Published : 04 Jan 2017 19:40 pm

Updated : 16 Jun 2017 11:41 am

 

Published : 04 Jan 2017 07:40 PM
Last Updated : 16 Jun 2017 11:41 AM

சென்னை திரைப்பட விழா: ஜன.5-ல் என்ன படம் பார்க்கலாம்?

5

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.5) கண்டு ரசிக்கத்தக்க படங்கள் - சில பரிந்துரைகள்:

ஐனாக்ஸ் 2 | மதியம் 12.15 மணி | LE CIEL FLAMAD / FLEMIISH HEAVEN | DIR: PETER MONSAERT | BELGIUM | 2016 | 108'


மான்சாயெர்ட்டின் 2-வது திரைப்படமான இதில் இரட்டைக்கதைகள் பிணைக்கப்படுகின்றன. தனது தாயார் மோனிக்குடன் சேர்ந்து பிளெமிஷ் - பிரெஞ்சு எல்லையில் பாலியல் தொழில் விடுதி நடத்தி வருகிறார் சில்வி, இந்த விடுதி வீழ்ச்சியடைந்து வரும் சூழல். 6 வயது சிறுமி எலைன் தனது தாய் செய்து வரும் பாலியல் தொழில் குறித்து அறியாமல் வளர்க்கப்படுகிறாள். ஆனால் திடீரென எலைனுக்கும் ஏற்படுகிறது ஒரு பயங்கரம், அதனைச் சுற்றி எழும் உறவு, உணர்ச்சிச் சிக்கல்களே இத்திரைப்படத்தின் கதைக்களம்.

ரஷ்ய கலாச்சார மையம் | காலை 9.30 மணி | DIKCHOW BANAT PALLAX | DIR: SANJIB SABHAPANDIT | ASSAMESE | 2016 | 100'

சுதந்திரப் போராட்ட வீரரின் முதுமை காலத்தை இப்படம் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் பேரரசை எதிர்த்ததால் சொந்த மாவட்டத்திலிருந்தே வெளியேற்றப்படடவர் அவர். அதனால் அலைந்து திரிந்தவர் நாகாலாந்து மலைப்பிரதேசத்தை வந்தடைகிறார். அங்கு உள்ளூர் பெண்ணை சந்திக்கிறார். அவளுடன் காதலும் மலர்கிறது. அப்பெண் அவருக்கு அன்றாடம் செலவுக்குத் தேவைப்படும் நாணயங்களைக் கொடுத்து அவரைக் காக்கிறாள். சில பத்தாண்டுகள் அவர்கள் பிரியவும் வேண்டியிருந்தது. இப்படம் 2000-வது ஆண்டில்தான் நடக்கிறது. அப்போது அவருக்கு அப்பெண்ணைப் பற்றிய நினைவுகள் திரும்பவும் வர அவளை போய் சந்திக்கவேண்டும் நாணயங்களை அவளுக்குத் தரவேண்டும் என்று நாகா மலைக்கு செல்கிறார்.

கேஸினோ | மதியம் 2.30 மணி | CLASH | DIR: MOHAMED DIAB | EGYPT | 2016 | 110'

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் உறுப்பினரான மொஹமத் மோர்சி அந்நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து 2013-ல் ஜூலை 3 அன்று அகற்றப்பட்டதை எதிர்த்து மக்கள் வெள்ளமென திரண்டனர். போலீஸார் அங்கு உருவான கலகத்தை அடக்குகின்றனர். எகிப்து அரசியலில் தொடர்ந்து பிரச்சனையாகிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கேள்விப்படுத்தும் இத்திரைப்படம் ஒரு துணிச்சலான முயற்சி என்று இயக்குநர் மொஹமத் தீயெப்புக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்த படம். 2016-ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வான இப்படம் ஆஸ்கருக்கு நுழையும் தகுதியைப் பெற்றது.

