Last Updated : 07 Nov, 2014 12:55 PM

 

Published : 07 Nov 2014 12:55 PM
Last Updated : 07 Nov 2014 12:55 PM

உலக நாயகன் கட்சிக்கு மாறிய ரசிகனின் கடிதம்

" 'சாகர சங்கமம்' 'சலங்கை ஒலி'யாக தமிழில் வெளியானபோது, அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிடுவேன். காலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று ராத்திரியிலே திரையரங்கின் வாசலிலேயே நிறைய பேர் உறங்குவது உண்டு. 'சலங்கை ஒலி'ன்னா அப்படி ஒரு படம். அந்தக் காலத்துல சினிமான்னா அப்படி ஒரு க்ரேஸ்.

கமல் படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி இப்படி எதுல வந்தாலும் மெட்ராஸ்'ல பயங்கர ஓபனிங். 'பதினாறு வயதினிலே' படம் பார்க்க போனப்போ சைக்கிள்லேந்து கீழ விழுந்து அப்படியே தியேட்டர்க்கு போய் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் பார்த்தேன் முட்டி, கை காலுல அடிபட்டு ரத்தமுன்னு. அது எதுவுமே எனக்கு அப்போ பெருசா தெரியல.. படம் பார்த்ததுக்கு அப்புறமாவும் அந்த நெனப்பு தான். வலி தெரியல.

'ராஜ பார்வை' படம் பார்த்துட்டு ஒரு ரசிகன் கமலுக்கு ரத்தத்துல லெட்டர் எழுதினான் தெரியுமா? எண்பதுல இந்திய சினிமா இண்டஸ்ஸ்ட்ரி எதுல திரும்பி பார்த்தாலும் அது முழுக்க கமல் இருந்தாருன்னு தெரியுமா?

எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அதிகமாக கர்வ் கமலுக்குதான் இருந்துச்சு, 'காக்கிச் சட்டை' பார்த்துட்டு நிறைய பேர் ஜிம்முக்கு போக ஆரம்பிச்சாங்க. அப்போலாம் 'ஆர்கெஸ்ட்ரா ஸ்டேஜ்'ல பாடினாலே 'சனம் தேரே கசம்' பாட்டு தான், அப்பவே 'ஏக் துஜே கேலியே' பைக் ஸ்டன்ட்லாம் சூப்பரா இருக்கும் டா தெரியுமா?"

- இப்படியே நீண்டுகொண்டே போகிறது சிறு வயதில் கமல் பற்றி அப்பா கூறிய கதைகள்.

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்தில் நாம் ஒவ்வொரு நாயகரின் ரசிகராக இருக்கின்றோம். ஆனால், சினிமாவுக்கு எப்போது முழு ரசிகராக மாறுகிறோமோ அப்போது கமல் எனும் புத்தகத்தை ரசிக்காமல் எவராலும் இருக்க முடியாது.

என் சிறு வயதில் உழைப்பாளி, சின்ன தம்பி, வியட்நாம் காலனி போன்ற படங்களை ரசித்து பார்த்து வந்தேன். அப்போது சினிமா என்றால் வெறும் பொழுதுபோக்குதான். நம்மை மகிழ்விக்கும் ஓர் ஊடகம் அவ்வளவே. தொலைக்காட்சிகளில் 'நல்லவனுக்கு நல்லவன்', 'பாயும் புலி' போன்ற படங்கள் பார்த்துப் பார்த்து ஹீரோ இப்போ அடிப்பார் பார்'டா அ..டிகா அ...டிகா என்று கத்திக் கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததுண்டு. இதேபோன்ற படங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகி வருடங்கள் கடந்து 'மகாநதி' போன்ற படங்கள் பார்த்தபோது அது ஓர் ஒப்பாரியாகவே தோன்றியது.

அப்போதெல்லாம் 'நான் ரஜினி கட்சி', 'நான் கமல் கட்சி', 'நான் விஜயகாந்த் கட்சி' என்றெல்லாம் சுட்டிகளாக சண்டை போட்ட காலம் அது. அந்தக் காலத்தில்தான் 'மகாநதி' பார்த்து, கமல் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக நான் தாவினேன்.

