

கே.பி. முத்திரை என்பது என்ன? மரபுகளை மீறுவதுதான் கே.பி. முத்திரையா என்ற கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் சிகரம். “கே.பி. என்றால் மரபு மீறல்கள் வேண்டும் என்று மக்கள் எர்பார்க்கிறார்கள். யாருமே எடுத்துத் துணியாத பல கதைகளை எடுத்து இயக்கியிருக்கிறேன். ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ போன்றவை அந்த ரகம்தான்” என்று கூறியிருந்தார்.
திருவள்ளுவரின் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற திருக்குறள் திரையில் தோன்றுவது முதல் அந்தப் படத்தின் இறுதிக் காட்சி, இறுதி பிரேமில் காணப்படும் சில சொற்றொடர்கள் வரை விடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.
இவருக்கு முன்னும் பின்னும் பல இயக்குநர்கள் வந்துபோன போதிலும் இவரது வரவும் விட்டுச்சென்ற பதிவும் வித்தியாசமானவை. அனைத்துத் தரப்பினரையும், அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் பாணி இவரது இயக்கத்தில் காணப்படும். சமுதாயப் பிரச்சினைகளை முன்னுக்கு வைத்து அதனை அலசி ஆராய்ந்து, சில நிலைகளில் தீர்வுகளையும் தந்துள்ள இவரது சித்தரிப்புகளுக்குச் சில சலசலப்புகள் வந்தாலும், எதிர்த்தவர்களில் பலரே பின்னாளில் அவரது படங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
கதையின் கரு, திரைக்கதையின் தெளிவு, உரையாடலில் கூர்மை, நடிகர் தேர்வு, இயக்கம், காட்சிப் பின்னணி, தொழில்நுட்பம் என்று ஒவ்வொன்றுக்கும் கதையோடும் சம காலத்தோடும் ஐக்கியம் ஏற்படுத்தி, நெடுந்தூரப் பயணத்தில் தன் இலக்கை அடைந்த வெற்றிகரமான திரைப் பயணி இயக்குநர் சிகரம்.
நடிகைகளைக் காட்சிப்பொருள் போல வைத்துப் படங்கள் வெளியான நிலையை மாற்றி நடிகைகளுக்கு முக்கியமான பாத்திரங்களைக் கொடுத்துப் பெண்ணின் பெருமையைப் பேசவைத்த முதல் இயக்குநர். பெண்களை மையமாக வைத்து இவர் திரைப்படங்கள் எடுத்த அளவு வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணினத்தையும் பெண்ணியத்தையும் நேசித்த இயக்குநர் என்ற வகையில் திரை வரலாற்றில் கே.பி. தனித்து நிற்கிறார்.
மன உணர்வுகளைக் கற்பனை மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் எடுத்துவைப்பதில் அவருக்கு நிகர் அவரே. பொய், ரெட்டச்சுழி, உத்தம வில்லன் உட்பட சில படங்களில் நடித்தபோதிலும் நடிப்பை விட இயக்கத்தை அதிகம் நேசித்த கே.பி. பச்சைக் களிமண்ணாகத் தன்னிடம் வந்த பலரை புகழ்பெற்ற கலைஞர்களாக மாற்றிக் காட்டிய திரைச் சிற்பி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மறைந்த இயக்குநர் சிகரம் கே.பி.யை நினைவுகூறும் விதமாக நாளை முதல் படமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் மாலை 7.00 காட்சியாக 'சிந்துபைரவி' திரையிடப்பட உள்ளது.