ரஷ்ய கலாச்சார மையம் | பிற்பகல் 2.00 மணி | NATSAMRAT | DIR: MAHESH MANJREKAR | MARATHI | 2015 | 165'

ஒரு காலத்தில் சேக்‌ஷ்பியரின் நாடகங்களை நடித்த மிகப்பெரிய மேடைக் கலைஞனாகத் திகழ்ந்த கண்பத் பேல்வாக்கர் எனும் ஓய்பெற்ற வாழ்க்கையை கூறுகிறது நாட்சாம்ராட் திரைப்படம். அவர் தன் மகன்களுக்காக தான் சம்பாதித்த சொத்துக்களை பிரித்துக்கொடுக்க முடிவு செய்கிறார். இறுதியில் பிள்ளைகள் அவரை ஏமாற்றிவிட, தானும் தன் மனைவியுமாக வசிக்க வீடும் இன்றி முதியோர் இல்லத்துக்க்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

ரஷ்ய கலாச்சார மையம் | பிற்பகல் 4.00 மணி | UTOPIA | DIR: HASSAN NAZAR | AFGHANISTAN | 2015 | 90'

ஹசன் நசீர் இயக்கிய உடோபியா என்ற திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தனிமையின் 3 கதைகளைப் பின்னிப் பிணைக்கிறது. போர்ச்சூழல் நிறைந்த ஆப்கானிஸ்தானில் வாழும் பெண் ஜேனன் என்பாரது கணவர் பேசவும், நகரவும் முடியாத அளவுக்கு காயமடைந்த நபர். ஜேனன் தனக்கு குழந்தை வேண்டுமென்ற ஆசையில் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு செயற்கைமுறை கருத்தரிப்பு மருத்துவமனையை அணுகுகிறார். அங்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் வில்லியம் என்பவரைச் சந்திக்கிறார். வில்லியம் கருத்தரிப்புக்கான உண்மையாக விந்து அளிப்பவருக்கு பதிலாக தனது விந்துவை அளிக்கிறார். ராகுல் என்ற ஒரு டாக்ஸி ஓட்டுநரும் இந்தக் கதையில் இணைகிறார். இவர்கள் மூவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி ஒன்றுடன் ஒன்று பிணைகிறது என்பதை விவரிக்கும் அழகான டிராமா வகை படமே உடோபியா.

ஆர்.கே.வி. | பகல் 12.00 மணி | KON TIKI | DIR: JOACHIM RONNING & ESPEN SANDBERG | NORWAY | 2012 | 120'

1947-ல் ஓர் இளம் நார்வே சாதனையாளன் தோர் ஹையெர்தால் தன்னுடைய படகிலேயே பிசிபிக் பெருங்கடலை 4,300 கடல்மைல்கள் தூரம் கடந்தான். தோர் தன்னுடைய மனைவி மார்கியூஸ் உடன் கிழக்கில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் தென்கடல் தீவுகளில் தென் அமெரிக்க பழங்குடியினர் வாழக்கூடும் என்று எண்ணுகிறான். இருந்தபோதிலும் நீரில் நீந்திச்செல்ல அவனுக்கிருந்த பயந்தால் தயங்கிவந்த தோர் பின்னர் எப்படியாவது தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கவேண்டுமென கடல் பயணத்தை மேற்கொள்கிறான். புயல் மழைக்கிடையில் அச்சம் தரும் சுறாக்களுக்கிடையே அந்தப் பயணமே பெரும் சாகசமாக அமைகிறது. 2013-ல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆர்.கே.வி. | பிற்பகல் 2.30 மணி | POST TENEBRAS | DIR: CARLOS REYGADAS | USA | 2012 | 120'

