Published : 30 Oct 2014 10:43 am

Updated : 24 Nov 2014 14:25 pm

 

Published : 30 Oct 2014 10:43 AM
Last Updated : 24 Nov 2014 02:25 PM

வீடில்லா புத்தகங்கள் 6 - நாக்கின் வரைபடம்

6

நாக்கின் வரைபடம்

பெங்களூருக்குப் போகும் நாட்களில் அவசியம் அவென்யூ ரோடு அல்லது பிரிகேடியர் சாலையில் உள்ள நடைபாதைப் புத்தகக் கடைகளுக் குப் போய்விடுவேன். நிச்சயம் நாலைந்து நல்லப் புத்தகங்கள் கிடைத்துவிடும். பழைய புத்தகங்களும் இசைத் தட்டு களும் வாங்க விரும்புகிறவர்களுக்கு பெங்களூர்தான் புகலிடம்.

இங்கு உள்ள சாலையோரப் புத்தகக் கடைக்காரர்கள் சரளமாக நாலைந்து மொழிகள் பேசக் கூடியவர்கள். அத்தோடு தான் என்ன புத்தகம் விற்கிறோம்? இதை யார் வாங்குவார்கள் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார்கள். அதிகம் பேரம் பேசவும் முடியாது.

பழைய புத்தகக் கடைகளில் இன்று அதிகம் விற்பனையாவது கள்ளப் பிரதி களே. அதாவது, புகழ்பெற்ற ஆங்கில நாவல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங் களின் மலிவுப் பதிப்புகள். இவை எந்த உரிமையும் பெறாமல் கள்ளத் தனமாக நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்டு விற்பனையாகின்றன. இந்தச் சந்தை மிகப் பெரியது. ‘கள்ளப் பிரதிகள் ஹாங்காங்கில் அச்சிடப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகின்றன’ என்றார் ஒரு பழைய புத்தக வியாபாரி. ‘இல்லை… இல்லை… மும்பையில்தான் அச்சிடுகிறார்கள்’ என்றார் இன்னொருவர்.

எங்கு அச்சிடப்பட்டாலும் எழுத்தாளன் தானே ஏமாற்றப்படுகிறான். அவனுக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்? நம் காலத்தின் மிகப் பெரிய மோசடி அறிவைத் திருடுவதுதான். அதிலும் குறிப்பாக, இணையத்தில் ஏராளமாக புதிய புத்தகங்கள் இலவசமாக, எந்த அனுமதியுமின்றி விநியோகம் செய்யப்படுகின்றன. திருட்டு சிடி அளவுக்கு திருட்டுப் புத்தகங்களுக்கு ஒருவரும் குரல் கொடுப்பதே இல்லை.

கடந்த 20 ஆண்டுகளில் குடிக்கிற தேநீரில் இருந்து, பேருந்து கட்டணம், மின்கட்டணம், பெட்ரோல், வீட்டு வாடகை, சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் என எல்லாமும் 10 மடங்கு உயர்ந்து விட்டன. ஆனால், எழுத்தாளர்களுக்குத் தரப்படும் ராயல்டி உயர்த்தப்படவே இல்லை. 1950-களில் வழங்கப்பட்ட 8 முதல் 10 சதவீத ராயல்டிதான் இன்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படுவது இல்லை. பெரும்பான்மை பதிப்பகங்கள் எழுத்தாளருக்கு ஒரு ராயல் டீ கொடுத்துக் கணக்கை சரிசெய்துவிடுகின்றன.

இது போலத்தான் இதழ்களில் வெளியாகிற கதை, கட்டுரைகளுக்கான சன்மானமும். அந்தப் பணம் எழுதுகிற பேப்பர், பேனா வாங்கக் கூட பற்றாது என்பதே உண்மை. இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தாளர் நாவல் எழுதுவதற்கு மூன்று கோடி ரூபாய் முன்பணம் அளிக்கப்படுகிறது. விற்பனை 10 லட்சம் பிரதிகள். கழிப்பறைக்குக் கூட கட்டணம் இருக்கிறது. ஆனால், இணையத்தில் காசு தரப்படாமல் திருடப்படும் பொருளாக புத்தகங்கள் இருப்பது அநியாயம்.

இரண்டாயிரம் வருட இலக்கியப் பாரம்பரியம் பேசும் தமிழகத்தில், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், ‘எழுதி மட்டுமே வாழ முடியாது’ என்கிற சூழல் இருப்பது வருத்தமளிக்கவே செய்கிறது.

சமீபமாக பெங்களூர் சென்றபோது பிரிகேடியர் சாலையில் உள்ள புத்தகக் கடையொன்றில் கிடைத்த புத்தகமே ‘வாட் ஐன்ஸ்டீன் டோல்டு ஹிஸ் குக்’ (What Einstein Told His Cook). தலைப்பி லேயே… இந்தப் புத்தகம் வித்தியாச மானது என்று தெரிந்துவிட்டது. இது போலவே முன்பு ‘ரிடில்ஸ் இன் யுவர் டீ கப்’ (Riddles in Your Tea Cup) என்ற அறிவியல் கேள்வி - பதில் புத்தகத்தை வாசித்திருக்கிறேன். ஆகவே, இதுவும் அன்றாட அறிவியல் பற்றியதாக இருக்கக்கூடும் என நினைத்து உடனே வாங்கிவிட்டேன்.

அறிவியல் புத்தகங்களின் மீது எனக்கு ஈர்ப்பு உருவாக முக்கிய காரணம், ‘மஞ்சரி’ இதழ்களே. அதில் பெ.நா.அப்புசாமி எழுதிய கட்டுரைகளே அறிவியலை அறிந்து கொள்வதற்கான முதல் தூண்டுதலாக இருந்தன.

