Last Updated : 29 Jan, 2017 04:10 PM

 

Published : 29 Jan 2017 04:10 PM
Last Updated : 29 Jan 2017 04:10 PM

தமிழக அரசுக்கு 3 கோரிக்கைகள்: நிறைவேற்றாவிட்டால் அகிம்சை போராட்டம் - சிம்பு ஆவேசம்

தமிழக அரசுக்கு 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ள நடிகர் சிம்பு அவற்றை நிறைவேற்றாவிட்டால் அகிம்சை வழியில் போராடுவேன் என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டம் நிறைவுற்றுள்ளது. இப்போராட்டத்தின் இறுதியில் வன்முறை வெடித்தது. இப்போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளது.

இப்போராட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்து ஆதரவு தெரிவித்து வந்தவர் சிம்பு. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பங்கெடுத்து தமிழகத்தில் வேறொரு புரட்சி நடைபெற்றுள்ளது. அகிம்சை வழியில் அமைதியான போராட்டமாக நடைபெற்றது.

இறுதியில் சட்டம் நிறைவேற்றப்பட்டப் போது, அரசாங்கத்திலிருந்து யாராவது ஒருவர் வந்து மக்களிடம் எடுத்துச் சொல்லியிருந்தால் இப்பிரச்சினை இந்தளவுக்கு வந்திருக்குமா என தெரியவில்லை. அன்று காலை பிரச்சினை தொடங்குகிறது, மாலையில் சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு மெரினாவுக்கு வந்து அத்தனை பேருக்கு மத்தியில் அனைத்து மீடியாவையும் அழைத்து "இவ்வளவு நாள் நீங்கள் போராடிய கஷ்டத்துக்கு நல்ல ஒரு முடிவு கிடைத்துள்ளது. இனிமேல் பிரச்சினையில்லை. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் நாங்கள் நின்று குரல் கொடுப்போம்" என்று கூறி தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்திருந்தால் சந்தோஷமாக கலைந்து சென்றிருப்பார்கள்.

இக்கூட்டம் யாரையும் முன்வைத்து கூடிய ஒரு கூட்டம் கிடையாது. இதற்கு யாரும் தலைவர்கள் கிடையாது. இப்போராட்டம் திசை திரும்பிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெடுவது போன்று சில விஷயங்கள் நடக்கிறது. முஸ்லிம்கள் சாப்பாடு போடுகிறார்கள் என்கிறார்கள், அப்படியென்றால் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையா. அவர்களுக்கு உணர்வு கிடையாதா?. இப்போராட்டத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருமே ஜாதியை விட்டு தமிழர்கள் என்ற உணர்வோடு தான் வந்து போராடினார்கள்.

இப்போராட்டத்தில் என்ன நடந்தது, வெற்றியா, இதை கொண்டாட வேண்டுமா, வேண்டாமா, துக்கப்பட வேண்டுமா, சந்தோஷப்படணுமா என்று புரியாத நிலைமைக்கு இதை கொண்டு வந்து முடிக்க அவசியம் தேவையே இல்லை. இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாக இருக்கிறது.

6 நாட்கள் மெரினாவுக்கு வராத காவல்துறை, அன்று காலை மட்டும் வரக்காரணம் என்ன?. சட்டம் வந்துவிட்டது கலைந்துச் சொல்லுங்கள் என்று காவல்துறை சொன்ன போது, அங்கிருந்தவர்கள் கொஞ்சம் நேரம் கொடுங்கள் என கேட்டவர்களை அங்கிருந்து இழுத்து ஏன் அப்புறப்படுத்த வேண்டும். அந்த விஷயம் மட்டும் நடைபெறவில்லை என்றால் வன்முறையே வந்திருக்காது. மாணவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. யார் மீது தவறு என்ற விஷயத்துக்குள் நான் போகவிரும்பவில்லை. அவ்வளவு நாள் வராத காவல்துறை, அன்று மட்டும் வரக்காரணம் என்ன என்பது தான் என் கேள்வி. அவர்களுக்கு நேரம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி வைத்திருக்கலாம். இன்று குழப்பமான ஒரு சூழலுக்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன?.

அன்று காலை நான் வீட்டிலிருந்து கிளம்பும் போது என்னால் அங்கு செல்ல முடியவில்லை. என்னைப் போன்று பலர் அங்கு வரத்துடிக்கும் போது அனைத்து இடங்களிலும் காவல்துறை நிறுத்தி விட்டார்கள். அப்போது பிரச்சினை என்றவுடன் மீனவக் குப்பத்திலிருந்தவர்கள் ஒடிவந்து தமிழனாக உதவினார்கள். அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அதற்கு முந்தைய நாள் இரவு சட்டம் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடக் கூடாது என்று சொன்ன என்னையும் நீங்கள் கைது செய்ய வேண்டும். எதற்காக பலரை கைது செய்துள்ளார்கள் என புரியவில்லை. யார் தவறு செய்திருந்தாலும் அந்த ஆண்டவனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட புகைப்படங்களை வைத்து கைது செய்தோம் என்று சொல்கிறார்கள். அதே போன்று காவல்துறை அதிகாரிகளும் தீ வைத்த வீடியோக்கள் உள்ளது. அவர்கள் மீதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் 3 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். அவை

* மீனவர்கள், மாணவர்கள் என பலரை கைது செய்துள்ளீர்கள். அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்படி விடுவிக்கவில்லை என்றால் அவர்கள் அங்கு உட்கார நானும் காரணமாக இருந்துள்ளேன். என்னையும் கைது செய்ய வேண்டும்.

* வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைத்தே ஆகவேண்டும்.

*இவ்வளவு நாள் நாங்கபட்ட கஷ்டத்துக்கு அராசங்கமே ஒரு நாளைத் தேர்வு செய்து, நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த வெற்றி, இன்றைக்கு சந்தோஷமாக ஜல்லிக்கட்டு நடத்தலாம்" என சொல்ல வேண்டும்.

இது எனது தாழ்மையான வேண்டுகோள். இது நடைபெறவில்லை என்றால், நான் கண்டிப்பாக என்னுடைய விதத்தில் அகிம்சை வழியில் நேர்மையாக உணர்வுடன் போராடுவேன். மீனவர்களுக்காக நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அதே போன்று மாணவர்களுக்கு கட்சி ஆரம்பிக்க உரிமையுள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், கருத்து சொல்லலாம்.

நான் அரசியலுக்கு வந்து தான் கேள்வி கேட்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். என்றைக்குமே அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது" என்று ஆவேசமாக பேசினார் சிம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x