'மகளிர் மட்டும்' படம் வெளியாகியபோது 'மகாநதி'யும் வெளியாகியதே.., அப்போ கமல் என்ன முட்டாளா? என்று வியந்ததும் உண்டு. உண்மையில் கூறினால் கமல் ஒரு போராளி. வழி தவறிப்போன ரசனையை மீட்க வந்த ஒரு போராளி.

'சகலகலா வல்லவன்', 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற படங்களை மட்டுமே கமல் தொடர்ந்து அளித்திருந்தால் மற்ற நடிகருக்கும் அவருக்குமான பெரியதொரு இடைவெளி பிறந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வெறும் சண்டை, மசாலாவாகத் தான் இருந்திருக்கும். அப்போது 'குணா' பார்க்காமல் இருந்திருந்தால்? எதற்காக அழகாக இருக்கின்ற ஒரு முகத்தை ஒருவன் அலங்கோலம் செய்து கொள்ள வேண்டும் என்று அப்போது வியந்ததுண்டு. முட்டாள் கதாப்பாத்திரம் என்றாலே நகைச்சுவையாளர்கள் தான் என்று காட்டிய ஒரு காலகட்டத்தில் முட்டாள் ஒருவன் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் தைரியம் ஒருவனுக்கு எப்படிப் பிறக்கும்? என்று 'சிப்பிக்குள் முத்து' படம் பார்க்கையில் எண்ணியதுண்டு.

தனது முதல் அரங்கேற்றத்திற்கு அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு வருகிறான். வருடங்களாய் மேற்கொண்ட தவத்திற்கு கிடைத்த வாய்ப்பு, திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு கனவு மேடை, தான் மேடையில் ஏறுவதை தன் அம்மா ஒரு முறை பார்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசை ஆசையாக வீட்டிற்கு ஓடோடி வருகிறான். வீட்டிற்கு வந்தால் அம்மா படுக்கையில் உடல் நலம் குன்றி உறங்கிக் கிடக்க, அவள் உயிர் பிரியும் நிலை.

இக்காட்சியை வேறொரு நடிகர் நடித்திருந்தால் அம்மாவின் கரங்கள் பிடித்து வசனம் பேசுவது போலதான் காட்சி அமைந்திருக்கும். ஆனால், பாலகிருஷ்ணன் ஒரு பரதக்கலைஞன் விழிகளில் நீர் சுரக்க 'கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்.. பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்' என்ற பாடல் ஒலிக்க தன் தாய் முன் ஆடத் துவங்குகிறான். ஆட்டம் என்றாலே சினிமா சந்தோஷத்தை தானே தந்திருக்கிறது கண்களில் நீர் சூழ தன் அம்மா முன் கமல் ஆடும் அந்த ஒரே காட்சியே கமலின் ரசிகனாக என்னை மாற்றியது. இதை கமல் தவிர வேறு எந்த நடிகர் செய்திருந்தாலும் காட்சி க்ளீஷேவாய் (cliche) மாறக் கூடிய அதீத வாய்ப்பு நிறைந்திருந்தது.

'சலங்கை ஒலி' படத்திற்கு பிறகு நான் பார்த்த ஒவ்வொரு படங்களிலும் கமல் ஈர்க்கத் தொடங்கினார்.

'ஹேராம்' படத்தில் வருகின்ற ஒரு வசனம் இது.. 'தாத்தா ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ன்னு சொல்ல மாட்டார். நான் வாழ்ந்த ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ன்னு தான் சொல்லுவார்' இந்த வசனம் கமல் இயக்கிய ஒவ்வொரு படங்களுக்கும் பொருந்தும்.

'விருமாண்டி', 'ஹே ராம்', 'விஸ்வரூபம்' இப்படங்களில் எல்லாம் தன் பார்வையில் தான் நினைத்தவற்றை நினைத்தவாறே உரைத்திருப்பார். அவர் கருத்துக்களில் நாம் முரண் கொள்வதும் உண்டு, உடன்படுவதும் உண்டு. அதுவரை எடுக்கப்படாத பல வாதங்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கும் பெருமை உலக நாயகனைச் சாரும்.

