Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

வில்லா - தி இந்து விமர்சனம்

ஒரு படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவிட்டால், அது ஒரு பிராண்ட் ஆகிவிடுகிறது. அந்த பிராண்ட் சம்பாதித்து வைத்திருக்கும் பெருமதிப்பை மூலதனமாக வைத்துக்கொண்டு, ரீமேக், இரண்டாம் பாகம், முன்கதை போன்ற பெயர்களில் அதைப் போலி செய்வதும், பிராண்ட் இமேஜைக் காட்டியே அதை ரசிகர்களிடம் திணிப்பதுமாகிய போக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்துவருகிறது. ‘சிங்கம்’ படம்போலத் திறமையான பொழுதுபோக்குப் படமாக இருந்துவிட்டால் ரசிகர்கள் கொண்டாடிவிடுகிறார்கள். அதுவே ‘பில்லா 2’ போல ருசிகரமற்ற கதையும் திரைக்கதையும் என்றால், குப்புறத் தள்ளிவிடுகிறார்கள். ‘பீட்சா இரண்டாம் பாகம்’ என்ற முஸ்தீபுடன், ஊடக வெளிச்சத்துக்கு நடுவே வெளியாகியிருக்கும் ‘வில்லா’ இதில் எந்த ரகம்?

பேய், ஆவிப் படங்களின் தாயகமான ஹாலிவுட்டில் ‘வாக்கிங் டெட்ஸ்’ வகைப் படங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. விட்டலாச்சார்யாவின் பேய்ப் படங்கள் போன்ற சில விதிவிலக்குகள் தவிர இந்தியப் பேய்படங்கள், ஹாலிவுட் பேய்ப் படங்களின் தாக்கத்திலேயே வந்துகொண்டிருந்தன. ஆனால் ‘பீட்சா’, இந்தியப் பேய்ப் படங்களின் முகத்தை கொஞ்சம் மாற்றியமைத்தது. ‘பீட்சா’வைப் போலவே ‘வில்லா’விலும் வீடு ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஆகியிருக்கிறது. ஆனால் ‘வில்லா’வின் உள்ளே செல்லும் கதாபாத்திரங்களில், நாயகன் உட்பட யாருமே பயப்படவில்லை. பயப்படுவதுபோல அவர்கள் நடிப்பதை நினைத்து நமக்கு சிரிப்பாவது வருகிறதா என்றால் அதுவும் இல்லை. அந்த அளவுக்கு காட்சியமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன.

இளம் எழுத்தாளர் ஜெபின் (அசோக் செல்வன்), தனது நாவல்களைப் பதிப்பிக்க விரும்புகிறார். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. எழுதாமல் இருக்கும் நேரங்களில், ஓவியக் கல்லூரி மாணவியான ஆர்த்தியைக் (சஞ்சிதா ஷெட்டி) காதலிக்கிறார். இதற்கிடையில் கோமாவில் விழுந்த எழுத்தாளரின் தந்தை (நாசர்) இறந்துபோகிறார். அவர் தனது மகனுக்காக விட்டுச்சென்ற ஒரு பழைய வீடு பாண்டிச்சேரியில் இருக்கிறது. அதுதான் வில்லா. ஓவியரான நாசர், அந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில், பல ஓவியங்களை வரைந்து சுவரில் எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் மாட்டியிருக்கிறார். பலவற்றை ஒரு அறையில் போட்டுப் பூட்டிவைக்கிறார். அந்த ஓவியங்களைப் பார்க்கும் மகன், அந்த ஓவியங்களில் விவரிக்கப்பட்டிருப்பதுபோலத் தன் வாழ்க்கையில் நடப்பதாக உணர்கிறார். ஒரு ஓவியத்தில் காணப்படும் விபரீதமான காட்சி தன் வாழ்க்கையில் நடந்துவிடக் கூடாதே என்று பயப்படுகிறான். அதைத் தவிர்க்க அவன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

அறிமுக இயக்குநர் தீபன் சக்கரவர்த்தி சுவாரஸ்யமான கதையைக் கையில் எடுத்திருக்கிறார். ஒரு வீட்டில் இருக்கும் ஓவியங்களால் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும்தான் கதையின் ஆதார முடிச்சு. இதை வலுவான திரைக்கதையின் மூலம் சொல்லத் தவறிவிட்டார் சக்கரவர்த்தி. லாஜிக் பார்த்துக் கேள்விகள் கேட்டால் படத்தில் பல குறைகள் அம்பலமாகும். ஆனால் படத்தில் இருக்கும் சஸ்பென்ஸும் வெளிப்பட்டுவிடும் என்பதால் அதை விட்டுவிடலாம். விபரீதம் குறித்த பிரமைகளும் அச்சங்களும் வெளிப்படும் விதம் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றாலும் எதிர்பாராததாக இருக்கிறது.

நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி ஆகியவற்றைப் படத்தில் விவாதிக்கும் இயக்குநர் அவற்றுக்கு அறிவியல் ரீதியான தரவுகள் எதுவும் தரவில்லை. ஒரு கதை என்னும் விதத்தில் ஆர்வமாகப் பார்க்க வைக்கும் தன்மையும் அவ்வளவாக இல்லை.

அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள். நாசரின் அனுபவம் அவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது.

விறுவிறுப்பான நாவல் தன்மை கொண்ட ஒரு ஆவிக் கதையை, விறுவிறுப்பான திரைக்கதை மூலமும், ரசிகர்களைக் கட்டிப்போடும் காட்சிப்படுத்தல் மூலமும் சொல்லியிருந்தால் பீட்சாவின் பெயரைக் காப்பாற்றியிருக்கலாம்.

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

நடிகர்களின் கடின உழைப்பும் தேர்ச்சியான பின்னணி இசையும் இருந்தும் வலுவல்லாத திரைக்கதை, அழுத்தமில்லாத காட்சியமைப்புகளால் ‘வில்லா’ சோபிக்க வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x