கல்லூரி நாட்களில் ரிச்சர்ட் பெயின்மென் அறிமுகம் ஆனார். இவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர். இவரது எழுத்தின் வழியாகவே அறிவியலை இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை அறிந்துகொண்டேன். பெயின்மேன் தன் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை விவரித்து எழுதிய, ‘யூ ஆர் ஜோக்கிங் மிஸ்டர் பெயின்மேன்’ என்ற புத்தகம் என்றும் என் விருப்பத்துக்குரியது.

பொதுவாக தமிழில் அறிவியல் சார்ந்தப் புத்தகங்கள் மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைப்பது போல வகை வகையாக தமிழில் கிடைப்பது இல்லை. இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங், காலத்தின் வரலாற்றை பள்ளி மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும்படியாக, ‘தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என எளிமையாக எழுதியிருக்கிறார். லட்சக்கணக்கில் அது விற்பனையாகியுள்ளது. ஆனால், அதன் தமிழ் மொழியாக்கம் வாசிக்க மிக கஷ்டமாக உள்ளது.

தமிழக விஞ்ஞானிகளில், தொழில் நுட்ப விற்பன்னர்களில், பேராசிரியர் களில் வெகுசிலரே தமிழில் எழுதக் கூடி யவர்கள். இணையத்திலும் இதழ் களிலும் சிறந்த அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்களாக சி.ஜெயபாரதன், சுந்தர் வேதாந்தம், என்.ராமதுரை, கிரிதரன், ராஜ்சிவா, அருண் நரசிம்மன், ஆயிஷா நடராஜன், பாஸ்கர் லக்ஷ்மன் ஆர்.எஸ்.நாராயணன் ஆகியோரைச் சொல்வேன். இவர்கள் எழுத்தில் எளிமையும், நுட்பமும், விரிவான அணுகுமுறையும் இருக்கும். அறிவியலை சுவாரஸ்யமாக எழுதிக் காட்டியதில் சுஜாதாவே முன் னோடி. அவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்றே தோன்றுகிறது

ராபர்ட் எல் வோல்கி (Robert L.Wolke) ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் எழுதியதன் தொகுப்பே ‘வாட் ஐன்ஸ்டீன் டோல்டு ஹிஸ் குக்’ புத்தகம். சமையலின் பின்னுள்ள அறிவியல் விஷயங்களைச் சுவைபட விளக்குகிறார் ராபர்ட்.

ஐன்ஸ்டீனுக்கும் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அறிவியலின் குறியீடாகவே இதில் அவர் முன்வைக்கப்படுகிறார். கலோரி என்பதை எப்படி கணக்கிடுகிறார்கள்? உப்பு ஏன் வெள்ளையாக உள்ளது? வாயில் போட்டவுடன் சாக்லெட் ஏன் கரைய தொடங்கிவிடுகிறது? பொரித்த உணவின் மீது ஏன் எலுமிச்சைப் பிழிகிறோம்… என்பது போன்ற எளிய கேள்விகளுக்கு, அறிவியல்பூர்வமாக விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.

சமையல் புத்தகங்களை மட்டுமே அறிந்துள்ள நமக்கு, சமைப்பதன் பின்னே இவ்வளவு அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளனவா என்பது வியப்பளிக்கிறது. இனிப்பு ஏன் நமக்கு பிடிக்கிறது? துவர்ப்பு ஏன் பிடிப்பது இல்லை? இசையை ஏன் ரசிக்கிறோம்? கூச்சலைக் கேட்டு காதைப் பொத்திக் கொள்கிறோம் அல்லவா, இதற்கான காரணம்… நமது ஐம்புலன்களில் சுவைப்பதும் நுகர்வதும் வேதியியல் காரணிகளால் உருவாக்கப்படுகிறது என்பதே. இந்த மாற்றங்கள் எப்படி, எதனால், எவ்வாறு உருவாகின்றன… என்பதை அறிவியல் துல்லியமாக விவரிக்கிறது.

நமது நாக்கின் வரைபடத்தை எடுத்துக் கொண்டால் அதில், இனிப்புச் சுவை அரும்புகள் நாக்கின் நுனியிலும், அதன் மேற்புறம் உப்புச் சுவையும், இரண்டு ஓரங்களிலும் புளிப்புச் சுவையும், நாக்கின் பின் பகுதியில் கசப்புச் சுவை யும் இருக்கின்றன. ஆகவே, நாக்கு உணவை சுவைக்கும்போது பிரதான சுவை நரம்புகளானது தூண்டப்பட்டு… என்ன ருசி என்பது உணரப்படுகிறது. இன்று உணவில் கலக்கபடும் ரசாயனப் பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் நமது சுவை அரும்புகளைப் பாதிக்கின்றன. இது போலவே உப்பு, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றின் பக்கவிளைவுகள் எவை? எதனால் பக்கவிளைவு ஏற்படுகிறது என்பதையும் ராபர்ட் தெளிவாக விளக்குகிறார்.

உணவு குறித்து புதிய விழிப்புணர்வு உருவாகி வரும் இன்றையச் சூழலில் சமைப்பதன் பின்னுள்ள அறிவியலை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற புத்தகங்களின் தேவை அவசியமாகும்.

இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

வீடில்லா புத்தகங்கள்தொடர்எஸ்.ராமகிருஷ்ணன்எஸ்ராபுத்தகக் கடைகள்வாசிப்புபுத்தக சேமிப்புநாக்கின் வரைபடம்ராபர்ட் எல் வோல்கி

You May Like

More From This Category

More From this Author