந்தப் பூனைகள் புலியாக மாறுகின்ற மார்க்கெட் சண்டைக் காட்சி வரைக்கும் படம் சூப்பர். அதற்குப் பின் வரும் நிகழ்வுகள் சினிமாவுக்கே உரித்தான மிகையை எட்டுகிறது. கடைசி இருபது நிமிடம் டக்கால்டி தான்.

தோட்டாக்கள் அளவில் சிறியது தான் ஆனால் பாய்ந்தால் அத்தனை வேகம். இந்த நான்கு கோலிகள் சண்டை போடும் ஆக்ஷன் காட்சிகள் டாப் டக்கர், குறிப்பாக மார்க்கெட் சண்டைக் காட்சி. பேச்சுக்கு சொல்லணும் என்று இல்லை நான்கு பசங்களின் கூட்டணி தேடி பிடித்தாலும் கிடைக்காத ஒன்று தான்.

இதே ஹாலிவுட்டாக இருந்திருந்தால் காஸ்டிங் டைரக்டருக்கு அவார்ட் நிச்சயம்தான். இந்த நால்வர் கொடுக்கும் போஸ்ச்சர்ஸ் எல்லாம் அப்படியே 'காக்க காக்க' அன்புச் செல்வன் கூட்டணியை நினைவூட்டுகிறது.

ஆச்சியாக 'சுஜாதா சிவகுமாரன்' (பருத்துவீரனில் முத்தழகு பிரியாமணியின் அம்மாவாக வருவாரே அவரே தான்), 'ஒரு செடி One flower' என்று வசனம் பேசும் புதுமுக சீதாவும் ஸ்கோர் செய்கிறார்கள்.

இந்த நான்கு பசங்களின் துடிதுடிப்பு மாஸ் மசாலா நாயகர்களின் ஸோ ஸோ கமர்சியல் படங்களை மறக்கடித்து மேடையின் நடுவே கூடாரம் அமைக்கிறது. சபாஷ் விஜய் மில்டன்.

எத்தனை குளிர்பானங்கள் வந்தும் இன்னும் மவுசு குறையாமல் இருப்பது கோலி சோடாதான். இந்த கோலி சோடாவும் சரியான மசாலா படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதை மெய்ப்பித்துள்ளது.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x