Published : 26 Nov 2014 10:19 AM
Last Updated : 26 Nov 2014 10:19 AM

எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் வசந்தபாலன்

‘காவியத்தலைவன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளதால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். படத்தை விளம்பரப்படுத்துவதற்கான முயற்சிகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்து பேசினோம்.

12 வருடங்களில் நீங்கள் 5 படங்கள்தான் இயக்கியிருக்கிறீர்கள். இப்படி குறைவாக படங்களை இயக்கியதற்கு என்ன காரணம்?

வெளிப்படையாகச் சொன்னால் சோம்பேறித்தனம்தான். ‘காவியத் தலைவன்’ படம் மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால் நான் இன்னும் என்னுடைய அடுத்த படத்துக்கான கதையைக் கூட எழுத ஆரம்பிக்கவில்லை. இதற்கு என் சோம்பேறித்தனம்தான் காரணம்.

உங்களின் அடுத்த படம் குறித்து திட்டமிட்டுவிட்டீர்களா?

இதுவரையிலும் செய்யாத ஒரு புதுமையான கதையை இயக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். அவ்வளவுதான். மற்றபடி வேறு எந்தத் திட்டத்தையும் போடவில்லை.

உங்கள் முதல் படம் ‘ஆல்பம்’ பெரிய அளவில் பேசப்படவில்லை. அந்தப் படம் வெளிவந்த பிறகு உங்களின் அடுத்த படமான ‘வெயில்’ வெளிவர 4 ஆண்டுகள் ஆனது. ‘ஆல்பம்’ படம் உங்களுக்கு கற்றுத் தந்தது என்ன?

முதன்முதலாக சைக்கிள் ஓட்டும்போது நாம் கீழே விழுவோம். பிறகு எழுந்து நின்று சரியாக ஓட்டுவோம். அந்த வகையில் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டபோது விழுந்த படம்தான் ‘ஆல்பம்’. அப்படி விழுந்ததில் நிறைய கற்றுக்கொண்டேன்.

உங்கள் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் பெரிய அளவில் சாதிப்பதில்லையே. இதற்கு என்ன காரணம்?

நான் இயக்கிய ‘வெயில்’, ‘அங்காடி தெரு’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப் படங்கள்தான். ஆனால் அவை பாக்ஸ் ஆபீஸின் சூப்பர் ஹிட் படங்கள் இல்லை. ஒரு படம் சூப்பர் ஹிட்டாக வேண்டுமானால் அதற்கு பெரிய ஹீரோக்கள் தேவை. அப்போதுதான் கிராமங்களில் இருக்கும் மக்கள் படத்தைப் பார்க்க வருவார்கள், பிரபலமானவர்களின் முகமே மக்கள் கூட்டத்தை தியேட்டருக்குள் இழுக்கும்.

பெரிய ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படத்தை இயக்க உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா?

பெரிய ஹீரோவை வைத்து படம் செய்தால் எனக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். படமும் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதற்கான சூழ்நிலையும், கதையும் அமைந்தால் அதைப் பற்றி யோசிப்பேன்.

உங்கள் அடுத்த படத்தின் கதையை ஒரு பெரிய ஹீரோவுக்காக எழுதப் போகிறீர்களா அல்லது கதையை எழுதிவிட்டு ஹீரோவை தேடப் போகிறீர்களா?

இந்த கேள்வியை என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஒரு சின்ன ஹீரோவுக்காக கதை எழுதிவிட்டு 2 வருடங்கள் படம் எடுப்பதைவிட பெரிய ஹீரோவுக்காக கதையை எழுதிவிட்டு அவரது கால்ஷீட்டுக்காக 2 வருடங்கள் காத்திருக்கலாமே.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ‘கதை திருட்டு’ அதிகரித்து வருகிறதே?

இன்ஸ்பிரேஷன் இல்லாமல் படம் பண்ண முடியாது. எங்கிருந்தோ ஒரு விஷயத்தை பார்த்து ஒரு ஐடியாவை உருவாக்குகிறோம். அதனால் எல்லா விஷயத்தையும் ‘காப்பி-கேட்’ (copy-cat) லிஸ்ட்டில் சேர்ப்பது தவறு. அதே மாதிரி சினிமாக்காரர்களும் ஒரு விஷயத்தால் கவரப்பட்டு படம் செய்யும்போது ஒரு நன்றி கார்டு போடவேண்டும். அதை பல பேர் செய்வதில்லை. யோசித்து பார்த்தீர்கள் என்றால் மிஸ்டர் க்ளீனாக இருப்பவர்கள் மீது இப்படிப்பட்ட புகார்கள் வருவதில்லை. அப்படி இல்லாதவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் எந்த அளவுக்கு வளர்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களை க்ளீனாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களால் சில படங்கள் தோல்வி அடைவதாக கூறப்படுகிறதே?

ஒரு படம் வெளிவந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஒரு நல்ல விமர்சனத்தை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, அதே மாதிரி எதிர்மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எப்படி தடுப்பீர்கள்? ஒரு படத்தை வாட்ஸ் அப்பில் நாம் விளம்பரப்படுத்தும்போது அதில் வரும் விமர்சனங்களையும் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

ஒரு படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்று ரசிகர்களிடம் யாராலும் சொல்ல முடியாது. அந்த விமர்சனங்களைத் தாண்டி நீங்கள் வளர்கிறீர்களா, இல்லையா என்பது மட்டும்தான் பிரச்சினை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x