Published : 13 Dec 2013 10:46 AM
Last Updated : 13 Dec 2013 10:46 AM

கலைஞர்களின் சமூகக் கடமை - ஆமிர் கான் நேர்காணல்

சமூக அக்கறையுள்ள திரைப்படக் கதாநாயகர்கள், தயாரிப்பாளர்களில் ஆமிர்கான் முக்கியமானவர். ‘தி இந்து’ நாளிதழின் பரத்வாஜ் ரங்கனுக்கு ஆமிர் கான் அளித்த பேட்டியின் சுருக்கம் இது:

வெளிநாட்டுத் திரைப்படங்களைப் போல வித்தியாசமானவை நம் நாட்டில் வெளிவராததற்கு, நம்முடைய ரசிகர்களின் ரசனைக் குறைவும், பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் அவர்கள் விரும்புவதும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மாறுபட்ட திரைப்படங்களையும் ரசிக்க, ரசிகர்களைப் பழக்க வேண்டியது கதாநாயகர்களின் கடமை என்று கருதுகிறீர்களா?

திரைப்படத் துறையைச் சேர்ந்த எவருடைய முதல் கடமையும் கேளிக்கையை வழங்குவதுதான். பொழுதுபோக்கத்தான் ரசிகர்கள் திரையரங்குக்கு வருகிறார்கள். சமூகவியலில் பாடம் தேவை என்று நினைத்தால் கல்லூரிகளுக்குச் செல்வார்கள்.

பொழுதுபோக்கு என்பது பல வழிகளில் வர முடியும். உங்களுடைய கீழ்த்தரமான உணர்ச்சிக்குத் தீனிபோடும் வகையில் மட்டமான நகைச்சுவை உரையாடல்களுடன் திரைப்படத்தைக் கொடுக்க முடியும். அல்லது உங்களுடைய உயர்ந்த ரசனைக்கேற்பவும் படத்தைக் கொடுக்க முடியும். எப்படியாக இருந்தாலும் என்னுடைய கடமை உங்களை மகிழ்விப்பதுதான். இப்படிச் சொன்னாலும் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பெரும் பங்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் இருக்கிறது. சமூகத்துக்கு கண்ணியத்தைத் தருவது, அறவுணர்வுகளை வலுப்படுத்துவது, இளம் நெஞ்சங்களில் நல்ல விழுமியங்களை ஏற்படுத்துவது ஆகிய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தேசத்தை உருவாக்குவதில் இது மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்; ஆரோக்கியமான, முற்போக்கான சமூகத்தை ஏற்டுத்தவும் உதவும். இதுதான் கலைஞர்களின் உண்மையான பணி என்று நான் நம்புகிறேன்.

இதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்கிறேன். சமீப காலத்தில் வந்த உங்களுடைய வெற்றிப்படங்களான ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ் ஆகியவற்றை ‘தேன் தடவப்பட்ட மாத்திரைகள்’ என்று வகைப்படுத்தலாம். வணிகரீதியிலான அம்சங்களை அவற்றிலிருந்து நீக்கியிருக்கலாம் என்று எப்போதாவது கருதியதுண்டா?

முதலில், இந்தத் திரைப்படங்களில் தேன் தடவப்பட்டதாகவே நான் நினைக்கவில்லை. நீங்கள் சுட்டிக்காட்டிய எந்தத் திரைப்படங்களிலும் அவற்றுக்குப் பொருத்தமில்லாத நகைச்சுவைகளையோ வேறு சுவைகளையோ அவற்றில் திணித்ததில்லை. 3 இடியட்ஸ் திரைப்படத்தில் வலுவான செய்தி இருந்தது எனவே ரசிக்கப்பட்டது. தங்களுடைய குழந்தைகளின் படிப்பைப் பெற்றோர்கள் பார்த்த கோணமும் தங்களுடைய மாணவர்களை ஆசிரியர்கள் பார்த்த கோணங்களும் இந்தத் திரைப்படத்துக்குப் பிறகு மாறின.

நீ பொறியாளராக வர வேண்டும் என்று குழந்தைகளைப் பார்த்துக் கூறுவதைப் பெற்றோர்கள் நிறுத்தினார்கள். தங்களுடைய கனவுகளை தங்கள் குழந்தைகள் மூலம் சாத்தியமாக்க நினைத்ததைக் கைவிட்டார்கள். பொழுதுபோக்கு என்பது அந்தத் திரைப்படத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அம்சம், அதை ஏன் அதிலி ருந்து நீக்கவேண்டும்? அப்படிச் செய்தால் அந்தத் திரைப்படத்தையே கடுமையானதாக ஆக்குவதுடன் சொல்லவந்த செய்தியையும் வலுவில்லாமல் சொல்ல நேரும். அப்படிச் செய்வானேன்?

