Published : 25 Nov 2014 11:24 AM
Last Updated : 25 Nov 2014 11:24 AM

‘லிங்கா’ படத்துக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த `லிங்கா’ படத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி, ‘முல்லைவனம் 999’ பட இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது முல்லைவனம் 999 படத்தின் கதையைத் திருடி, லிங்காவை தயாரித்துள்ளனர் என மனுவில் ரவிரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தங்களது மனுவில், மனுதாரர் ரவிரத்தினத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, யூ டியூப்பில் வெளியிடப்பட்ட மனுதாரரின் கதையை திருடி லிங்கா படத்தை தயாரித்துள்ளனர். இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீஸார்தான் விசாரிக்க வேண்டும். ஆனால், மனுதாரரின் புகாரை சட்டம், ஒழங்கு போலீஸாருக்கு அனுப்பியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு 1.40 கோடி ரசிகர்கள் உள்ளனர். அவரை தங்கள் கட்சிக்கு வருமாறு அனைத்து கட்சித் தலைவர்களும் அழைத்து வருகின்றனர். அவருக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்குகின்றனர்.

லிங்கா என்ற பெயரை இயக்குநர் அமீர் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த பெயரை அமீரை கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளனர். லிங்காவை ரூ.300 கோடிக்கு தயாரித்துள்ளனர். ரூ.600 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். முல்லைவனம் 999 கதையை தாக்கல் செய்கிறோம். லிங்கா படத்தின் கதையை தாக்கல் செய்யட்டும். இரு கதைகளையும் படித்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, மனுதாரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முல்லைவனம் 999 கதையை திருடி லிங்கா தயாரித்ததாகவும், அந்தப்படத்தின் கதையை திருடவில்லை என லிங்கா படத்தரப்பும் கூறிவருகிறது. இரு படத்தின் கதையையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் கதை திருட்டு குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பும் எந்த ஆவணங்களையும் தரவில்லை. ஆவணங்கள் எதுவும் இல்லாதபோது விசாரணையை முடிப்பது சிரமம் என்றார்.

மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, மனுதாரரின் கோரிக்கைக்கு சிவில் நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.

ரஜினிகாந்த் தரப்பில் வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி வாதிடும்போது, லிங்கா படத்துக்கு இன்னும் சென்சார் போர்டு சான்றிதழ் தரவில்லை. அதற்குள்ளாகவே படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என யூகித்து நீதிமன்றம் வந்துள்ளனர். இது குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயர் சூட்டிய கதையாக உள்ளது. மேலும், மனுதாரர் தனது மனு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே நீதிமன்றம் வந்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வேண்டும் என்றே அவதூறு கூறப்பட்டுள்ளது. கதை குறித்து எதுவும் தெரியாமல் நீதிமன்றம் வந்துள்ளனர். சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். லிங்கா படம் ரூ.600 கோடிக்கு விற்பனையானது என்பது தவறான தகவல். மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x