Published : 21 Nov 2014 11:58 am

Updated : 24 Nov 2014 14:27 pm

 

Published : 21 Nov 2014 11:58 AM
Last Updated : 24 Nov 2014 02:27 PM

கிரேசியைக் கேளுங்கள் 9 - ‘வெண்பா’க்கியம்!

9

அன்பு மாதங்கி, திருச்சி-14.
சாமி கும்பிடப் போன இடத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தை சொல்லுங்களேன்?

நான் சாமி கும்பிடப் போவதே நகைச் சுவைக்குத்தான். நேரம் கிடைக்கும்போது எல்லாம் நான் கும்பிடப் போகும் சாமி… ‘அப்புசாமி’யை உருவாக்கிய ‘பாக்கியம் ராமசாமி’. ‘குமுதம்’ வார இதழ் ஜொலிக்க காரணமானவர்களில் ஒருவரான ஜ.ரா.சுந்தரேசன்.இவரோடு உரையாடினால் நகைச்சுவை Finger Tips ‘நகச் சுவை’ ஆகும். ‘தமிழ் தாத்தா’ போல இவருடைய ‘அப்புசாமி’… நகைச்சுவை ‘உமிழ் தாத்தா’! ‘அவ்வைப் பாட்டி’ போல இவருடைய ‘சீதேய்’… நகைச் ‘சுவ்வைப் பாட்டி’.


பாக்கியம் ராமசாமி தனது நகைச்சுவை கட்டுரைத் தொகுப்புக்கு என்னை அணிந்துரை எழுதப் பணித்தபோது மிகவும் கூச்சப்பட்டேன். பாக்கியம் சார் ஆயிரம் காலத்துப் பயிர். அடியேன் நேற்று முளைத்தக் காமெடிக் காளான். ‘சும்மா எழுதுப்பா...’என்று என்னை துரிதப்படுத்தினார்.

அது சரி... மன்னர் வருவதற்கு முன் சேவகன் ‘பராக்… பராக்…’ சொல்வதற்கு என்ன பாண்டித்யமா வேணும்? வாயிருந்தால் போதாதா என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டு எழுதிக் கொடுத்தேன். இதை பெரும் பாக்கியமாகவும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பொக்கிஷமாக வும் கருதுகிறேன்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய ‘பெரிய வாச்சான் பிள்ளை’ போல, இவருடைய நகைச்சுவை நட்பால்… நான் இவருக்கு ‘வந்து வாச்சான் பிள்ளை’!

‘வெண்பா’க்கியம்!

‘இலக்கியத் தில்தொடங்கி லேப்டாப் வரையில்ஆ

ரோக்கிய ஹாஸ்யம் அளித்தவராம் - பாக்கியம்

ராமசாமி சொன்னதை ராப்பகலாய் சிந்திக்க

நாமசாமி ஆகலாம் நம்பு


கே.ரகுநாதன், சென்னை-32.
அது என்ன ‘டொமினோ ப்ரின்ஸிபிள்’ (Domino Principle)?

காக்கை உட்கார பனம்பழம் விழுவதுதான் ‘டொமினோ ப்ரின்ஸிபிள்’. ஒருமுறை மேடையில் டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் அவர்களின் அருகில் அமரும் வாய்ப்பு கிட்டியது. பேசும்போது அவரை குஷிப்படுத்த “நானும் டென்னிஸ் கத்துக்க ஒரு கோச்சிடம் சென்றேன். டென்னிஸ் ஆடும் அளவுக்குத் திடகாத்திரம் இல்லாததால், டென்னிஸ் கோச் என்னை ஒரு ஜிம் கோச்சிடம் அனுப்பினார்.

ஜிம்மில் உடம்பை தேத்திக் கொள்ளும் அளவுக்கு சக்தி இல்லாததால், ஜிம் கோச் என்னை ஒரு யோகா கோச்சிடம் அனுப்பினார். யோகா பயிலும் அளவுக்கு என்னிடம் மூச்சடக்கம் இல்லாததால், யோகா கோச் என்னை ஒரு நீச்சல் கோச்சிடம் அனுப்பினார்.

நீச்சல் கோச் மூச்சை அடக்கும் முன் உடம்பை தேத்திக் கொள் என்று என்னை ஒரு டயட்டீஷியனிடம் அனுப்பினார். டயட்டீஷியன் சொன்ன உணவும் மருந்தும் ஏக காஸ்ட்லியாய் இருந்தது. ‘என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே’ என்றபோது, அவர் ‘பணம் சம்பாதிக்க டென்னிஸ் விளையாடு’ என்று சொன்னார்” என்றேன். ‘லவ் ஆல்’ சொல்லும் அமிர்தராஜ் வாய்விட்டு சிரித்து ‘ஐ லவ் யூ’என்றார். இதுவும் கிட்டத்தட்ட ‘டொமினோ பிரின்ஸிபிள்தான்’!

எம்.ரமேஷ், சேலம்.
‘இசை மழை’யில் நனைந்தது உண்டா சார்?

