Published : 29 Oct 2014 09:26 AM
Last Updated : 29 Oct 2014 09:26 AM

மெல்லத் தமிழன் இனி...! 16 - இன்னும் மிச்சமிருக்கிறது நம்பிக்கை

ஒன்றும் குடிமூழ்கிவிடவில்லை. இன்னமும் மிச்சமிருக்கிறது நமக்கான நம்பிக்கை, நமக்கான எதிர்காலம். அசாதாரணச் சூழல்தான்; ஆனாலும், கடந்துவர முடியும். உண்மைதான்! மது ஒழிப்பில் முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தூரத்தில் தெரிகிறது ஒளிக்கீற்று. அது ஒருநாள் நிச்சயம் பளீர் என்று விடியும்.

ஆரம்பத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் மற்றும் இஸ்லாமியக் கட்சிகள் என்று சிலர்தான் மதுவுக்கு எதிராக இயங்கிவந்தார்கள். ஆனால், இன்று மதுவுக்கு எதிரான போராட்டங்கள் பெருகியிருக்கின்றன. இயக்கமாகவும் தனிநபராகவும் தமிழகம் முழுவதும் போராடு கிறார்கள். எஸ்டிபிஐ கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், சேவா பாரதி, ஆர்எஸ்எஸ், தேமுதிக, பாஜக, இடதுசாரிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என மதுஒழிப்பு ஆதரவு பெருகியிருக்கிறது. ஆக, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் மதுவிலக்கு கோருகின்றன.

இன்னொரு பக்கம் நூற்றுக் கணக்கான அமைப்புகளை ஒருங்கிணைத்து மதுவுக்கு எதிரான நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறது, ‘மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கம்’. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இவர்களின் நடைப்பயணம் வரும் ஜனவரி 12 அன்று விவேகானந்தர் பிறந்த நாளில் சென்னை வந்தடைகிறது. அடைமழையில் பெருகும் ஆற்று வெள்ளம்போல ஊர் ஊராக இவர்களுடன் மக்கள் சேர்ந்து கொள்கிறார்கள். வயதான பெண்கள், பார்வையற்றவர் கள்கூட நடக்கிறார்கள்.

இந்தியத் தலைநகரில் தனிநபராகப் போராடுகிறார் சசிபெருமாள். மதுரை நந்தினிக்கு வாழ்நாள் லட்சியமே மதுவிலக்குதான். சேலத்தில் மருத்துவர் ஃப்ராங்கிளின் ஆசாத் காந்தி குடிநோயாளிகளின் கால்களில் விழுந்து மன்றாடுகிறார். இன்னும் இன்னும் இப்படி நமக்காக ஆனந்தி அம்மாள், செந்தமிழ்ச் செல்வி, இராணிவாய்க்கால் விசிறி சாமியார், குட்டம் சிவாஜி முத்துக்குமார், மதுரை தன்ராஜ் என மதுவுக்கு எதிராகக் கிளம்பியவர்களின் பட்டியல் நீள்கிறது. நம்பிக்கை பெருகுகிறது!

சமீபத்தில் திருப்பூரில் இருந்து பேசினார் ஒருவர். “சார், எனக்கு இன்னைக்கு இரண்டாவது பிறந்த நாள். உங்களோட வாழ்த்து தேவை” என்றார். குழப்பமாக இருந்தது. தொடர்ந்து அவரே பேசினார். “என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியலை. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே நாளில் உங்ககிட்ட பேசினேன். எப்படித் தெரியுமா? மூணாவது மாடியில் இருந்த நான், நடக்க முடியாம படிக்கட்டுல தவழ்ந்து வந்து ஒரு ரூபாய் காயின் போட்டுப் பேசினேன். என் நிலையைச் சொல்லி முகவரியும் கொடுத்தேன். 20 நிமிஷத்துல ஆள் வந்தாங்க. அந்த நிமிஷத்துலருந்து நான் குடிக்கலைங்க. இன்னையோட ரெண்டு வருஷம் ஆச்சு. இது எனக்கு மறுபிறவி. அதனாலதான் இரண்டாவது பிறந்த நாள்னு சொன்னேன்” என்றார். வாழ்த்துத் தெரிவித்தேன்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த குடிநோயாளி அவர். அவருக்கு, காதுக்குள் குரல் கேட்கும் ஆடிட்டோரி ஹாலுசினேஷனுடன், கண்களில் உருவம் தெரியும் விஷுவல் ஹாலுசினேஷனும் இருந்தது. ஆன்மிக நாட்டமும் இருந்ததால் கர்மவினை, நரகம், சொர்க்கம் என்றெல்லாம் குழப்பிக்கொண்டார். நரகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று கிணற்றுக்குள் குதித்திருக்கிறார். யோகாசனம் செய்துகொண்டே கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார். யாரோ தன்னைத் தாக்க வருகிறார்கள் என்று இரண்டு நாட்கள் தொடர்ந்து கத்தியுடன் அறைக் கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவரது தந்தை இயற்கையாக இறந்துபோக, தனது அம்மாதான் கொலை செய்ததாகவும், தான் அதைப் பார்த்ததாகவும் கூறினார். மனைவி, குழந் தைகள் பிரிந்து சென்றுவிட்டார்கள். தங்களுக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என்று நண்பர்கள்கூட அவரைப் பார்க்க வரவில்லை.

ஒருநாள் முழுதாக அரை பாட்டில் குடித்தவருக்குப் போதை போதவில்லை. கையில் காசும் இல்லை. கடைக்குச் சென்றவர் தனது செல்பேசியைக் கொடுத்துவிட்டு, இன்னொரு பாட்டில் வாங்கியிருக்கிறார். கூடவே, பக்கத்துக் கடையில் தின்பண்டம் கொஞ்சம். அறைக்கு வந்து காகிதத்தில் சுற்றிய தின்பண்டத்தைப் பிரித்தவரின் கண்களில் பட்டது ஒரு கட்டுரை. மதுவிலிருந்து மிக எளிதாக மீள முடியும் என்று சொன்ன கட்டுரை அது. நம்பிக்கை பிறந்திருக்கிறது. நடக்க முடியாமல் மூன்று மாடிப்படிகள் தவழ்ந்து வந்து கடைசியாகத் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுப் பேசினார். உலகெங்கும் இருக்கும் ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ அமைப்பிலிருந்து உடனடியாக அங்கு சென்றார் நல்ல மனிதர் ஒருவர்.

அப்படி மீண்டவர் இன்று மார்க்கெட்டிங் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். அவரிடம் 20 பேர் வேலை செய்கிறார்கள். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒற்றை ரூபாய் நாணயம் ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்கிறது எனில், நம்மால் ஏன் முடியாது? இன்னும் மிச்சமிருக்கிறது நம்பிக்கை!

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x