உலக அளவில் வசூல் சாதனை புரிந்ததால் மட்டும் அவர் உலக நாயகன் அல்ல. ரசிகர்களை தங்கள் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் நடிகர்களுக்கிடையே, 'என் பெயரால் உங்களுக்கு சண்டையிடும்படி வருகிறதென்றால் எனக்கு ரசிகர் மன்றம் எதுவும் வேண்டாம். எல்லாவற்றையும் முடக்குங்கள். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்' என்று ரசிகனின் நலனையும் கருதியதால் தான் அவர் உலக நாயகன்.

'தேவர் மகன்', 'நாயகன்', 'சத்யா', 'மைக்கேல் மதன காம ராஜன்', 'இந்தியன்', 'மூன்றாம் பிறை', 'மரோ சரித்திரா' போன்ற படங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ட்ரேன்ட் செட்டர். எத்தனை நபர்கள் கோடம்பாக்கம் வருவதற்கு வித்தாக அமைந்த படங்கள் இவை.

சாப்ளின் செல்லப்பாவாக புன்னகை மன்னனிலும், வேலு நாயக்கராக நாயகனிலும், ஷண்முகி மாமியாக அவ்வை ஷண்முகியிலும் இப்படி சார்லின் சாப்ளின், மார்லன் பிராண்டோ, ராபின் வில்லியம்ஸ் போன்ற மேதைகளின் மிக முக்கிய கதாபாத்திரங்களை தன்னால் சாத்தியப்படுத்த முடியும் என்று கமல் நிரூபணம் செய்திருப்பார். ஆனால் பால கிருஷ்ணனையும், கோபால கிருஷ்ணன் (எ) சப்பாணியாகவும், அப்புவையும் வேறு எந்த கலைஞனனால் சாத்தியப் படுத்திருக்க முடியும்?

"கமல் என்ற நடிகரை பார்த்து நான் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் கமல் என்ற பாடகனை பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்" - யேசுதாஸ்

''நான் தான் பின்னணியில் பாடினேன். ஆனால் பாடல் பார்க்கையில் கமல் தொண்டை அவ்வளவு கனக்கின்றது காட்சியிலும் உண்மையாகவே அவர் பாடிக் கொண்டே இருக்கிறார்'' – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

''கமல் இருக்கிற ஊர்ல இவன் எப்படி ஹீரோவானான்ணு எல்லாருக்கும் சந்தேகம்'' - ரஜினிகாந்த்

''கமல் ஆகணும்னு நினைக்காதீங்க. அது நடக்கக் கூடியதல்ல''- மோகன்லால்

''இந்தியன் சினிமாவில் எத்தனையோ சகாப்தங்கள் உண்டு. ஆனால் உன்னைப் போல் ஒரு மேதை இல்லை'' - வெங்கடேஷ்

''கமல் மாதிரி ஒரு நடிகர் எங்களுக்கு கிடைக்கலன்னா நாங்கலாம் டான்ஸ் மாஸ்டரா வெளியில அடையாளம் தெரிஞ்சிருக்க மாட்டோம்'' - ரகுராம்

இப்படி நீண்டு கொண்டே பட்டியல்கள், கூடிக்கொண்டே போகும் விருதுகள், பெருகிக் கொண்டே போகும் ரசிகர்கள்.

'விஸ்வரூபம்' படம் தடைப்பட்டபோது ஒரு ரசிகர் தனது வீட்டு பத்திரத்தை அனுப்பியதெல்லாம் எதனால்? கமல் தனது ரசிகர்களின் உணர்வோடு வாழ்ந்திருப்பதால் மட்டுமே. இத்தனை ரசிகர்கள் இருந்தும், பாக்ஸ் ஆபிசில் நெத்தியடி அடிப்பதற்கான சூட்சமத்தை அறிந்த போதும் தன் மனதிற்கு தோன்றியவற்றை தொடர்ந்து செய்வதால் மட்டுமே ரசிகர்களுக்கு அவர் ஒரு உலக நாயகன். ரசிகர்களால் விமர்சிக்கப்படுவதும், விமர்சகர்களால் ரசிக்கப்படுவதும் கமலுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடியவை.

அன்புள்ள உலக நாயகனே.. நீங்கள் மென்மேலும் சாதனைபுரிய உங்களின் கடவுள்களாகிய நாங்கள் வணங்குகிறோம்.

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் >https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x