Last Updated : 21 May, 2017 04:24 PM

 

Published : 21 May 2017 04:24 PM
Last Updated : 21 May 2017 04:24 PM

சங்கமித்ரா படத்தை சர்வதேச அளவில் பேச வைப்பதே குறிக்கோள்: இயக்குநர் சுந்தர்.சி

'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேசப்படும். அதுதான் எங்கள் குறிக்கோள் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சங்கமித்ரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிடப்பட்டும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'சங்கமித்ரா' குறித்து முதன் முறையாக இயக்குநர் சுந்தர்.சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "'சங்கமித்ரா' பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நான் எப்போதும் எடுக்க நினைத்த வகை படம் இது. கடந்த 10 வருடங்களாக இதற்கான யோசனை என்னிடம் இருந்தது. சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பத்துக்காக காத்திருந்தேன். இப்போது நேரம் கனிந்துவிட்டது. ஆரம்பிப்பதற்கு முன் அந்த கதைக்குத் தேவையானதை தர முடியுமா என்பதை உறுதி செய்ய விரும்பினேன்.

'பாகுபலி' தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் பேச வைத்தது. 'சங்கமித்ரா' சர்வதேச அளவில் பேச வைக்கும். அதுதான் எங்கள் குறிக்கோள். அதனால்தான் படத்தை நாங்கள் கான் திரைப்பட விழாவில் துவக்கினோம். ’சங்கமித்ரா’ எந்த ஒரு மேற்கத்திய சாயலும் இல்லாமல் மொத்தமாக இந்தியப் படமாக இருக்கும் என்றாலும், சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்துள்ளோம்

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் சாதனைகளையும், வளத்தையும் உலகத்தின் பார்வைக்கு எடுத்து வர வேண்டும் என்பதே நோக்கம். இந்தியாவில் படம்பிடிக்கப்பட்ட மேற்கத்திய படங்கள் எல்லாம் சேரிகளையும், ஏழ்மையையும் மட்டுமே பேசின. அது இந்தியாவின் 5 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மறுபக்கத்தை என் படம் கொண்டாடும்.

இதுவரை எனது வெற்றிகள் எல்லாமே இந்தப் படத்துக்கான ஏணிப்படிகள் தான். 'சங்கமித்ரா' தான் எனது இயக்குநர் வாழ்க்கையில் முக்கியப் படமாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி

இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2018-ம் ஆண்டு இறுதியில் முதல் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x