Last Updated : 10 Nov, 2013 11:41 AM

 

Published : 10 Nov 2013 11:41 AM
Last Updated : 10 Nov 2013 11:41 AM

இரண்டாம் உலகில் சந்திக்கும் காதலர்கள்

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.

தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.

இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.

ஜனவரி 2013ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x