Last Updated : 05 Jan, 2017 10:18 AM

 

Published : 05 Jan 2017 10:18 AM
Last Updated : 05 Jan 2017 10:18 AM

இதுதான் நான் 58: நூறு மார்க் வாங்கிட்டேன்

வெங்கடேஷ் சார் நடித்த ‘கூலி நம்பர் 1’ தெலுங்கு படத்துல மாஸ்டரா வேலை பார்க்கும் போது என்னோட பிறந்தநாள் வந்துச்சு. டான்சர்ஸ் எல்லாரும் சேர்ந்து அன் னைக்கு எனக்கு ஒரு தங்க மோதிரம் போட்டுவிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு நெத்தியில விபூதி பட்டை அடிச்சுக்குற பழக்கம் உண்டு. அதுமாதிரியே அந்த மோதிரத்துலயும் மூணு பட்டை இருக்கும். அதை ரொம்ப வருஷம் போட்டிருந்தேன். அப்பப்போ விரல்ல இருந்து சும்மா கழட்டி கழட்டி திரும்பவும் போட்டுக்குறதுன்னு இருப் பேன். எனக்கு அது ஒரு பழக்கமாவே ஆகிடுச்சு.

மோதிரத்துல இருந்த அந்த பட்டை தேஞ்சு போகிற வரைக்கும் போட்டிருந் தேன். எப்படி என்கிட்ட இருந்து மிஸ் ஆச்சுன்னே தெரியலை. அது தெரியாம இருக்குறதுதான் நல்லது. எப்படி தொலைச்சோம்னு தெரிஞ்சா மனசுக்கு கஷ்டமாகிடும். என்னோட லைஃப்ல இதுவரைக்கும் ரொம்பவும் ஸ்பெஷ லான தங்க மோதிரம் அதுதான். ஏன்னா, டான்ஸர்ஸ் எல்லாரும் அன்போடு போட்டுவிட்ட மோதிரம் அது.

எனக்கு பெருசா மோதிரம், வாட்ச், செயின் இது மேலயெல்லாம் பிரியம் வர்றதே இல்லை. அன்பு ஒண்ணுதான் எல்லாமும்கிற மனநிலையிலதான் இன்னைக்கு இருக்கேன். முன்பெல்லாம் புகழ், பணம், பேரு இதெல்லாம்தான் வேணும்னு கடவுள்கிட்ட கேட்பேன். ஆனா, இப்பல்லாம் நல்லா வேலை பார்க்கணும், எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும், நான் கரெக்டா இருக் கணும்னு வேண்டிக்கிறேன். சமீபத்துல ‘தேவி’ படம் ரிலீஸாகும்போதுகூட ‘ரொம்ப வருஷத்துக்கு பிறகு தமிழ்ல திரும்பவும் வர்றோம். கோயிலுக்கு போகலாம்’னு மனசு சொல்லுச்சு. அந்த நேரத்துல நான் மும்பையில இருந்தேன். அப்பறம் யோசிச்சேன். ‘படம் வரும் போது மட்டும் கோயிலுக்கு போக ணும்னு மனசுக்கு தோணுதே. வேண்டாம். கடவுளை நாம எப்பவும்போல நினைச் சிப்போம். நமக்கு என்ன கொடுக் கணும்னு அவருக்கே தெரியும்னு போகாம இருந்துட்டேன்.

அன்புன்னு சொல்லும்போது இங்கே சில விஷயங்கள் நினைவுக்கு வருது. கடந்த அஞ்சாறு வருஷங்களாவே அதிகமா மும்பையிலதான் இருக்கேன். அதனால என்னோட பசங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுறேன். அவங்க சென்னையில இருந்து நாளன்னைக்கு மும்பைக்கு வர்றாங்கன்னா நான் இன் னையில இருந்தே சந்தோஷ மாகிடுவேன்.

