Published : 29 Nov 2014 06:18 PM
Last Updated : 29 Nov 2014 06:18 PM

நான் ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர் ராஜ்குமார்: ரஜினிகாந்த் பேச்சு

பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் நினைவிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தான் ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர் ராஜ்குமார்தான் என்றார்.

கண்டீரவா ஸ்டூடியோவில் ரஜினிகாந்த் பேசும்போது: ராஜ்குமாரை தவிர நான் வேறு யாரிடமும் ஆட்டோகிராப் வாங்கியதில்லை. எனக்கு 11 வயதாக இருக்கும் போது நான் படித்த பள்ளிக்கு அருகில் உள்ள சனிபகவான் கோயிலுக்கு ராஜ்குமார் வருவது வழக்கம். அப்படி வந்த போது அவரிடம் நான் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறேன்.

இளைஞனாக, குழந்தையாக, மகனாக, கணவனாக, தாத்தாவாக மாறிய போதும் ராஜ்குமாரின் நினைவுகள் என்னைவிட்டு நீங்கியதில்லை.

பெங்களூருவில் அவருடன் ஒருமுறை நான் நடைப்பயிற்சி மேற்கொண்டேன், அப்போது அவரைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர், கடலை வியாபாரி, கார் வைத்திருக்கும் முதலாளி, பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் அவருக்குக் வணக்கம் தெரிவித்ததைப் பார்த்திருக்கிறேன்.

அப்போது, அவர், இவர்கள் வணக்கம் செலுத்துவது எனக்காக அல்ல, மாறாக என்னிடம் ஒளிந்திருக்கும் சரஸ்வதிக்காக என்றார் ராஜ்குமார். எந்த கலைஞர்களுக்கும் கிடைக்கும் பெருமை, மரியாதை, கவுரவம் நமக்கானது அல்ல, சரஸ்வதிக்கானது என்றும் கூறினார்.

இவ்வளவு எளிமையான, அடக்கமான மனிதர் ராஜ்குமார். அரசியலில் ஈடுபாடில்லாமல் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதை நிரூபித்தவர் ராஜ்குமார்.

ராஜ்குமார் இறந்த போது என்னால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்தச் சமாதியில் ராஜ்குமார் என்ற யோகி, ரிஷி உறங்குகிறார். இன்று நினைவிடமாக இருக்கும் இந்த இடம் நாளை கோயிலாக மாறும், அவரது ரசிகன் என்ற முறையில் இதனைக் கூறுகிறேன் என்றார் ரஜினிகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x