Last Updated : 06 Apr, 2017 11:05 AM

 

Published : 06 Apr 2017 11:05 AM
Last Updated : 06 Apr 2017 11:05 AM

நான் நலமுடன் இருக்கிறேன்: ஃபேஸ்புக்கில் எஸ்பிபி விளக்கம்

'எனது பாஸ்போர்ட் திரும்பக் கிடைத்துவிட்டது. நான் நலமுடன் இருக்கிறேன்' என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தவிப்பு என செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

பாடகராக 50 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் இசை கச்சேரி நடத்தி வருகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்நிகழ்ச்சியை அவருடைய மகன் எஸ்.பி.சரண் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், ரொக்கம் உள்ளிட்டவை திருடு போய்விட்டதாக செய்திகள் வெளியாகின. தனது பாஸ்போர்ட் தொலைந்த தகவலை உடனடியாக அவர் இந்திய தூதரகத்தில் தெரிவிக்க, அவர்கள் மாற்று பாஸ்போர்ட் அளித்தனர்.

தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியிருப்பதாவது, "வணக்கம். நான் உங்களது எஸ்.பி.பி. எனது பாஸ்போர்ட் மற்றும் பிற உடமைகள் பறிபோனது தொடர்பாக நான் பேஸ்புக்கில் பதிவிட்ட பின்னர் எனது ரசிகர்கள் பெரும் வருத்தத்துக்கு ஆளாகி இருக்கின்றனர் எனத் தெரிந்து கொண்டேன். இதுதொடர்பாக ஊடகங்களில் பல செய்திகள் வருகின்றன. நான் அமெரிக்காவில் தவிப்பதாக செய்தி பரவுகிறது. நான் நலமாகவே இருக்கிறேன். எனது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் மூலம் திரும்பப்பெற்றேன். 9 நிகழ்ச்சிகள் இதுவரை சிறப்பாக முடிந்திருக்கின்றன. எஞ்சியுள்ள நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். நான் எதையும் இழக்கவில்லை. நான் உங்கள் அனைவரது அன்பையும் பெற்றிருக்கிறேன். எனவே நீங்கள் யாரும் குழம்ப வேண்டாம். எங்களுக்கு எந்த கெடுபிடியும் இல்லை. உங்கள் எஸ்பிபி உங்கள் அனைவரது ஆசீர்வாதத்தில் நலமுடன் இருக்கிறார். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி " என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: