Published : 24 Nov 2014 12:56 PM
Last Updated : 24 Nov 2014 12:56 PM
சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை கையாள்வதற்காக தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் துறைமுகத்துக்கு சென்று வருகிறது.
துறைமுகத்தில் சுங்கத் துறை ஊழியர்கள் குறைவாக உள்ளதால், சரக்குகளை விரைவாக சோதனை செய்து அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், துறைமுகத்திற்கு வெளியே நீண்ட தூரத்துக்கு லாரிகள் வரிசையாக நிற்கின்றன.
மேலும், கப்பல்கள் வரும் போது ஒரே நேரத்தில் சரக்குகள் கையாளப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறிய கன்டெய்னர் லாரிகளின் டிரைவர்கள், ஒவ்வொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை ஏற்றிச்செல்ல தனித் தனி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் சனிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து 8 கி.மீ. தூரம் வரை நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், துறைமுகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்தன.
இதையடுத்து, துறைமுக கழக அதிகாரிகள் நேற்று கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் இறுதியில் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து ராயபுரம் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரவி ‘தி இந்து’விடம் கூறியதாவது.
இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் துறைமுகத் துக்கு வரும் கன்டெய்னர் லாரிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தலா மூன்று வழிகளை பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதுபோல மீஞ்சூரை அடுத்த பர்மா நகர் வழியாக கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கு தடை விதிக்குமாறு கோரினோம். இக்கோரிக்கையை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டனர்’’ என்றார்.