கர்னாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை ‘நிமிர்த்தி வெச்சா தம்பூரா. படுக்க வெச்சா வீணை’என்கிற அளவுக்கு நான் ‘ஞான மைனஸ் சூன்யம்.’ என்னுடைய நண்பனுக்குப் பெண் பார்க்கச் சென்றபோது, என் போறாதவேளை… நான் மாப்பிள்ளைத் தோழனாக செல்ல வேண்டியிருந்தது. பெண் அழகாக இருந்தாள். பழைய டெலிபோன் கலரில் இருந்த என் நண்பன் மாப்பிள்ளை ஹோதாவில் ‘பொண்ணுக்கு சங்கீதம் கிங்கீதம் ஏதாச்சும் தெரியுமா?’ என்று ஊதிவிட்டு, சும்மா இருந்த சங்கைக் கெடுத்தான்.

பெண்ணின் தாயார் ‘ஓ... எங்க கோமளா கெட்டிக்காரி’ என்று சொல்லியபடியே உள்ளே ஓடிச் சென்று ஏகப்பட்ட கிண்ணங்களைக் கொண்டுவந்து பெண்ணின் முன்னால் கடை பரப்பினாள். பெண்ணின் தகப்பனார் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அந்தக் கிண்ணங்களை எல்லாம் ரொப்பினார். கோமளா கரண்டி சைஸில் இரண்டு ஸ்பூனோடு வந்து அமர்ந்துகொண்டாள். என் நண்பன் எதிர்பார்த்தது தித்திக்கும் ஒரு வாய்ப் பாட்டையோ அல்லது வீணை மீட்டலையோதான்.

ஆரோக, அவரோகணம் முடித்த கோமளா உச்சஸ்தாயியில் வெறித்தனமாக தண்ணீர் கிண்ணங்களில் ‘ஜலதரங்கம்’ வாசிக்க… எங்கள் இருவர் மேலேயும் தண்ணீர் தெறித்து தெப்பமாக நனைந்தோம். நண்பன் முகத்தில் தண்ணீரோடு சேர்ந்து அசடும் வழிந்தது!

‘இசை மழை’ என்பதை அன்றுதான் நான் நேரடி அனுபவத்தில் பெற்றேன்.

கே.கார்த்திகா, ஊட்டி
ரயில் பெட்டி, தீப்பெட்டி, சோப்புப் பெட்டி, அஞ்சறைப் பெட்டி, கல்லாப் பெட்டி, நகைப் பெட்டி, டிரங்க் பெட்டி... உங்களுக்குப் பிடித்த பெட்டி எது, ஏன்?

நீங்கள் சொன்னது எதுவுமே இல்லை. எனக்குப் பிடித்தது இன்னொரு பெட்டி. அது எது என்று கேட்கிறீர்களா? ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் ‘காமேஸ்வரன்’ கமலிடம் ‘திருட்டுப் பாட்டி’ எஸ்.என்.லட்சுமி திருடும் VSP (வெத்திலை, சீவல், புகையிலை) அடங்கிய ‘செல்லப் பெட்டி’தான் எனக்குப் பிடித்தப் பெட்டி.

அதுதான் எனக்கு VIP அந்தஸ்து வாங்கித் தந்த VSP செல்லப் பெட்டி!

சி.சுரேஷ்குமார், திருவாரூர்.
ஒரு புதுக் கவிதைச் சொல்லுங்களேன்?

மதர் தெரசாவா?

எம்.எஸ் அம்மாவா?

முனியம்மாவா?

வியப்பில் நிமிர்ந்தது

எட்டிப் பார்த்த நாய் வால் -

‘குப்பைத் தொட்டியில் பெண்

குழந்தை!’

கி.ராணி, வேலூர்.
உங்கள் பாணியில் சிறு விளக்கம் தருக...

லெக்கிங்ஸ்: லெக் குயின்ஸுக்குக் கல்யாணத்துக்கு முன்பே கால்கட்டு!

சரக்கு: பலசரக்கு மண்டையில் இருந்தால் ‘பாஸ்மார்க். பலான சரக்கு கையில் இருந்தால் ‘டாஸ்மாக்’!

மசாஜ்: வலி மெசேஜைத் தற்காலிகமாகத் தீர்க்கும் வைத்தியம்.

மிஸ்டுகால்: திருமணம் ஆனவனுக்கு வரும் மிஸ்டுகால் பாதி நேரம் மிஸஸ்டு கால் ஆகத்தான் இருக்கும்.

போலிடாக்டர்: பிரிஸ்க்ரிப்ஷனை சுலபமாக படிக்கும்படி எழுதினால் அவர் போலி டாக்டர்.

மா.கோமதி, திருநெல்வேலி.
எறும்பு வளர்ந்து எலிபேண்ட் ஆனால் என்னாகும்?

எல்லோரும் அதை ‘எலிAnt’ என்பார்கள். எலி… யானை ஆவதை விட ‘எளி(லி)யோனாய்’ இருப்பதே உயர்வு!

- இன்னும் கேட்கலாம்...


வெள்ளி வேடிக்கைகிரேசியைக் கேளுங்கள்கிரேசியை கேளுங்கள்கிரேசி மோகன்கேள்வி பதில்நகைச்சுவைவாசகர் கேள்விகள்தொடர்பாக்கியம் ராமசாமி

You May Like

More From This Category

dream

கனவு மெய்ப்பட...

இணைப்பிதழ்கள்
mobile-homes

நடமாடும் வீடுகள்

இணைப்பிதழ்கள்

More From this Author