

> ஜன.10 - மாலை 4.00 மணி - ரஷ்ய கலாச்சார மையம்
வித்தியாசமான இயல்பும் போக்கும் கொண்ட குழந்தைகள், முறைசார் கல்வியும் கட்டுப்பாடுகளும் கொண்ட பள்ளிக்கூடங்களில் தங்களைப் பொருத்திக்கொள்ளத் திணறுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றிப் பேசுகிறது பாண்டிராஜின் 'பசங்க 2'.
கவின், நயனா இரண்டு சுட்டிகளும் துறுதுறுவென்று இருக்கிறார்கள். கவி னுக்கு நடனம் என்றால் பிடிக்கும். தேஜஸ் வினிக்குப் புனைவுலகில் சஞ்சரிக்கப் பிடிக்கும். யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே பின்பற்றாமல் கேள்விகள் கேட்பது இவர்கள் பழக்கம். பள்ளிக்கூடங்களின் முறைசார்ந்த, கட்டுப்பாடு மிகுந்த கற்பித்தல் இவர்களுக்கு சரிவரவில்லை. பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்கள் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோரைக் கூப்பிட்டுப் புகார் செய்கின்றன. பள்ளிக்கூடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது. இதனால் கடுப்பாகும் பெற்றோர்கள் எடுக்கும் முடிவு குழந்தைகளை மேலும் பாதிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பது மீதிக் கதை.
குழந்தைகள் தொடர்பான பல பிரச்சினைகளில் அடிப்படைக் கோளாறு பெரியவர்களிடம்தான் இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது இத்திரைப்படம். கற்றல் குறைபாடுகள், அதீத சுறுசுறுப்பு முதலானவற்றைக் குறைகளாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவற்றை எப்படிக் கையாளலாம் எனபதையும் படம் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சம்பந்தமான சமூகத்தின் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான வழிமுறைகளின் மீது படம் கவனம் செலுத்துகிறது.
பள்ளிக்கூடங்கள் நடத்தப்படும் விதம், குழந்தைகள் தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் நிலவும் பணத்தாசை, குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்படும் முறை, அவர்களை எடைபோடுவதில் உள்ள அடிப்படையான பிழைகள் எனப் பல விஷயங்களைக் கையாள்கிறது இந்தப் படம். பெரும்பாலான காட்சிகள் குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் விதத்தில் அமைந்தாலும் இந்தப் படம் பெரியவர்களுக்கான பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புத் தருவதுதான் முக்கியமே தவிர, சிலருக்கு மட்டும் பரிசளிப்பது அல்ல என்பதைச் சொல் வதோடு முடியும் படம் பெரியவர்களுக்குப் பல பாடங்களைச் சொல்கிறது.
குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமுமாகக் காட்டியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குழந்தைகளின் உலகம் அதன் இயல்போடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆவணப்பட நெடி தூக்கலாக இருந்தாலும் குழந்தைகளுக்கான ரசனையையும் பெரியவர்களுக்கான செய்தியையும் சம விகிதத்தில் கலந்த விதத்தில் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறது 'பசங்க 2'.
***
ஜன.10 - மாலை 6.30 மணி - ரஷ்ய கலாச்சார மையம்
அறிமுக இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'நில் பத்தி சன்னாட்டா' என்ற இந்தி படத்தின் ரீமேக் 'அம்மா கணக்கு'. தமிழிலும் அஷ்வினியே இயக்கியிருக்கிறார்.
வீட்டு வேலைக்காரியாக இருக்கும் சாந்தியின் (அமலா பால்) கனவாக அவளுடைய மகள் அபி என்கிற அபிநயா (யுவஸ்ரீ) இருக்கிறாள். அவளை எப்படியாவது படிக்கவைத்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுகிறாள். காலையில் டாக்டர் நந்தினி (ரேவதி) வீட்டில் வேலைபார்க்கும் சாந்தி, நான்கு இடங்களில் வேலைபார்த்து அபியைப் படிக்கவைக்கப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறாள்.
பத்தாவது படிக்கும் அபிக்கோ படிப்பில் சுத்தமாக ஆர்வமில்லை. எப்போதும் டிவி, ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருக்கிறாள். தன் மகளின் பொறுப்பற்றதனத்தைப் பற்றி தினமும் தன் முதலாளியம்மா நந்தினியிடம் புலம்புகிறாள். ஒரு கட்டத்தில், அபியை வழிக்குக் கொண்டுவர அவள் அம்மா அதிரடியாக ஒரு முடிவை எடுக்கிறாள். அந்த முயற்சி வெற்றிபெற்றதா, அம்மாவின் கனவை அபி புரிந்துகொள்கிறாளா இல்லையா என்பதுதான் 'அம்மா கணக்கு'.
வாழ்க்கையை மாற்றும் சக்தி கல்விக்கு இருக்கிறது என்ற செய்தியை வெகுஜன மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷ்வினி. அந்த முயற்சி பாராட்டுக்குரியது.