Last Updated : 27 Jun, 2016 01:15 PM

 

Published : 27 Jun 2016 01:15 PM
Last Updated : 27 Jun 2016 01:15 PM

திருட்டு விசிடியை ஒழிக்க சட்டபூர்வமாக்குவதே வழி: ஒரு தயாரிப்பாளரின் கொந்தளிப்பு

திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டபூர்வமாக்கி விடுங்கள் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமாக குறிப்பிட்டார்.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் பிரபு ரணவீரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பகிரி'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் எம்.எல்.ஏ கருணாஸ். லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமாக பேசினார். விழாவில் அவர் பேசியது:

"இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி. இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள் தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள்.

இன்று சினிமாவை யாரும் பார்க்காமல் இல்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது.

ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும்? கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டபூர்வமாக்கி விடுங்கள்.

அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்? திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம். பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?

காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள்.கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள்?.

தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலை காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார். இவை எல்லாமே மாறவேண்டும். திரையரங்கிற்கு படம் கொடுக்கும் போது ஏன் சதவிகித அடிப்படையில் வியாபரம் செய்ய மறுக்கிறார்கள்?'' என்று பேசினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x