எப்போதுமே சினிமா வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு தூங்கப்போகும் போது மணி பன்னெண்டு, ஒண்ணு ஆகிடும். ஆனா, பசங்க என் கிட்டே இருந்தாங்கன்னா 9.30 மணியில இருந்து 10 மணிக்குள்ள தூக்கம் வந்துடும். அவங்க இருக்கும்போது கூடவே சேர்ந்து விளையாடணும்னு அவசியம் இல்லை. என்னோட கண் பார்வையில இருந்தாலே போதும். பசங்கக்கூட இருக்கும்போது சில சமயத்துல எடிட்டிங் வேலைகள் நடக்கும். அவங்க தூங்குனதுக்கு பிறகு இரவு 11 மணிக்கு மேல கிளம்பிப் போய் வேலையை பார்த்துட்டு திரும்பவும் அதிகாலை 4 மணிக்கு ஓடிவந்து அவங்க பக்கத்துல படுத்துப்பேன். காலையில 7 மணிக்கு அவங்க கூடவே தூங்கி எழுந்திருப்பேன்.

இந்தமாதிரி பசங்க ரெண்டு, மூணு நாட்கள் கூட இருந்துட்டு ஊருக்கு கிளம்பறப்போ அன்னைக்கு காலையில இருந்தே மனசு ஒருமாதிரி ஆகிடும். அதை இங்கே எப்படி சொல்றதுன்னே எனக்குத் தெரியலை. அடுத்த சந்திப்பு கிடைக்குற வரைக்கும் அவங்கள கட்டிப்பிடிச்சு வழி அனுப்புற அந்த நேரம்தான் ஞாபகத்துல இருக் கும். இதெல்லாம் சினிமாவுலதானே பார்ப்போம்னு தோணும். என் னோட வாழ்க்கையிலயும் அப்படித்தான் நடக்குது.

மும்பையில பிளாட் டைப் வீட்லதான் இருக்கேன். ஒவ்வொரு முறை அவங் களை ஊருக்கு அனுப்பிவிடும்போதும் கார்கிட்ட நான் வர்றதே இல்லை. என் னால முடியாது. கார்ல ஏறினதுக்கு அப்பறம் சின்னப் பையன், ‘அப்பா!!!’ன்னு கீழே இருந்து கத்து வான். அங்கே சுத்தி இருக்குற எல்லா பிளாட்டுக்கும் அவனோட குரல் கேட் கும். நான் பால்கனியில இருந்து பார்ப் பேன். கார் காம்பவுண்ட் போய் திரும்புற வரைக்கும் அவங்களைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். அடுத்த ரெண்டு, மூணு மணி நேரத்துக்கு நான் ரொம்ப ஸ்லோ ஆகிடுவேன்.

பசி இருக்காது. எந்த வேலையும் ஓடாது. மூளை வேலை செய்யாது. எழுந் திருக்கிறதுல இருந்து நடக்குறதுல இருந்து, போனை எடுத்து பேசுறதுல இருந்துன்னு எல்லாமே ஸ்லோ ஆகிடும். அவங்க விளையாடிட்டு போட்ட பந்து அப்படியே கிடக்கும். வீட்டுல வேலை பார்க்குறவர், அதை உள்ளே எடுத்து வைக்கணும்னு வந்தாக்கூட, ‘அந்த பொசி ஷன்லயே கிடக்கட்டும்!’ எடுக்க வேண் டாம்னு சொல்லிடுவேன். அப்பறம் ரொம்ப நேரத்துக்குப் பிறகு வேலைக்கு போய்ட்டு நைட் திரும்புவேன். அப்படித் திரும்பி வரும்போது வீட்டு ஹால்ல இருக்குற பந்தை 5 நிமிஷம் நான் மட்டுமே தட்டிட்டு திரும்பவும் ஹால்லயே விட்டுட்டு தூங்கப் போய்டுவேன்.

பசங்ககூட இருக்கும்போது, ‘உங் களுக்கு அப்பாவை எவ்ளோ பிடிக் கும்?’னு கேட்பேன். உடனே அதுக்குச் சின்னப் பையன், ‘எழுபத்தைந்து சதவீதம்தான் பிடிக்கும்’னு ரெண்டு கையையும் விரிச்சு கொஞ்சம் சுருக்கி காட்டுவான். ‘மிச்சம் இருபத்தைந்து சதவீதம் என்னாச்சு?’ன்னு கேட்டா, ‘நீங்க என்கூட ஷாப்பிங் மால் வரலை. விளையாட வரலை? அதான்!’ன்னு சொல்வான்.

