Last Updated : 06 Jun, 2016 03:56 PM

 

Published : 06 Jun 2016 03:56 PM
Last Updated : 06 Jun 2016 03:56 PM

டிவா டியூ டியான்: வினோத உத்தியில் நூற்றாண்டு வரலாறு!

தைவான் நாட்டின் திரைப்படமான Twa Tiu Tiann (2014), அந்நாட்டின் நூற்றாண்டுகால வரலாற்றை சொல்வதற்கு படத்தில் கையாண்ட 'காலப்பயணம்' உத்தி மிகவும் வினோதமானது.

கல்லூரி மாணவர்கள் மியூசியத்திற்குச் செல்கிறார்கள். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்களை அவர்கள் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கையில் புரபொசர் பி என்பவர் ஜாக் எனும் மாணவனிடம் பழைய பாணி கேமரா ஒன்றைத் தருகிறார். அந்தக் கேமரா பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. அபூர்வ வகை கேமரா போலத் தோன்றுகிறது. எதிரே நிறுத்தி வைத்துள்ள ஓவியத்தை 'கிளிக்'கிடச் சொல்கிறார்.

அந்த ஓவியம் டாய்பெய் நகரத்தின் 1920 காலகட்டத் தன்மையை காட்டுகிறது. அந்த ஓவியத்தில் நகரின் முக்கியப் பகுதியான டாடாவோசெங் வீதிகளின் தேயிலை, துணிமணிகள், மூலிகை மருத்துவக் கடைகளின் வீதி சித்தரிக்கப்பட்டுள்ளது.

புரபசர் சொன்னபடி ஜாக் அபூர்வ வகை கேமராவால் ஓவியத்தை கிளிக்கிடுகிறான். சில விநாடிகளில் ஓவியம் உயிர்பெறுகிறது.

டாடாவோசெங் எனும் நெருக்கடி மிக்க வீதியில் மக்கள் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருக்க நாம் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஜாக் ஓவியத்துக்குள் இழுக்கப்படுகிறான்.

2014ல் இருந்த கல்லூரி மாணவன் ஜாக் இப்போது 1920க்கு வந்துவிட்டான். ஒரு கடையில் நுழைகிறான். அது அக்காலத்திய மாடர்ன் டிரஸ் தைத்துத்தரும் தையல் மற்றும் துணிக்கடை. அங்குள்ள இளம் பெண்மணி ஜிஞ்சரைப் பார்த்து இவன் தன் தாயைப்போல உணர்கிறான். அப்பெண்மணியும் இவனை மகனாக ஏற்றுக் கொள்கிறார்.

கடையில் இருந்தபடியே அரசியல் இயக்கங்களிலும் அவன் கலந்துகொள்கிறான். ஜப்பானியர்களுக்கு தைவானிய மக்கள் அடிமையாயிருந்த காலம் அது. இக்காலக்கட்டத்து மக்கள் சமூக வாழ்க்கையும் பண்பாடும் திருவிழாக்களும் அரசியல் நிலையும் இத்திரைப்படம் முழுவதும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

1920களில் முக்கிய அம்சம் தைவான் விடுதலைப் போராட்டம். அந்த வரலாற்றைப் பேசுவதற்காக இந்த காலப்பயண உத்தியை இயக்குநர் கையாண்டவிதம் அருமை. ஜப்பானின் அடிமைத் தளையிலிருந்து தைவானிய மக்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்க சியாங் வெய் சூய் போராடுகிறார்.

இப்படத்தின் முக்கியப் பாத்திரங்களான புரபெசர் பி மற்றும் மாணவன் ஜாக், கடந்த நூற்றாண்டின் காலகட்டத்தில் அவன் காதலிக்கும் கெய்ஷா பெண் ரோஸ் உள்ளிட்டவர்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். தன் தோழிகளோடு ஜாக் அம்மாவின் ஃபேப்ரிக் கடைக்கு துணி வாங்கவந்த பெண்தான் ரோஸ். அவனுடன் நட்பு ஏற்பட்டு அதுவே காதலாக மலர்ந்துள்ளது.

இப்படத்தில் ஒரு முக்கிய காட்சி.

1923ல் ஜப்பான் மன்னர் தைவான் நாட்டு மக்களுக்கு உரிய அங்கீகாரம் தந்துவிட முடிவுசெய்து அதற்கு முன் தைவான் மக்களை ஒருமுறை பார்த்து விட்டு வர புறப்படுவார். அவர் வருகை தர உள்ள ஊர்வலத்தில் சில தீவிரவாதிகள் அவரைக் கொல்ல சதி செய்கிறார்கள்.

தூத்தில் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து நாட்டுத் துப்பாக்கிகளின் வழியே அவர் குறிவைக்கப்படுவதை சாலையில் இருக்கும் ஜாக் பார்த்துவிடுகிறான். புரபசர் பி'யிடமிருந்து வினோதக் கேமராவை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் முதல் மாடிக்கு ஓடிவந்து அங்கிருந்து பால்கனி வழியாக முதலில் பார்க்கிறான். அருகில் அவன் காதலியும் வந்து நிற்கிறாள்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடும்போது அப்போது உடனே அங்கிருந்து குறுக்கே மேல்நோக்கி பாய்ந்து கேமராவை கிளிக் செய்வான். அவனுடன் அவனுடைய காதலியும் பாய்ந்துவருவாள். அவன் கேமராவைக் கொண்டு காலத்தை நிறுத்துவான். நாட்டுத் துப்பாக்கியிலிருந்து பாய்ந்துவந்த பெரிய அளவு தோட்டாவும் பாதியில் நிற்கும்.

அந்த நேரத்தில் சாலையில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த புரபசரும் பாய்ந்து அந்த ஓவியத் திரையை விட்டெறிவார். இவர்கள் அனைவரும் ஓவியத்திற்குள் நுழைய 21ஆம் நூற்றாண்டுக்குள் மீண்டும் வந்துவிடுவார்கள்.

ஜாக்கினுடைய காதலி கெய்ஷா பெண் ரோஸும் புதிய நூற்றாண்டுக்கு அவனுடன் வந்து விடுவாள். அவள் பழைய காலத்திற்கே செல்லவேண்டிய நிலையில் இருப்பவள். அதை புரிந்துகொண்டு அவளை கண்ணீரோடு வழியனுப்பி ஜாக் வினோத கேமராவை கிளிக்கிட அவள் ஓவியத்துக்குள் சென்றுவிடுவாள்.

இப்படம் தமிழிலும் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் ஒரு சிறந்த கலைசாதனம் என்ற வகையில் அதை வெளிப்படுத்த அவசியப்படும்போது எவ்வகையான உத்திகளையும் சிறந்த படைப்பாளிகள் கையாள்வது வழக்கம். ட்வா ட்யூ ட்வான் (2014) கையாளப்பட்ட வினோத கேமராவின் வழியே காலப்பயண உத்தியில் தைவானிய விடுதலை வரலாற்றை தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் தைவானிய படத்தைவிட அதன் ஆதார உத்தியை மட்டும் எடுத்துக்கொண்டு அடிநாதமான கதாபாத்திரங்களோடு இன்னும் சில பாத்திரங்களையும் தமிழில் சேர்த்துக்கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இம்முறையிலும் தொழில்நுட்பரீதியாகவும் தமிழ்த்திரைப்படம் முன்னணியில் உள்ளது என்பதை மறுக்கமுடியாது.

ஆனால் கேமராவை கடிகாரம் ஆக்கியது, துணிக்கடையை கடிகாரக்கடையாக ஆக்கியது போன்ற நோக்கங்களையும், இப்படம் 'ட்வா ட்யூ ட்யான்' திரைப்படத்தின் உத்திமுறைகளை எவ்வகையானதொரு கதைக்காக எடுத்துக்கொண்டது என்பதையும் நினைத்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. நம்மவர்கள் பழைய 'நீரும் நெருப்பும்' படத்தில் எம்ஜியார் செய்த (இந்த வகையான படங்களின் அடிப்படை) அண்ணன்தம்பி இருவேடக் கதையை எடுத்துக்கொண்டார்கள்.

அதுமட்டுமின்றி வில்லன் கேரக்டரைக் கொண்டு அவன் நக்கலாக சிரித்துக்கொண்டு குழந்தையின் உயிரோடு விளையாடும் கொடூரக் காட்சிகளை வைத்து ரசிகர்களுக்கு டிராமா செய்திருப்பார்கள். எவ்வளவு படங்களில்தான் இந்த மாதிரி வில்லன் சிரிப்புகளைப் பார்த்துப்பார்த்து சலிக்காமல் ரசித்துக்கொண்டிருக்கப் போகிறோமோ தெரியவில்லை.

ஓர் உத்திவழியே என்றாலும் ஒரு நாடு கடந்துவந்த தனது 100 வருட உண்மையான காலப்பயணத்தை திரும்பிப் பார்த்த கதையை இங்கே காதுகுடையும் காட்டன்பட்ஸாக மாற்றியிருப்பதுதான் நமது தமிழ் திரைப்பட ரசனையின் இன்றைய பரிதாப நிலைக்கு உண்மையான சான்று.

வெளிநாட்டுப் படத்தை உயர்த்தியும் தமிழர் சினிமாவைத் தாழ்த்தியும் எழுதுவதில் எந்தவிதப் பெருமையும் இல்லை. அதில் மகிழ்ச்சியும் இல்லை. அது நமது நோக்கமுமில்லை. ஆனால் அறிவுத்தளத்தில் இயங்குவோராவது குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி உலகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அது நமது புதிய தேடல்களின் முயற்சிப்பாதையை மேலும் செம்மையாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x