இப்படம் விசித்திரமான கதையமைப்பைக் கொண்டுள்ளது. ஜான் மற்றும் அவரது மனைவி நடாலியா இருவருக்கும் இரு குழந்தைகள். நகர்ப்புற வாழ்க்கை ஏனோ சலித்துப்போக கிராமம் ஒன்றுக்கு சென்று சிலகாலம் வாழலாம் என முடிவு செய்கிறார்கள். அதன்படி மெக்ஸிகோ கிராமம் ஒன்றிற்கு வருகிறார்கள். கிராமத்து வீடு என்றாலும் ஆடம்பரமாக இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் கிராம வாழ்க்கையை அவர்கள் அனுபவிக்கிறார்கள். எனினும் இந்த வாழ்க்கை அவர்களது ரசனையிலேயே மாற்றம் கொண்டுவரத் தொடங்ககிறது. குழந்தைகளுக்கு முன்பு அனுபவித்த வாழ்க்கைக்கும் இங்கு அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களுக்கும் நிறைய வித்தியாசம் ஏற்படுகிறது. இங்கு தடையின்றி எங்கும் செல்லும் மகிழ்ச்சியை அவர்கள் காண்கிறார்கள்... அதேநேரம் ஏதோ ஒரு மர்மத்தை ஒரு மர்மத்தையும் அவர்கள் காண நேரிடுகிறது.

ஐனாக்ஸ் 3 | பகல் 12.00 மணி | DEAREST / QIN AI DE | DIR: PETER CHAN | HONGKONG | 2014 | 128'

டியானும் அவரது முன்னாள் மனைவியும் தங்கள் மகன் காணாமல் போனதைத் தேடத் தொடங்கும்போதுதான் தங்கள் சாதாரண வாழ்க்கையை முழுமையாக தூக்கியெறியப்பட்டதை உணர்கிறார்கள். குற்ற உணர்ச்சியோடு எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. பொறுமையைக் கைவிடாமல் தேடலைத் தொடர்கிறார்கள். ஒருநாள் ஹான் டெஷாங்கும் அவர் மனைவியும் குழந்தையைத் தொலைத்த இன்னொரு தம்பதியை எதிர்கொள்கின்றனர். ஹான் எதிர்கொண்ட டியான் மற்றும் லூ ஆகியோரை குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் உதவிக்குழுக்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். ஹானின் வழிநடத்தலில் டியானும் லூவும் வடக்குப் பகுதியின் தொலைதூர கிராமம் ஒன்றிற்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் தங்கள் குழந்தை பெங்கைக் காண்கின்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து நடக்கின்றன சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையின் ரகசியங்கள்வெளிப்படுவனவாகவே அமைகின்றன.

பெலாஸோ | காலை 10.00 மணி | KHOSHKSALI VA DOROUGH / DOUGHT & LIE | DIR: PEDRAM ALIZADEH | IRAN | 2016 | 94'

ஒமித் என்பவரின் பிறந்தநாள். அவரது மனைவி ஆலா மற்றும் ஆலாவின் சகோதரனும் ஒமித்தின் சிறந்த நண்பனுமான ஆராஷ்ஷும் கொண்டாடுகிறார்கள். மற்றும் அவனது தோழியும் ஒமித்தின் முதல்மனைவியுமான மித்ராவும் அழைக்கப்படுகிறார்கள். மித்ரா அப்போதுதான் கனடா நாட்டிலிருந்து திரும்பியிருந்தாள். அவனுடன் முக்கியமாக ஏதோ சொல்லவும் எண்ணியிருந்தாள். ஒமித் ஒரு வழக்கறிஞர், அவளை தனது அலுவலகத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்கிறான். ஆனால் ஆலாவுக்கு இதனால் உருவான கோபம் இன்னும் தணியவில்லை. சற்றே பின்னோக்கி செல்லும் ஒமித்தின் பழைய நினைவுகளில் விவாகரத்து செய்வதற்கு மித்ராவின் விரும்பத்தகாத நடவடிக்கைகளே காரணமாக அமைந்ததையும் யோசிக்கிறான். இறுதியாக ஒமித் ஒரு பெரிய முடிவெடுக்கிறான். ஈரானின் புகழ்பெற்ற ஒரு நாடகத்தை இத்திரைப்படம் தழுவியுள்ளது.


சென்னை சர்வதேச திரைப்பட விழாஉலக சினிமா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author