அப்படியானால் தொலைக்காட்சியில் மட்டும் வித்தியாசமாகச் செய்வானேன்? சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் நீங்கள் மிகவும் ஆழ்ந்து ஈடுபடுகிறீர்கள். அதனாலேயே அந்த நிகழ்ச்சி மிக வித்தியாசமானதாகி சமூகத்தில் வரவேற்பைப் பெற்றுவிட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் கருப்பொருளையும் எடுத்துக்கொண்டு குறைந்த செலவிலான திரைப்படங்களாக (பீப்ளியைப் போல) தயாரிக்கிறீர்களா? இவற்றில் பொழுதுபோக்கு அம்சங்களைச் சேர்ப்பது அவசியமானதா?

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் நாங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததும் அடிப்படையானதுமாகும். அதில் நான் மிகவும் தீவிரம்காட்டினேன் என்பது உண்மையே. ஒவ்வொரு நிகழ்ச்சியும் நேயர்களைக் கவர வேண்டுமென்பதில் தனிக் கவனம் செலுத்தினேன். வெறும் தகவலைச் சொல்வதுடன் நிற்காமல், மக்களின் மனங்களையும் தொட வேண்டும் என்று முயற்சித்தோம். மக்களை அவர்களுடைய அறிவின் மூலம் மட்டுமல்ல உணர்ச்சிகளின் வாயிலாகவும் கவர நினைத்தோம்.

திரைப்படங்களில் இதே அணுகுமுறைதான். தாரே ஜமீன் பர் திரைப்படத்தில் கல்வி, குழந்தைகள் என்ற இரு கருப்பொருள்களைக் கையாண்டோம். எனவே, திரைப்படம் எல்லாவிதத்திலும் பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டுமென்று அக்கறை செலுத்தினோம். பொழுதுபோக்குவது என்பதுடன் ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். பொழுதுபோக்குவது என்றால் உங்களைச் சிரிக்க வைத்துக் கைத்தட்டலை வாங்க நினைப்பது. சில திரைப்படங்கள் உங்களைச் சிரிக்கவைக்காது, கைத்தட்ட வைக்காது ஆனால் கண்ணில் நீர்பெருகத் தொடர்ந்து பார்க்கவைக்கும், உருகவைக்கும். அந்த வகையில் அது உங்களுக்குப் பொழுதுபோக்கைத் தருகிறது.

1970-களிலும், ஏன் 1980-களில்கூட நம்முடைய சமூகத்தைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் வெளிவந்தன. அவை போன்று இப்போது வருவதில்லை. தங்களுடைய சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை இப்போதைய ரசிகர்கள் விரும்புவதில்லையா?

இத்தகைய திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்கவர்கள் அவர்கள். கலையம்சங்கள் கொண்ட திரைப்படங்களைத் திரையிடுவதற்காகவே நாடு முழுக்கத் தனித் திரையரங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ரசிகர்களும் தங்களுடைய ரசனைக்கேற்ற திரைப்படங்களைக் காண அந்தந்த திரையரங்குகளுக்குச் செல்ல முடியும். வசூலுக்கேற்ற அம்சங்களுடன் கூடிய திரைப்படம் திரையிடப்படும் அதே திரையரங்க வளாகத்தில் கலையம்சம் மட்டும் நிறைந்த திரைப்படம் திரையிடப்பட்டால் அது ஓடாது.

25 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் ஒரு புதுமுகம். எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பதாக உணர்கிறீர்களா?

நடிக்தத் தொடங்கியபோது எனக்குள் திட்டமெதுவும் இல்லை. இந்த அளவுக்கு முன்னேறுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. இது மிகவும் உற்சாகமான பயணம். நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நூறாண்டுகள் கடந்த இந்திய சினிமாவில் நானும் 25 ஆண்டுகள் சேர்ந்து பயணித்திருக்கிறேன் என்னும்போது நான் மிகவும் எளியவன் என்ற உணர்வும் அதே சமயம் பெருமிதமும் எனக்கு ஏற்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் இந்திய திரைப்படத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் முக்கியமான மாற்றங்கள் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

25 ஆண்டுகளில் நம்முடைய திரைப்படங்கள் எவ்வளவோ முன்னேறியிருக்கின்றன. நான் இந்தி திரைப்படங்களைப் பற்றி மட்டும் பேசுகிறேன். முன்பெல்லாம் கதைப்படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எல்லை இருந்தது. இப்போது அதில் பல விதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.வெவ்வேறுவிதமான திரைப்படங்களைத் தயாரித்து சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரசிகர்களும் இந்த மாற்றங்களை வரவேற்கின்றனர். நல்ல கதைகள், நல்ல கலைநுணுக்கம், சிறந்த தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் நன்கு தயாரிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் தொடர்ந்து பல வாரங்கள், மாதங்கள் ஒரு படம் ஓடும். இப்போது நாடு முழுக்க ஒரே சமயத்தில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு, சில வாரங்களிலேயே வசூலை அள்ளிக்குவிக்கின்றன.

தான் எண்ணியபடி, எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் படம் தயாரிப்பது தயாரிப்பாளருக்கு இப்போது எளிதாகியிருக்கிறதா?

திரைப்படத் தயாரிப்பு என்பதே பல சமரசங்களைச் செய்துகொள்வது பற்றியதுதான். படப்பிடிப்பின்போது சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அன்று மேகமூட்டமாகவே இருக்கும், என்ன செய்வது? எப்போது சமரசம் செய்துகொள்வது, எப்போது மறுப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய கனவில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது, அந்தக் கனவை நனவாக்கும் வழிகளில் சமரசம் செய்துகொள்ளலாம். முன்பெல்லாம் வித்தியாசமாக ஏதாவது செய்தால், ‘இது கலைப்படம்’ என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதற்குப் பிறகு கூட்டம் வராது. இப்போது கதைப்படங்களிலேயே வித்தியாசமாகப் படம் எடுக்க முடிகிறது.

100 கோடி ரூபாய் வட்டத்தில் சேர வேண்டும், வெளிநாட்டுச் சந்தையில் விற்க வேண்டும் என்ற ஆசையில் பெரிய நட்சத்திரங்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள் என்பதுபற்றி உங்கள் கருத்தென்ன?

தங்களுடைய நட்சத்திர அந்தஸ்து பறிபோய் விடக்கூடாது என்று எப்போதும் எச்சரிக்கையாகவே செயல்படும் நட்சத்திர நடிகர்கள் இருக்கின்றனர். மற்றவர்களோ துணிந்து பார்த்திருக்கிறார்கள். நான் இந்த எண்ணிக்கைக்கெல்லாம் முக்கியத்துவம் தருவதில்லை. ரசிகர்களும் இதையெல்லாம் பார்ப்பதில்லை. கங்கா ஜமுனா, பியாசா, முகல்-இ-ஆஸம் ஆகிய திரைப்படங்களை எத்தனை கோடி ரூபாயில் தயாரித்தார்கள், எத்தனை கோடி ரூபாய் லாபம் ஈட்டின என்றெல்லாம் பார்த்து ரசிகர்கள் ரசிப்பதில்லை. இந்தத் திரைப்படங்களுக்கெல்லாம் அதைப் பார்க்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளே சரியான மதிப்பீடு.

ஆனால் சில திரைப்படங்களுக்கு அதன் திரைப்படத் தயாரிப்புச் செலவுகளே முக்கியம். உங்களுடைய தூம்-3 திரைப்படம் அப்படிப்பட்டது. அது திரையிடப்படுவதற்கு முன்னாலேயே வெற்றிப்படமாகக் கருதப்படுகிறதே?

எந்த திரைப்படமும் திரைக்கு வருவதற்கு முன்னாலேயே வெற்றிப்படமாகிவிடாது. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கூறுங்கள், நானும் ஆமோதிக்கிறேன். இந்தப்படத்தின் கதையைக் கேட்டவுடனேயே உற்சாக மடைந்து ஒப்புக்கொண்டுவிட்டேன். அதில் பணம் முதலீடு செய்தவர்களுக்குத் தொகை திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதற்கு மேல் எனக்கு வேறு ஈர்ப்புகள் இல்லை.

உலக திரைப்படங்களில் எவ்வளவு பார்ப்பீர்கள்?

நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. வாசிப்பதிலே விருப்பம் அதிகம். திருட்டு டிவிடிகளில் படம் பார்க்கக் கூடாது என்ற கொள்கையும் எனக்கு உண்டு. பிரபலமாகிவிட்டதால் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து ரசிக்க முடிவதில்லை. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அதிக திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. சர்ச்சின் ஃபார் ஷுகர் மேன் (ஆவணப்படம்), தி ஒய்ட் ரிப்பன், எ செபரேஷன் ஆகிய திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவிலும் கலைப்படங்களை மட்டுமே திரையிடத் தனித் திரையரங்குகள் தொடர்ச்சியாக இருந்தால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தொடர்புக்கு: baradwaj.r@thehindu.co.in
தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x