பெரும்பாலும் மால்ல கூட்டம் அதிகமா இருக்கும். நிறைய பேர் போட்டோகிராஃப் எடுத்துக்கணும்னு ஆசையா கிட்டே வருவாங்க. ‘எங்கக் கூடத்தான் விளையாடணும்!’னு சொல்லி சின்னப் பையன் ஃபோட்டோ எடுக்க விடவே மாட்டான். போட்டோ எடுக்க வந்தவங்க, ‘அப்பாக்கூட ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்!’ன்னு கேப்பாங்க. அதுக்கு சின்னப் பையன், ‘முடி யா….து’ன்னு இழுத்து கத்தி சொல்லு வான். அவங்களே சிரிச்சுக்கிட்டு, ‘சார் நீங்க அவங்களோட விளையா டுங்க!’ன்னு சொல்லிட்டு புரிஞ்சிக்கிட்டு போய்டுவாங்க. அதனாலதான் நான் அவங்கக்கூட ஷாப்பிங் மாலுக்கே அதிகம் போறதில்லை. இப்போ சமீபத் துல பாங்காக் போனப்போ பசங்கக் கூடவே முழுக்க இருந்து நூறு மார்க் வாங்கிட்டேன். எப்போ அது 80 சதவீதமா ஆகும்னு தெரியலை.

பொதுவா நிறைய பேர் தங்களோட பசங்கக்கிட்ட அன்பாவும் இருப்பாங்க. அதே நேரத்துல ரொம்ப கண்டிப்பாவும் இருப்பாங்க. என் பசங்கக்கிட்ட என்னால கண்டிப்பா இருக்க முடியலை. ஏன்னா, எல்லா அப்பாக்களை மாதிரி நான் அவங்கக்கூடவே இருக்குறதில்லையே. அதான் என்னால அப்படி இருக்க முடியலைன்னு நினைக்கிறேன்.

பெரியவனுக்கு இப்போ 13 வயசு. பயங்கரமா வளர்ந்துட்டான். இதே 13 வயசுலதான் நான் ‘அக்னி நட்சத்திரம்’ படத்துல டான்ஸ் ஆடினேன். அந்த வயசுல நான் வேற மாதிரி இருந்தேன். இப்போ இவனோட உலகம் வேற மாதிரி இருக்கேன்னு நினைச்சுப்பேன். எங்கப்பா எங்களை வளர்த்த விதம் வேற. அவரைப் பார்த்தாலே பயம் வந்துடும். ஆனா, இன்னைக்கு நாங்க பசங்கக்கிட்ட பிரண்ட்லியா இருக்கோம்.

ரெண்டு பசங்களுக்கும் கொஞ்சம்கூட டான்ஸ் மேல பிரியம் இல்லை. சின்ன பையன் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் சின்னச் சின்ன ஸ்டெப்ஸ் போடுவான். இப்போ சுத்தமா விட்டுட்டான். நானும் அவங்கக்கிட்ட எதையும் திணிக்கிறதில்லை. ஜாலியா விளையாடட்டும்னு விட்டுட்டேன். படிச்சிக்கிட்டே இருந்தாலும், ‘படிச் சது போதும். கொஞ்ச நேரம் விளை யாடுங்க. வியர்வை வெளியே வரட்டும்!’னு சொல்ற அப்பாவாத்தான் என்னால இருக்க முடியுது.

அன்பு என்னவெல்லாம் பண்ணுது பார்த்தீங்களா...? அன்பைவிட ஆபத் தான ஆயுதம் வேற எதுவுமே இல்லை. இந்தமாதிரி அன் கண்டிஷனல் அன்பை தான் ஒரு பொண்ணும் தன்னோட காதலன்கிட்டயும் எதிர்பார்க்குறான்னு நினைக்கிறேன். அதேமாதிரி பசங்களும் பொண்ணுங்கக்கிட்ட எதிர்பாக்குறதும் இதைத்தான். காதலை அப்படித்தான் ஆரம்பிக்கிறாங்க.

அப்பறம் என்ன பிரச்சினை... அதை அடுத்த வாரம் சொல்றேன்..

- இன்னும் சொல்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x