Last Updated : 06 Mar, 2017 01:12 PM

 

Published : 06 Mar 2017 01:12 PM
Last Updated : 06 Mar 2017 01:12 PM

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக போட்டியிடுவது ஏன்?- விஷால் விளக்கம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது ஏன் என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ளது. இதில் விஷால் தலைமையில் போட்டியிடவுள்ள அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அச்சந்திப்பில் விஷால் பேசியதாவது, "பொதுவாகவே தமிழ் திரையுலகில் நிறைய சங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் தயாரிப்பாளர் சங்கம் மட்டும் நன்றாக இருந்தால் ஒட்டுமொத்த திரையுலகமே நன்றாக இருந்திருக்கும்.

நான் ஏன் தலைவராக போட்டியிடுகிறேன் என்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் நலனுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை என்பது.

தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். அவர்கள் நன்றாக இருந்தால்தான் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்.

இரண்டாவது காரணம் என் கண்முன்னே எனது தந்தைக்கு நிகழ்ந்த அவலம்.

நான் பள்ளியில் படிக்கும் போது, 'ஐ லவ் இந்தியா' படம் வெளியாக வேண்டும் என்பதற்காக என் தந்தை ஒருவரிடம் பிச்சையெடுப்பது போல் கெஞ்சுவதை நான் நேரில் பார்த்தேன். "நான் செய்த தவறு இப்படத்தை தயாரித்தது மட்டும் தான், எப்படியாவது வெளியிட உதவுங்கள்'' என்று என் அப்பா அந்த நபரிடம் கெஞ்சினார்.

இவற்றைத் தவிர, என்னுடைய அணியின் ஆதங்கம், மற்றும் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாவற்றையும் முன்வைத்தும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

என் தந்தைக்கு நேர்ந்த அவலம், இனிமேல் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நேராது.

நடிகர் சங்கத்தில் நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். கட்டிடப் பணிகளும் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.

இவருடைய அணியில் தலைவராக விஷால், துணைத் தலைவர்களாக பிரகாஷ்ராஜ் மற்றும் கவுதம் மேனன், கவுரவ செயலாளர்களாக மிஷ்கின் மற்றும் ஞானவேல்ராஜா, பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 15 பேர் போட்டியிடவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x